[X] Close >

வடசென்னை to ஒலிம்பிக் via இத்தாலி... வாள்வீச்சு சாதனையாளர் பவானி தேவியின் அசாத்திய பயணம்!

What-fencer-Bhavani-Devi-qualifying-for-Olympics-means-for-Tami-Nadu-and-India

’ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன் என்று அறிவிப்பு வந்த சில நிமிடங்களை வாழ்வில் மறக்கவே முடியாது. கண்ணீர் வழிந்தோடியது’ என்று அந்தத் தருணத்தைப் பகிர்கிறார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இந்திய வாள்வீச்சு வீரர்கள் யாரும் இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதில்லை என்ற வரலாறை மாற்றி எழுதி இருக்கிறார் தமிழக வீராங்கனை பவானி தேவியின் இந்தப் பயணம் அசாத்தியமானது.


Advertisement

ஹங்கேரியின் தலைநகரான புதாபெஸ்டில் நடைபெற்ற வாள்வீச்சு உலகக் கோப்பை தொடரில் ஹங்கேரியை வீழ்த்தி தென்கொரியா முதல் 4 இடங்களுக்கு முன்னேறியது. அந்த வகையில், ரேங்கிங் அடிப்படையில் முதல் முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் தொடரின் வாள்வீச்சு போட்டியில் களம் இறங்கவுள்ளார்.

வடசென்னை - பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பவானி தேவி. பள்ளி பயின்ற காலத்தில் தனது 10-வது வயதில், ஏதேனும் ஒரு விளையாட்டை தேர்வு செய்ய சொன்னபோது வாள்வீச்சை தேர்வு செய்கிறார். தேர்வு செய்தவுடன் அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி: உங்கள் தந்தையின் ஆண்டு வருமானம் என்ன?


Advertisement

அதற்கு காரணம், வாள்வீச்சு விளையாட்டில் பயன்படுத்தும் உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. பவானி தேவியை போன்ற நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அதை நினைத்துப் பார்க்க முடியாது. அதனால், பொய்யாக ஆண்டு வருமானத்தை சற்றே அதிகரித்து கூறி பயிற்சியை தொடங்கினார். பெரும்பாலும் தொடக்க காலங்களில் மூங்கில் களியை கொண்டே பயிற்சி மேற்கொண்ட பவானி போட்டிகளின்போது மட்டுமே சாப்ரே ப்ளேடை பயன்படுத்தினார்.

image

வாள்வீச்சு பொருத்த அளவில் Foil, Epee, sabre ஆகிய 3 விதமாக வாள் பயன்படுத்தப்படும். இதில் வேகமாக வாள்களை இயக்கும் சாப்ரே பிரிவே பவானியின் தேர்வு.


Advertisement

முதல் முறையாக வாளை கையில் எடுத்த பவானி 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற சப் ஜூனியர் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கத்தை வென்றார்.

ஆனால், முதல் சர்வதேச தொடர் வேறு விதமாக அமைந்தது. துருக்கியில் நடைபெற்ற தொடரில் மூன்று நிமிடம் தாமதமாக வந்ததற்காக, பிளாக் கார்டு காண்பிக்கப்பட்டு தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார் பவானி தேவி. அதன் பிறகு, பல தோல்விகளை கண்ட பவானி தேவி, அதனால் துவண்டு போகாமல், எப்படியாவது வாள்வீச்சில் வெற்றியை நாட்ட வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்.

தமிழகத்தில் முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாததால், பெங்களூரு, கேரளா சென்று பயிற்சி மேற்கொண்டார். முதல் 10 ஆண்டு காலம் குடும்ப பொருளாதார சூழல், பெண்பிள்ளைகளை தனியாக அனுப்புவதா போன்ற அக்கம் பக்கத்து வீட்டாரின் விமர்சனங்கள், வாள்வீச்சு குறித்து பெரிதாக விழிப்புணர்வு இல்லாதோரின் கேலிகள் என அனைத்தும் பவானி தேவியை இரும்பாக்கியது.

9 முறை இந்தியாவின் தேசிய சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ள பவானி, 2009-ஆம் ஆண்டு முதல் முறையாக காமன்வெல்த் தொடரில் வெண்கலம் வென்று சர்வதேச அரங்கில் தனது கணக்கை தொடங்கினார். அதன் பிறகு 2010 சர்வதேச ஓபன், 2012 காமன்வெல்த் தொடர், 2014 ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் வெற்றி என வாள்வீச்சு அரங்கில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக வலம் வர தொடங்கினார்.

image

ஏனினும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பவானி தேவியால் தகுதி பெற முடியாமல் போனது. அதன் பிறகு தீவிர தொழில்முறை பயிற்சி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக் சாத்தியம் என்பதை உணர்ந்த பவானி, குடும்பத்தை பிரிந்து இத்தாலியில் தங்கி பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினார். இத்தாலி பயிற்சியாளர் நிக்கோலா ஜெனாட்டி கீழ் தனது ஆட்ட நுணுக்கங்களையும், மனோதிடத்தையும் பெருக்கினார்.

அதன் காரணமாக முதல்முறையாக வாள் வீச்சில் இந்திய வீராங்கனையான பவானிதேவி 2017-ம் ஆண்டு சாட்டிலைட் உலக கோப்பை, 2018ம் ஆண்டு காமன்வெல்த் தொடர் ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

சிறுவயது முதலே விளையாட்டு பவானி தேவிக்கு பெரிய ஊக்கம் அளித்த தனது தந்தையின் இழப்பு 2019-ஆம் ஆண்டு பவானி தேவியை துயரத்தில் ஆழ்த்தியது. ஆனால், தொடர்ந்து அவரின் தாயார் பவானி தேவியின் கனவிற்கு ஊக்கம் அளித்து வந்தார். அதுவேதான் பவானி தேவியை தனது வாழ்நாள் கனவான ஒலிம்பிக்கிற்கு இன்று நகர்த்தி அழைத்துச் சென்றுள்ளது.

ஒலிம்பிக் தகுதி பெற்ற கையோடு 9-வது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் வென்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ள பவானி தேவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

கனவை எட்டி பிடித்துவிட்டு தமிழகம் வந்துள்ளது எப்படி இருக்கிறது என்று அவரிடம் உரையாடியபோது, "இது பல வருட முயற்சி, என்னுடைய முயற்சி மட்டும் இல்லை, என் குடும்பத்தினர் அனைவரின் முயற்சி - இது அனைவருக்குமான வெற்றி" என பதிலளித்தார்.

ஒலிம்பிக் கனவு நிறைவேறிவிட்டாலும், இது முதல் படி மட்டுமே; இன்னும் கடுமையாக உழைத்து வெற்றிகளை கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

2004-ல் முதல் முறையாக பயிற்சியை தொடங்கி, இன்று இந்த நிலை வரை முன்னேறியுள்ள பயணத்தை திரும்பி பார்க்கும்போது 15 ஆண்டுகால நெடுந்தூர பயணம், மிகக் கடினமான பயணமாகவே இருந்திருக்கிறது. தொடக்க காலகட்டங்கள் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தன. ஏனென்றால் இந்தியாவில் வாள்சண்டை என்ற ஒரு விளையாட்டு பிரபலமடையாமல் இருந்தது. ஆனால் தொடக்க காலக் கட்டத்தில் போட்ட உழைப்பிற்கு பயனாக பல உதவிகள் கிடைத்தன. அது என்னை மேலும் வாள்சண்டை விளையாட்டில் வெற்றி பெற ஊக்குவித்தது" என்றார்.

image

வாழ்வில் மறக்கவே முடியாத தருணம் குறித்து கேட்டதற்கு, "ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன் என்ற அறிவிப்பு வந்த சில நிமிடங்களை மறக்கவே முடியாது, கண்ணீர் வழிந்தோடியது" என்றார் பவானி.

"கொரோனா ஊரடங்கு காலம் என்பது சில சவால்களை கொடுத்தாலும், காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர எனக்கு உதவிகரமாக இருந்தது.

இத்தாலியில் பயிற்சி மேற்கொள்ளும்போது மற்ற வீராங்கனைகளை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பை கொடுத்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய இத்தாலி பயிற்சியாளர் நிக்கோலாவிற்கு நன்றி. முதன்முதலில் ஒலிம்பிக் செல்ல வேண்டும் என்று எனது ஆசையை தெரிவித்தபோது, அவர் ஆச்சிரியபட்டார். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் என்று ஆச்சரியப்பட்டார். ஆனால், அதனை புரிந்து கொண்டு எனக்கு நம்பிக்கை அளித்து பயிற்சி வழங்கினார்" என்றார் பவானி.

- அருண்மொழிவர்மன்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close