[X] Close

என்னதான் நடக்கிறது ராஜஸ்தான் அரசியலில்?: சச்சின் பைலட் போர்க்கொடியால் அதிரடி திருப்பம்

Subscribe
Rajasthan-Crisis-LIVE-Updates-sachin-pilot-and-mlas-return-Congress-Legislative-Party-Meet-Tomorrow

உண்மையில், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான காலத்தை கடந்த சில ஆண்டுகளாகவே சந்தித்துக்கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று அதிக இடங்களை பிடித்தாலும், அதை குறைவான இடங்களை பிடித்த பாஜகவிடம் ஆட்சியை இழப்பது. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், முழுமையாக ஆட்சியை நடத்த முடியாமல் பாஜகவிடம் இழப்பது. இதுவே தொடர் கதையாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்த நாள் முதலே காங்கிரஸ் கட்சியின் இந்த சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லலாம்.


Advertisement

image

இந்த இக்கட்டான காலத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போதும், மிகப்பெரிய மகிழ்ச்சியான ஊக்கமளிக்கும் விஷயமாக அமைந்தது கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தான். இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது மத்தியப் பிரதேசம் அதன் கைகளில் இல்லை. அத்துடன், ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியின் மீது இன்றைய நிலையில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.


Advertisement

image

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டார். துணை முதல்வராக சச்சின் பைலட் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி மிக வெளிப்படையாக இருந்து வருகிறது. ஆனால், ஆட்சிக்கு போதுமான பலம் இருந்ததால் காங்கிரஸ் கவலைப்படாமல் காலத்தை ஓட்டி வந்தது.

ஆனால், இருவருக்கும் இடையிலான அதிகார மோதல் முற்றிவிட்டது. நேற்று தனது ஆதரவாளர்கள் 19 பேருடன் சச்சின் பைலட் டெல்லி சென்றதில் இருந்தே அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டது. அப்பொழுதில் இருந்து அரசியல் திருப்பங்கள் அரங்கேறிய வண்ணம் இருந்தது. பாஜக ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், பாஜக அதனை மறுத்தது. ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தது போன்று சச்சின் பைலட்டும் சேர்வார் என்று பேசப்பட்டது.


Advertisement


image
200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் காங்கிரஸ் வசம் 107 இடங்கள் உள்ளன. அதன் கூட்டணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து 124 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமாக ஒரு 20 எம்.எல்.ஏக்களுக்கு மேல் சென்றுவிட்டால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு இழப்புதான்.இருப்பினும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட்டு சச்சின் பைலட் உடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில்தான், ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் டெல்லி சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு நிலையாக உள்ளது. முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். பாஜக எங்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தது. ஆனால், அது தோல்வி அடைந்துவிட்டது. தற்போது எல்லா நிலைமையும் சரியாகிவிட்டது” என்றார்.

image

இதனால், முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட்க்கு தூது விடும் வகையில் ட்விட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட் ஓரங்கட்டப்படுவது வருத்தம் அளிப்பதாக அவர் கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தக்க வைக்கப்படுமா? அல்லது மத்திய பிரதேசம் வரிசையில் பாஜகவிடம் தாரை வார்க்கப்படுமா என்பதை அடுத்தடுத்து வரும் அரசியல் நிகழ்வுகளை வைத்துதான் கணிக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close