[X] Close >

நோய் பரவும் என கூடி நின்று போராடிய மக்கள் - அம்பத்தூர் கதை கூறுவது என்ன?

Chennai-residents-stop-cremation-of-COVID-19-patient-near-their-residence


கொரோனா ஒலிக்கத் தொடங்கியது முதலே மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கிறது ஒரு பெரும் கூட்டம். அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் முக்கியமானவர்கள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் தொற்று எனத் தெரிந்தும் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்துகொண்டு அவர்களுக்காக உழைக்கிறார்கள் இந்த சேவகர்கள். தங்கள் குடும்பத்தினரையும் கவனிக்காமல் இரவு பகலாக மருத்துவமனையிலேயே கிடக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் இங்குண்டு. அவர்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது? கவச உடைகள் அவர்களுக்கு கிடைக்கிறதா? என்பது போன்ற பல கேள்விகள் நம் முன்னே நீள்கின்றன.


Advertisement

image

கொரோனா பாதிப்பு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாதிக்கத் தொடங்கி இருப்பது வருத்தத்திலும் வருத்தம். அரசாங்கம் அவர்களை முன்கள வீரர்கள் என்கிறது. அவர்களைப் பாராட்ட ஜன்னல் ஓரம் நின்று ஒலி எழுப்ப சொல்கிறது. சுயநலமின்றி இப்படி நமக்காக உழைத்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள், வாழும் கடவுள்கள் இல்லாமல் வேறென்ன என்று சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பறக்கின்றன. ஆனால் உண்மைக்களம் சொல்வது என்ன? சென்னை சாலையில் ஒரு மருத்துவரின் உடல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகிறது. தகனத்திற்கு அனுமதியளிக்காமல் மருத்துவரின் உடலை அலைக்கழிக்கிறார்கள் மக்கள்.

image


Advertisement

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 56 வயதான மருத்துவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு கொண்டு சென்றனர். ஆனால் தகவல் அறிந்த மின்மயான ஊழியர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகள் இல்லை எனக்கூறி உடலை எரிக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.

மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவரின் உடலை அம்பத்தூர் கொண்டு வந்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அம்பத்தூர் 7 வது மண்டலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கிருந்து உடல் திருவேற்காடு அடுத்த கோலடி பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

image


Advertisement

மருத்துவரின் உடல் தகனம் செய்யப்படுவதாக தகவல் பரவியதால் அங்கேயும் 300 க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அப்போது மக்கள் மயானத்தை பூட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். நள்ளிரவில் உடலை எரித்துவிடுவார்கள் என்பதால் விடிய விடிய மக்கள் சார்பில் 4 பேர் மின்மயானத்திலேயே காவலுக்கும் இருந்துள்ளனர்

இங்கு கவனிக்க வேண்டியது என்ன? உடலை தகனம் செய்தால் அப்பகுதியில் கொரோனா பரவும் என்று மக்கள் நினைத்துக்கொண்டு இருப்பதுதான் வேதனை. கொரோனா எப்படி பரவுகிறது? விழிப்புணர்வு என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எது? போன்ற பல விஷயங்கள் இன்னும் மக்களிடத்தில் சென்று சேரவில்லை என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டாக நிற்கிறது அம்பத்தூர் சம்பவம். சடலத்தை தகனம் செய்தால் நோய் பரவும் எனக் கூறிக்கொண்டு 100க்கும் அதிகமானவர்கள் கூடி நின்று போராட்டம் செய்கிறார்கள் . தவறு எங்குள்ளது?

image

கொரோனா போன்ற தொற்றை எதிர்த்து நிற்பதில் அதிகம் தேவை மக்களின் பங்களிப்பு தான். ஒன்றை எதிர்த்து போராடுவதற்கு முன்னால் அதனைக் குறித்து முழு புரிதலையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே வெற்றிக்கு வழியாகும். கொரோனா போன்ற மருந்தில்லாத தொற்று நோயுக்கான முதல் மருந்தே விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையும் தான். அதனை நகரம் முதல் கடைகோடி கிராமம் வரை கொண்டு சேர்த்தலில் தொடங்குகிறது நோயுக்கு எதிரான வெற்றி. இல்லையென்றால், மனிதனின் கடைசி காரியம் தகனம். அதற்குக்கூட அலைக்கழிப்பட வேண்டி வரும் என்பதற்கு அம்பத்தூர் கதையே சாட்சி. 

சீனாவில் மீண்டும் பரவுகிறதா கொரோனா? - ஒரே நாளில் 108 பேருக்கு தொற்று 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close