[X] Close

டாஸ்மாக் மூடலால் மதுப்பிரியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது- செல்லப்பாண்டியன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவலால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட்டன. அதன்பிறகு, கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் தலைநகரான சென்னையில் மட்டும் நான்கு மாதங்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், 144 நாட்களுக்குப்பிறகு இன்று முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேசமயத்தில், ’கொரோனா சூழலில் டாஸ்மாக் திறப்பது சமூகத்திற்கும் வீட்டிற்கும்  கேடு’ என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதை வரவேற்றுள்ள தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம், ‘தெளிவாக’ பேசினார், 


Advertisement

கோரோனா சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தேவையா?

கொரோனாவுக்கும் டாஸ்மாக் திறப்புக்கும் சம்மந்தமில்லை. டாஸ்மாக்கில் மது விற்கும் ஊழியர்களுக்கு கொரோனா வந்திருக்கிறது. ஆனால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து மதுப்பிரியர்கள் யாருக்காவது கொரோனா வந்து ஏற்றிச் சென்றிருக்கிறார்களா? ஒருவரையும் சொல்ல முடியாது. அதேபோல், கொரோனா வந்து டாஸ்மாக் கடையை மூடிய சரித்திரம் இதுவரைக் கிடையாது. வருமானம் தரக்கூடிய கோயில்களைவிட அரசு டாஸ்மாக் திறக்கிறது என்றால் குடிமகன்கள்மேல் பற்றும் பாசமும் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அதனால்தான், இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். முதல்வர் அறிவிப்பு எங்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவைத்துள்ளது. எல்லோரும் மிகப்பெரிய சந்தோஷத்தில் உள்ளோம். சென்னை 16 சட்டமன்றத் தொகுதிகளும் 60 லட்சம் மக்களையும் உள்ளடக்கியது. அதில், மதுப்பிரியர்கள் 30 லட்சம் பேர் இருக்கிறோம். எங்களுக்காக டாஸ்மாக் கடைகளைத் திறந்து நெஞ்சில் பாலை வார்த்துள்ளார், அய்யா எடப்பாடி பழனிச்சாமி. உள்ளொன்று நினைத்து புறமொன்று பேசும் அரசியல்  தலைவர்கள்தான் இதனை எதிர்க்கிறார்கள். ஆனால், மதுப்பிரியர்கள் மீது, அவர்களுக்கு உள்ளுக்குள் தனிப்பிரியம் உண்டு. வெளியில் காண்பிப்பதில்லை.


Advertisement

image

காண்பிப்பதில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?

திமுக ஆட்சியிலும்தான் டாஸ்மாக்கை திறந்து வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம், மூடினார்களா? இல்லையே? அவர்களுக்கும், எங்கள் மீது பாசம் உள்ளது என்பது இதிலேயே தெரியவில்லையா?


Advertisement

கொரோனா சூழலில் மது குடிப்பதால் உடல்நலப் பாதிப்புகளோடு கொரோனாவும் பரவுமே? 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 144 நாட்கள் மூடப்பட்டது, இதுவே முதல்முறை. யானைகளுக்கு எப்படி புத்துணர்வு முகாமோ அப்படித்தான், நான்கு மாதங்களுக்கு மேலாக  வீட்டில் இருந்தோம். குடித்துக்கொண்டே இருந்ததால் பல மதுப்பிரியர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஊரடங்கால் 144 நாட்கள் மதுவை நிறுத்தி வைத்திருந்ததால் குழந்தைப் பாக்கியம் கிடைத்திருக்கிறது. பலர் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியோடு சொன்னார்கள். குடிக்காமல் இருந்து குடும்பத்துடன் நேரம் கழித்ததால், இந்த நல்ல விஷயங்கள் நடந்திருக்க்கிறது. அடுத்த தலைமுறைக்கு வாரிசையும் உருவாக்கிவிட்டோம். இந்த ஊரடங்கில் தந்தை ஆகும் வாய்ப்பை பெற்றிருக்கும் மதுப்பிரியர்களின் குழந்தைகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பிறப்பார்கள். அந்தக், குழந்தைகளுக்கு நாங்கள் அய்யா எடப்பாடி பழனிச்சாமி பெயரைத்தான் வைப்போம். ஏனென்றால், முதல்வர் எங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். மற்ற மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக்கை திறந்துவிட்டு சென்னையில் திறக்காமல் போனது, ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்ததுபோல் இருந்தது. அந்த, வருத்தம் எல்லாம் மதுப்பிரியர்கள் வாரிசு உருவாக்கியதில் போய்விட்டது.

image

தமிழகத்தில் மொத்தம் 61.4 சதவீதம் மதுப்பிரியரக்ள் இருக்கிறார்கள். அதில், 8 சதவீதம் பேர் பெண்கள். தற்போது, மதுப்பிரியைகளும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். முகக்கவசம் அணிந்து பாதுகாப்போடுதான் வாங்குவோம். ஆறடி இடைவெளியை கடைப்பிடிப்போம். டவுசர் மாடல் உள்ளாடைகளைத்தான் அணியச்சொல்லியிருக்கிறோம். மது குடித்தாலும் மானத்தோடு வாழவும் அறிவுறுத்தியிருக்கிறோம்.

image

கொரோனாவால் வேலை  இல்லாத சூழலில் மது வாங்குவதால் வீட்டில் வறுமை ஏற்படுமே?

இத்தனைநாள் டாஸ்மாக் மூடியிருந்தாலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வாங்கிவந்து 1500, 2000 ரூபாய்க்கு எல்லாம் விற்றார்கள். அப்படி கள்ளத்தனமாக வாங்குவதில்தான் செலவு அதிகமாகும். தண்டையார் பேட்டையில் கள்ள மது விற்பனையால் ஒருவர் கைதாகியிருக்கிறார். 1000 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்கப்பட்டது, இப்போது 100 ரூபாய்க்கு வந்துவிடும். இதனால், குடும்பத்திற்கு செலவு மிச்சம். அரசுக்கு வருமான இழப்பை சரிக்கட்ட நாங்கள் தயராக இருக்கிறோம்.

- வினி 

loading...

Advertisement

Advertisement

Advertisement