[X] Close >

ரஜினி எப்போதும் ஓர் ஆகச் சிறந்த நடிகர்தான்... அந்த ஏழு காரணங்கள்!

Rajini-has-always-been-a-great-actor-those-seven-reasons

அது ஒரு தீபாவளி நாள். என் ஊர் விருதுநகர். அப்சரா தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டத்தின் நடுவில் ஒரு கால்சட்டைப் பையனாக பிதுங்கிக்கொண்டு நிற்கிறேன். வியர்வை அத்தர் வாசமாக மூச்சுக்காற்றில் பரவுகிறது. எனக்கு அதுதான் முதல் நாள் முதல் படம் பார்க்கும் அனுபவம். அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்..!


Advertisement

image


Advertisement

சைக்கிள் டயர்களில் செய்யப்பட்ட தட்டிகளில் தியேட்டர் முகப்பு முழுக்க என் தலைவன் சிரித்துக் கொண்டிருக்கிறான். என் தலைவன் வரும்போது கிழித்து பறக்க விடுவதற்காக பழைய லாட்டரி சீட்டுகள் பண்டல் பண்டலாய்.

டிக்கட் தரும் கவுன்டரின் அந்த சின்ன துவாரத்தின்மீது அத்தனை கண்களும் வரிசை கட்டி நிற்கிறது."ஹே.... ஹே... எப்போயா டிக்கட் தருவீங்க" என்று ஏதோ ஓர் அண்ணன் அலம்பலை ஆரம்பித்துவைக்க, மொத்தக் கூட்டமும் அதை வழிமொழிந்தது.

ஆயிரம் வாலா சரவெடி திரி கிள்ளி தயாரானது. கையில் டிக்கெட் பெட்டியுடன் ஒரு கண்ணாடிக்கார அண்ணாச்சி வந்து கதவைத் திறந்ததும் விசில் பறக்க வெடித்து சிதறியது சரவெடி.


Advertisement

image

தீபாவளி புதுச் சட்டை கசங்க, முண்டியடித்து டிக்கட் வாங்கி நானும் உள்ளே ஓடுகிறேன்.

முன்னே ஓடினால்தான் சேர் கிடைக்கும் என ஓடி பால்கனி கம்பியில் கால் வைத்து ஏறும்போது சரியாக நான் கால் வைக்கும் இடத்தில் ஓர் அண்ணன் கை வைக்கிறார். நானும் கவனிக்காமல் மிதித்து விட்டேன்.

அவர் கையில் கட்டி இருந்த புது ஹெச்.எம்.டி. வாட்ச் உடைகிறது.

"ஐயையோ... சிக்குனா செத்தோம்டா" என்று ஓட முயற்சிக்கும்போது காலரில் கையை போட்டு பிடிச்சிட்டார் அந்த அண்ணன். திரும்பி பாத்தா ஆள் ஆஜானுபாகுவா ஆறு அடி இருக்கிறார். நல்ல முரட்டு மீசை!

எனக்கு கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு நிக்குது.

"ஏண்டா பாத்து போகவேணமா... வாட்ச்ல இருக்குற கண்ணாடி கால குத்திருந்தா இந்நேரம் நீ ஆஸ்பத்திரி போய் இருப்ப... தலைவன் படம் மிஸ் ஆகியிருக்கும்ல... பாத்து போடா"-ன்னு பாசம் பொங்கப் பேசுறார்.

image

அப்படி நான் பார்த்த படம் எஸ்.பி.முத்துராமன், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுத்த கடைசி படம்... 'பாண்டியன்'.

'பாண்டியன்' பெரிய வெற்றிப் படம் அல்ல. அதே தீபாவளிக்கு வந்த 'தேவர் மகன்' பெரிய ஹிட்.அதுதான் ரஜினி ஸ்பெஷல்.... வெற்றியோ, தோல்வியோ ரஜினி படம் தமிழ்நாட்டுக்கு தருகிற பரவசம் எப்போதும் தனிதான். அதன் காரணம், ரஜினி எனும் நடிகன் தன் கலைக்கு தருகிற அர்ப்பணிப்பு அபராமானது.

ரஜினியைப் போல நடிகன் தமிழ் சினிமாவில் அவருக்கு முன்னும் கிடையாது; சமகாலத்திலும் கிடையாது; இனியும் வரப் போவதில்லை.

ரஜினின்னா ஸ்டைல்... ரஜினி இமேஜுக்குள் சிக்கிக் கொண்ட நடிகர் என்கிற விமர்சனங்களைவிட, ரஜினி எனும் கலைஞனின் திறமைக்கு செய்யப்படும் துரோகம் வேறெதுவும் இல்லை.

எதிர்மறை பாத்திரமாய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதை ரசிக்கவும் கொண்டாடவும் வைத்த முதல் கலைஞன் ரஜினிதான்.

image

"சந்தைக்குப் போணும்... ஆத்தா வையும்... காசு குடு" என்கிற '16 வயதினிலே' கதை நாயகன் கமலின் வசனம் பேசப்படும் அளவுக்கு 'பத்த வெச்சிட்டியே பரட்டை' என்கிற வில்லனையொட்டிய வசனத்தையும் ரசிகர்களை இன்று வரை கொண்டாட வைத்ததுதான் ரஜினியின் ஆகப் பெரிய திறமை.

ரஜினி ஏன் இன்னமும் சூப்பர் ஸ்டார், ரஜினி ஏன் ஆகச் சிறந்த நடிகர் என்பதற்கு நான் தரும் காரணங்கள் இவைதான்...

1. கட்டிய மனைவியுடனான அந்தரங்க நிமிடங்களை போர்னோகிரபி செய்து விற்கும் கதாபாத்திரமாக 'காயத்ரி' படத்தில் நடித்த துணிச்சல்.

2. மாஸ் படங்களுக்கு நடுவே 'ஆறிலிருந்து அறுபது வரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'முள்ளும் மலரும்' என கனமான கதாபத்திரங்களை தன் தனித்துவமான ஸ்டைல்களை தவிர்த்து, அந்த பாத்திரமாக வாழ்ந்த அர்ப்பணிப்பு.

3. 'தில்லு முள்ளு' தொடங்கி தனக்கென ஒரு தனித்த காமெடி ஸ்டைலை உருவாக்கி, மாஸ் ஹீரோக்களின் நகைச்சுவைக்கு இலக்கணம் எழுதிய திறமை.

4. காதல் நாயகர்கள் கலராகத்தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி 'புதுக்கவிதை' போன்ற படங்களில் அவர் செய்த 'ஹிரோயிக் ரொமான்ஸ்'.

5. மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் இமேஜ் வந்த பிறகும் கதையின் நாயகனாக மட்டுமே தன்னை எண்ணிக்கொள்ளும் பணிவு. உதாரணமாக நாயக கதாபாத்திரத்தின் ஆண்மையை விவாதமாக்கும் காட்சிகளை ஒப்புக்கொண்டு கதைக்கு நியாயம் சேர்ப்பது என்பதுதான் ரஜினி எனும் நடிகன் தன் தொழிலுக்கு காட்டுகிற நேர்மை.

6. 'தளபதி' திரைப்படத்தில் தன் வாழ்வின் பிள்ளைக் கால கஷ்டங்களை, குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டே கதை சொல்கிற பாணியில் குரல் வழி மட்டுமே அவர் வாழ்வின் வழியை கடத்துவார்... அந்த அளவுக்கு வசன உச்சரிப்பில் எல்லா விதமான உணர்வுகளையும் கடைக்கோடி ரசிகனுக்கும் கடத்துகிற 'எக்ஸலன்ஸ்'.

7. பாரதிராஜா ஒருமுறை சொன்னார்... "எவன் ஒருவனால் கண்களால் காமத்தை கடத்த முடியுமோ. அவனே நல்ல நடிகன்" என்று.

இப்போது மீண்டும் பாருங்கள். சந்திரமுகி படத்தின் க்ளைமாக்ஸ் பாடலில், சந்திரமுகி கதாபாத்தின் இடையை நோக்கிய பார்வையை... அந்தக் கதாபாத்திரத்தின் காம எண்ணத்தின் கனத்தை நமக்குக் காட்டிவிடும்.

இப்படி நவரச உணர்வுகளையும் கண்ணில் காட்டும் அபாரமான கலைஞன் ரஜினி!

இதற்கெல்லாம் உச்சமாக "என்னுடைய சூப்பர் ஸ்டார் புகழுக்கும், என்னுடைய இத்தனை பெரிய உச்சத்திற்கும் காரணம் நான் அல்ல; என் இயக்குனர்களே" என்கிற உண்மையை சத்தமாக சொல்லும் தைரியம்.

ஒரே ஒரு சூரியன்தான்
ஒரே ஒரு சந்திரன்தான்
ஒரே ஒரு ரஜினிதான்!

- பாலா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close