JUST IN

Advertisement

மூவருக்கு பாரத ரத்னா: விருதும் பின்னணியும்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது பாரத ரத்னா. கலை, அறிவியல், இலக்கியம், பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட துறைகள் மட்டுமின்றி பிற துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என பின்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் அமரர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படாது என முதலில் இருந்த விதி பின்னர் மாற்றப்பட்டு அமரர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்களை நாட்டின் பிரதமர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வார். அதன்படி விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


Advertisement

அதன்படி இன்று நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பாரத ரத்னா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரான பூபென் ஹசாரிகா, சமூக ஆர்வலரான நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

(பாரத ரத்னா விருது)

 

பிரணாப் முகர்ஜி:


Advertisement

பிரணாப் முகர்ஜி 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்தியக் குடியரசின் தலைவராக பதவி வகித்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டவர். இந்திராவின் மறைவிற்குப் பின் சிறிது காலம் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி கண்ட அவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினார். மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், திட்டக் கமிஷன் துணைத்தலைவர், மாநிலங்களவைத் தலைவர் என பல உயரிய பதவிகளை வகித்த பிரணாப் முகர்ஜி மிகச்சிறந்த கல்விமான். தனது அரசியல் அனுபவங்களை பல்வேறு புத்தகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.


நானாஜி தேஷ்முக்:

மும்பையில் பிறந்த நானாஜி தேஷ்முக்கின் இயற்பெயர் சந்திகாதாஸ் அம்ரித்ராவ் தேஷ்முக் என்பதாகும். தனது சிறுவயதில் வறுமையில் சிக்கிய நானாஜி காய்கறி வியாபாரம் செய்து தனது கல்வியை தொடர்ந்தார். தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றினார். பின்னர் தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா சங்கத்தில் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் செயல்பட்டார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இவரின் அளப்பரிய சேவையைப் பாராட்டி ஏற்கெனவே இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் வழங்கி கெளரவித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய இவர், பின்னர் நியமன உறுப்பினராக மாநிலங்களவையிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். 2010 ஆம் ஆண்டு தனது 93ஆவது வயதில் நானாஜி தேஷ்முக் மறைந்தார்.

 

பூபென் ஹசாரிகா:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபென் ஹசாரிகா மிகச்சிறந்த கவிஞர். சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற கருப்பொருள்களில் இவர் எழுதிய கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியில் இவரது கவிதைகள் மிகப்பிரபலம். பின்னாளில் இந்தி திரைப்பட உலகில் நுழைந்த இவர், வடகிழக்குப் பிராந்திய கிராமிய இசையை பாலிவுட் திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சங்கீத நாடக அகாதமி விருது, திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றுள்ள ஹசாரிகா கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 85வயதில் இயற்கை எய்தினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement