‘அறியாமை’ எனும் கொடிய நோய்: மருத்துவர்களுக்கு ஏன் இந்த அவமரியாதை..?

The-doctor-objection-to-burying-Simon-body-is-justified-by-the-people-s-actions

வாந்தி வந்தால் மருத்துவர்கள் மருந்து வாங்கி சாப்பிடச் சொல்லலாம். ஆனால் அவர்களால் எப்படி வதந்திக்கு மருந்து எழுதிதர முடியும்? ஆகவேதான் சொல்கிறார்கள், இருப்பதிலேயே கொடிய நோய் கொரோனா அல்ல; ‘அறியாமை’. அந்த நோய்க்குத்தான் இன்னும் உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.


Advertisement

ஒரு சக மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, தனது உயிரே போனாலும் பரவாயில்லை எனத் துணிந்துதான் இந்த வேலைக்கு மருத்துவர்கள் வருகிறார்கள். இந்த உலகத்தில் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற தொழுநோய்க்குக்கூடத் தொட்டு சிகிச்சை அளிக்க இந்த உலகத்தில் எத்தனைப் பேர்கள் வந்தார்கள்? ஒரே ஒரு அன்னை தெரேசாவை விட்டால் நம்மால் அப்படி ஒரு மனிதநேயம் மிக்க மனிதரைச் சான்றுக்குக் காட்ட முடியுமா? ஆனால் அந்தத் தொழுநோய்க்குக்கூட மனம் இறங்கி வந்து சிகிச்சை அளித்தவர்கள் யார்? மருத்துவர்கள்தான்.

image


Advertisement

வேறு படிப்பைப் படித்துவிட்டு அவர்கள் நல்ல சௌகரியமான பணியைத் தேர்ந்தெடுக்கலாம்? ஆனால் இந்தச் சேவையின் மீது உள்ள ஈர்ப்பால்தான் ஒருவருக்கு அடிப்படையில் மருத்துவர் வேண்டும் என்ற ஆசை வருகிறது?

மறைந்துபோன அனிதா, மருத்துவர் கனவைத் தேர்ந்தெடுத்தது எதற்காக? கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கவா? இல்லை. அந்த இளம் பெண்ணின் உள்ளத்திலிருந்த சேவை எண்ணம்தான் அவரை மருத்துவக் கனவை நோக்கி உந்தித்தள்ளியது. ஆகவேதான் அவர் ’முத்துலட்சுமி ரெட்டி’யைப்போல் ஆக வேண்டும் எனக் கனவு கண்டார்.

நமக்கு ஒரு தீர்க்க முடியாத நோய் வந்துவிட்டது என்றால், அத்தனை உறவுகளும் தங்களை அப்புறப்படுத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். ஆனால் நமது மனவேதனையைப் புரிந்து சேவை செய்ய முன்வருபவர்கள் பெரும்பாலும் யார்? இந்த மருத்துவர்கள்தான். அவர்களை விட்டால் நமக்குப் போக்கிடமில்லை. ஆனால் என்ன செய்திருக்கிறோம் நாம்? அல்லும் பகலுமாக கொரோனா நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவரை அன்பான மனிதநேயம் மிக்க அந்தக் கொடையாளரைக் கொன்று குவித்த நோயைக் காரணம் காட்டி புதைப்பதற்காக சுடுகாட்டைத் தரமாட்டோம் எனக் கற்களைக் கொண்டு தாக்கி இருக்கிறோம்.


Advertisement

image

எங்கே போகிறது மக்களின் மனிதநேயம்.

இந்தக் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியவுடன் தெய்வங்கள் போன்று நம் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் மருத்துவர்கள். அடுத்து தூய்மைப்பணியாளர்கள். ஆகவேதான் நம்மை விளக்கை ஏற்றி, கைதட்டி அவர்களை கெளவரப்படுத்த சொன்னார் பிரதமர். நாம் முதல்நாள் அவர்களின் சேவையைக் கைதட்டி கெளரவப்படுத்திவிட்டு அடுத்த நாள் கும்பலாகக் கூடி ‘கல்லறை பக்கம் வராதே’ என்று கற்களைக் கொண்டு அடித்து விரட்டி இருக்கிறோம். உண்மையில் இந்த நாட்டில் சேவைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

image

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மருத்துவர்களைப் பற்றி எத்தனை கதைகள்.

சவுதி அரேபியாவில் கட்டிப் பிடிக்க ஓடிவந்த பிள்ளையைத் தொட்டுப் பார்க்க முடியாமல் தவித்த ஒரு கொரோனா மருத்துவரின் வீடியோ உலகையே உலுக்கியதே? மருத்துவமனை வாசலில் செவிலியைத் தாயைப் பிரிந்து போக மனம் இல்லாமல் அழுத காட்சியை இந்தக் கண்களால்தானே பார்த்தோம். உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மருத்தவர்களும் தடிமனான முகக்கவசத்தை அணிந்து அணிந்து முகம் முழுவதும் வெட்டுக்காயமாகப் போய் நிற்கிற அந்தப் புகைப்படங்கள் நம் மனதை உலுக்கவில்லையா? கொரோனா வந்துவிடும் எனத் தெரிந்து கேரளாவில் பணிசெய்ய வந்த செவிலியர்கள் எத்தனைப் பேர் தெரியுமா? அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றியதே? அவர்கள் வேலை செய்ய மாட்டேன் எனத் தப்பித்துப் போய் இருந்தால் எத்தனை மரணங்களை நாம் கண்டிருப்போம் தெரியுமா?

மேலும், கேரளாவில் கொரோனாவிலிருந்து மீண்ட நர்ஸ் சொல்கிறார்.. விரைவில் வேலைக்குத் திரும்புவேன் என்று. இந்த அன்பான மனிதர்களுடன் வெறும் கல்லறையை நாம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்றால் என்ன அநியாயம்?

image

இந்த விஷயத்தில் முதல்வர் பழனிசாமி, “தன்னலம் கருதாமல் மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரைத் துறப்போருக்குப் பொதுமக்கள் தகுந்த மரியாதை தர வேண்டும். கொரோனாவால் இறந்தோரின் இறுதிச்சடங்கின்போது நடந்த சம்பவங்கள் வருத்தமும் வேதனையையும் அளிக்கிறது. ஏற்கெனவே நடந்தது போல் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறியிருக்கிறார். இது பெரிய ஆறுதல்.

image

மேற்கொண்டு, கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் எனக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இவை எல்லாம் சட்டரீதியான பாதுகாப்புகள்தான். ஆனால் இதைவிடப் பெரிய பாதுகாப்பு மனிதநேயம். ஒருவர் தீயில் எரியும் போது காப்பாற்றுவதற்காக ஓடிப்போய் கட்டி அணைக்கிறானே அந்த மனிதநேயம் வேண்டும்.

அந்த மனிதநேயம் இருப்பதால்தான் நடிகர் கார்த்தி, “டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கில் இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார்.

image

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், “கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மைக் காக்கப் போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்கக் குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்” எனக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான். நமக்காகதான் மருத்துவர்கள் இந்த மரணக்குழியில் இறங்குகிறார்கள். அவர்களை நாம் கௌரவிக்க வேண்டும். கேவலப்படுத்தக் கூடாது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement