[X] Close >

’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா இந்தப் போக்கு...!

Tamil-Movie-titles----

எதற்குமே ஒரு கடிவாளம் தேவை, பிடி தளரும் போது எதுவுமே அதன் கட்டுப்பாட்டை இழக்கும். தமிழில் உருவாகும் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற முறை நடைமுறையில் இருந்த போது எவ்வளவோ நல்ல தமிழ் பெயர்கள் இங்கு உருவான சினிமாக்களுக்கு வைக்கப்பட்டன. வாரணம் ஆயிரம், நினைத்தாலே இனிக்கும், நாடோடிகள், ஓ காதல் கண்மணி, அருவி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்த விதி நீக்கப்பட்ட பிறகு மீண்டும் நம் இயக்குநர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் மாஃபியா, மாஸ்டர் என நிறைய தலைப்புகள் வரத் துவங்கிவிட்டன.


Advertisement

image

ஏன் எதையும் சட்டம் கொண்டு தான் கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம் நாம். படைப்பளியாக சுய அக்கறையொன்று சமூகத்தின் மீது கிடையாதா...? ஆங்கிலத்தில் பெயர் வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆபாசமாக வக்கிரமாக பெயர் வைப்பது ட்ரெண்டாகத் துவங்கியிருக்கும் இச்சூழலை உடனடியாக நாம் கண்டிக்க வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து, 90 எம்.எல் எனத் துவங்கி தற்போது பல்லு படாம பாத்துக வரை அச்சமும் குற்ற உணர்ச்சியும் பொறுப்புணர்வும் இன்றி தலைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மலையாளப் படங்கள் பலவும் கதை சொல்லும் விதத்தில் சர்வதேச தரத்தை நோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் போது., தமிழ் சினிமா பல்லு படாம பாத்துக்க என பெயர் வைப்பது பிற மொழி பேசும் மக்களிடையே தமிழ் சினிமா மீது என்ன மாதிரியான அபிப்ராயத்தை உருவாக்கும் என்பதை இங்குள்ள படைப்பளிகளும் கலைஞர்களும் சிந்திக்க வேண்டும்.


Advertisement

“பல்லு படாம பாத்துக்க”. இந்த படத்தை பிரபல யூ டியூப் சேனலான டெம்பிள் மங்கியில் வரும் நடிகர் விஜய் வரதராஜ் எழுதியும் இயக்கியும் உள்ளார். இந்த படம் வரும் 13 ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மூன்று நிமிட ஸ்னீக் பீக் முன்னோட்ட காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் வரும் இரட்டை அர்த்த வசனம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது.

image

தன்னுடைய திறமையினை மட்டுமே நம்பி சினிமாவில் ஜெய்க்க வந்த பலரை கோடம்பாக்கம் கண்டிருக்கிறது. அப்படி தன்னம்பிக்கையினால் சினிமாவில் வென்ற சிலர் தமிழக முதல்வர்களாக ஆகியிருக்கின்றனர். ஆனால், இன்றய திமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விஜய் வரதராஜ் தன்னுடைய படத்திற்கு “பல்லு படாம பாத்துக்க” என இத்தனை தரக் குறைவான தலைப்பை வைத்திருக்கிறார் என பலரும் கூறிவருகிறார்கள். இதுல என்ன தப்பு இருக்கு. இந்த தலைப்புல எதும் நேரடி கெட்ட வார்த்தை இல்லையே...? என தர்க்கம் செய்யலாம். நியாயப்படுத்தலாம். ஆனால் தர்க்கம் என்பது வேறு தார்மீகம் என்பது வேறு.


Advertisement

தர்க்க ரீதியாக எதையும் நியாயப்படுத்தி விடமுடியும் என நம்புகிறவர்கள் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து, பல்லு படாம பாத்துக்க போன்ற சினிமாக்களை எடுக்கிறார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் +18 சினிமாவை எடுக்கிறோம், நாங்கள் யாரையும் தியேட்டருக்குள் வரச் சொல்லி கையை பிடித்து இழுக்கவில்லை என்பது போல் தர்க்கம் செய்யலாம். தங்களை படைப்பாளிகளாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் தார்மீக பொறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

image

ஒரு நிலத்தில் உருவாகும் படைப்பு என்பது அந்நிலம் சார்ந்த மக்களை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் சங்கதிகளில் ஒன்று. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும்...? இந்த ஸ்னீக் பீக்கில் “என்னை ஏன்டா ஏமாத்துன” என ஒரு ஆண் இன்னொரு ஆணின் அறைக்குள் சென்று சண்டை இடுவது போல ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியில் என்ன தப்பு இருக்கு 377 சட்டப்பிரிவே உருவாக்கியாச்சு என நீங்கள் இதனை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தலாம் அதற்கு அடுத்து வரும் வசனமான “பின்னாடி நல்லா குடுப்பாரு” என்ற தட்டையான வசனத்தை எதைக் கொண்டு நியாயப்படுத்துவீர்கள்.

தமிழில் குக்கூ, அட்டகத்தி போன்ற சினிமாக்கள் மூலம் வளர்ச்சியும் நல்ல மதிப்பும் பெற்ற தினேஷ் இப்படத்தை தேர்வு செய்திருக்க வேண்டியதில்லை என்று பலரையும் நினைக்க வைத்துவிட்டார். பத்திரிகையாளார் சந்திப்பில் “பல்லு படாம பாத்துக்க” படத்தின் இயக்குநர் விஜய் வரதராஜும், தினேஷும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நெளிகிறார்கள். இது அடல்ட் பிலிம் அப்படித்தான் இருக்கும் எனக் கூசாமல் சொல்கிறார்கள். நமது நாட்டார் கதைகளில் கூட அடல்ட் நகைச்சுவைகள் உண்டு, கி.ராஜநாராயணன் எழுதிய “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற நூல் முழுக்க முழுக்க கிராமத்து அடல்ட் கதைகள் தான். ஆனால் அவை சொல்லப்பட்ட விதமும் நேர்த்தியும் வேறு. பதின் பருவத்தை கடந்த எல்லோராலும் ரசிக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று “வயது வந்தவர்களுக்கு மட்டும்”. அந்த அளவிற்கு தனித்துவமான கதை சொல்லி கி.ராஜநாராயணன்.

image

ஆனால், தற்போது இப்படியான முகம் சுளிக்க்க வைக்கும் தலைப்புகளை வைத்து படம் எடுப்பவர்கள். பொது சமுதாயத்தை துளியும் மதிக்கவில்லை என்றே அர்த்தம் கொள்ள வைக்கிறது. சினிமாவைப் பார்க்க திரையரங்கிற்குள் எல்லோரும் அனுமதிக்கப்படப் போவதில்லை. நிச்சயம் 18 வயது பூர்த்தியானவர்கள் தான் இந்தப் படத்தை பார்க்க முடியும் என்பதெல்லாம் சரி. ஆனால், உங்களது ஸ்னீக் பீக், டீசர், ட்ரைலர் எல்லாம் ஒவ்வொருவர் வீட்டின் வரவேற்பறை வரை வந்து போகுமே. இவ்வளவு சட்டம் போட்டும் பைரஸியை நம்மால் தடுக்க முடியாத போது.

இணையத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் செல் போனுக்கு உங்களது சினிமா போவதை தடுக்க முடியுமா...? அது அரசாங்கத்தின் வேலை என தட்டிக் கழிக்காமல். மேல் சொன்ன அத்தனை சாத்தியங்களையும் சிந்தித்து நேர்மையாக திறமையை நம்பியே ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும். விஜய் வரதராஜ், தினேஷ் மட்டுமல்ல இனி உருவாகப் போகும் ஒவ்வொரு படைப்பாளியும் சமூகத்தின் மீதான அக்கறையுடன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதே சரியானதாக இருக்கும். நமக்கும் பொது சமூகத்துக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை அது மேம்படுத்தும். குறைந்த பட்சம் 'பல்லு படாம பாத்துக்க' என்ற இந்த தலைப்பை மாற்றிக் கொள்ள படக்குழு முன்வரவேண்டும்.

Related Tags : pallu padama pathukatamil moviesneak peek
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close