[X] Close

கொரோனா 'சிறை'யிலிருந்து மெல்ல விடுபடும் வெளிநாட்டு மக்கள் - ஒரு பார்வை

உலகம்,வீடியோ ஸ்டோரி

இ‌‌‌ந்தியாவில் கொரோனா 2-ஆவது அலையால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் பல வெளிநாடுகள் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளன.


Advertisement

முகத்தை இறுக்கி மூச்சை முட்டவைக்கும் முகக்கவசம், வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டிய நிலை என பல வழிகளில் மனிதர்களை சிறைப்படுத்தியுள்ளது கண்ணுக்குத் தெரியாத கொரோனா. தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளில் இருந்து விலகி எப்போது பழைய நிலைக்கு செல்வோம் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. வெளிநாடுகள் பலவற்றில் மக்களின் இந்த விருப்பம் இப்போது நிறைவேறத் தொடங்கியுள்ளது. பல நாடுகள் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்துவிட்டன.

சவுதி அரேபியாவிலிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு செல்ல 14 மாதங்களுக்குபின் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரு நாட்டு எல்லையில் கார்களில் வரிசையில் காத்திருப்பவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கடந்த 6 மாதத்திற்குள் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் உள்ளிட்டோர் அண்டை நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல சவுதி அரேபிய தலைநகர் ரியாத்திலுள்ள விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Advertisement

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது பெரிதும் மீண்டு விட்ட பிரிட்டனும் 4 மாதங்களுக்கு பின் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இங்கிலாந்து மக்கள் இனி தலைநகர் லண்டனுக்கு தயக்கமின்றி வரலாம் என கூறியுள்ளார் மேயர் சாதிக் கான். 30 பேர் வரை பொது இடங்களில் கூடலாம், ஓட்டல்களை திறக்கலாம், வெளிநாடுகளுக்கு தடையின்றி பறக்கலாம் என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டாலும் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இத்தாலியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அழகு கொஞ்சும் வெனிஸ் நகரம் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐரோப்பா, இஸ்ரேலில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த எழில் கொஞ்சும் நகரத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நம் நாட்டிலும் கொரோனா தொற்று மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில் இங்கும் இயல்பு நிலை விரைவில் ஏற்பட தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.


Advertisement

Advertisement
[X] Close