Published : 26,Jul 2017 01:59 PM
‘செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது’

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆளுகைக் கூட்டம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் இருந்து திருவாரூருக்கு மாற்றம் செய்யக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. எக்காரணத்தை கொண்டும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தன்னாட்சி அமைப்பை இழக்கக் கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கெனப் புதுப்புதுத் திட்டங்களை செயல்படுத்தி செவ்வியல் தமிழ் இலக்கிய ஆய்வுகளை மேலும் செம்மைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆளுகை கூட்டத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரகாசம், தமிழ்வளர்ச்சி துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.