[X] Close >

’வேலைக்காரன்’ ரஜினி டைட்டில் எதற்கு? :இயக்குநர் மோகன் ராஜா சிறப்பு பேட்டி 

director-mohan-raja-exclusive-interview

’தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மோகன்ராஜாவிற்கு வேறு முகம் கிடைத்திருக்கிறது. சமூக பொறுப்புள்ள ஒரு இயக்குநராக அவர் தெரிய ஆரம்பித்திருக்கிறார். ரீ மேக் ஃபார்மூலாவை உடைத்து கொண்டு அவர் தமிழ் ரசிகர்கள் மனதில் உள்ளே புகுந்திருக்கும் வேகம் வேற லெவல். அதனால்தான் ‘வேலைக்காரன்’ வெயிட்டேஜ் கூடியிருக்கிறது. அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோகன்ராஜா கூட்டணி என்பது எதிர்பார்ப்பை மேலும் கூட்டிருக்கிறது. படத்தைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார் மோகன்ராஜா. புதியதலைமுறை இணையதளத்திற்காக திநகரில் உள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். ஆரம்பமே சூடாக இருந்தது.


Advertisement

“லடாக்ல போய் ‘வேலாயுதம்’ ஷூட்டிங் பண்ணேன் சார். நான் அன்னைக்கு ஷூட்டிங் பண்ண பகுதி இப்ப இந்தியாவுக்குள் இல்லை. சைனா பிடிச்சுட்டாங்க. சீன பட்டாசு உள்ள வந்தா சண்டைப் போட்டுக் கத்தி தடுக்குறாங்க. ஆனா நாட்டு எல்லையில சீனா வெடி குண்டே போடுறாங்க. அத ஏன் தட்டிக் கேட்க மாட்டேங்குறாங்க? முன்னேற்றம்னா என்னா சார்? இருபது வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காதானு ஏங்குறதா முன்னேற்றம்? இந்தியாவை தேடி பல வெள்ளைக்காரங்க ஏன் வர்றாங்க? டைடல் பார்க்கை பார்க்கவா? இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால ராஜராஜ சோழன் கட்டின தஞ்சாவூர் கோபுரத்தை பார்க்கதான் வர்றாங்க. ஆயிரம் வருஷத்துக்கு முன்னால இருந்தவன் நம்மைவிட புத்திசாலியா இருந்திருக்கான்னு சொல்லிக் கொள்வதற்கு நாம வெட்கப்பட வேண்டாமா? நமக்கு பெருமை முன்னோர்கள் கொடுத்துட்டு போனதுலதான் இருக்கு. நாம இன்னைக்கு உருவாக்கி வச்சிருப்பதுல ஒண்ணுமே இல்ல. நமக்கு என்ன தேவைனு தெரிய வேண்டாம். அட்லீஸ்ட் என்னத்தை இழந்திருக்கோம் என்றாவது தெரிஞ்சுக்க வேணாம்?” கோபகம் கொப்பளிக்க பேசினார் இயக்குநர் மோகன் ராஜா.  வேலைக்காரன் மூலம் புதிய உலக அரசியலை பேச முன் வந்திருப்பவர்.

சமூக பொறுப்புள்ள இயக்குநரா அடையாளப்பட ஆசைப்பட்டுட்டீங்க போல இருக்கு?


Advertisement

“சமூகப் பொறுப்பு திடீர்னு வராது. நேத்துவரைக்கும் காமெடி படம் பண்ணிட்டு இன்னையில இருந்து சமூக பொறுப்பு படம் பண்ணுவோம் என்று ஒருத்தன் இறங்கினா அவ்வளவுதான். நான் ரீ மேக்  படம் பண்ணும் போதே பல படங்கள் வாய்ப்பு வந்தது. சொன்னா நம்ம மாட்டீங்க பெட்டியில பணத்தோட பல தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு வந்துட்டாங்க. நான் அறுபது பட வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டுதான் ‘தனி ஒருவன்’ பண்ணேன். நீங்க நிறைய சம்பாதிச்சு அந்தப் பணத்துல ஒரு நிலம் வாங்கிப்போட்டுவிட்டு நாலு வருஷம் கழிச்சு அத வித்தா டபுளா கிடைக்கும்னு யோசிச்சிங்கனா அது பிசினஸ் கிடையாது. கேம்ளிங். அத செய்ய நான் இல்ல. தனி ஒருவனை என் பொண்னுக்கு ரஷ் வெர்ஷனை போட்டுக் காம்பிச்சேன். அவ அத பார்த்துட்டு ‘அப்பா இது பிரிலியண்ட் ஃபிலிம்பா’னு சொன்னார். பதினொரு வயசு பொண்ணு அவ. அவளுக்கு அது ப்ரிலியண்ட் ஃபிலிம்னு புரிஞ்சிருக்கு. அதான் சக்சஸ். எனக்குத் தெரியல. என் மகள் எதிர்காலத்துல டைரக்டரா வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கு. எனக்குத் தெரியும். சினிமா இண்டரஸ்ட்ரியில என்ன எந்த இடத்துல மேட்ச் பண்றதுனே புரியாம பலர் குழம்பிப் போய் இருக்காங்க. அவங்க  குழப்புறது பிரச்னை இல்ல. அவங்க குழப்பி இருக்காங்கனு நான் தெரிஞ்சு வச்சிருக்கேன் பாருங்க அதான் என் பலம். அதனாலதான் இன்னைய வரைக்கும் நான் சுதந்தரமா என் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன்”

வேலைக்காரன் யார்?


Advertisement

“வசதி, படிப்பு, அறிவு இவை எல்லாம் இருக்குற ஒருத்தன் இந்த சமூகத்தை பார்க்கணும்னு, பார்ப்பான்னு நான் எடுத்த படம் தனி ஒருவன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே டவுட். படிப்பு கிடையாது. வசதி கிடையாது. முட்டாள் கிடையாது. அவன் எப்படி இந்த சமூகத்தை பார்க்குறான் என்பது வேலைக்காரன்.  உழைப்பதற்கான கூலியும் சரியா கிடைக்கல. உழைச்சு வாங்குற பொருட்களாவது தரமா கிடைக்குதா? அதுவும் கிடைக்கல. இவ்வளவு பிரச்னை உள்ளவன் எப்படி சமூக அக்கறையோட இருப்பான்? என்ன பொறுத்தவரை வீடு, சுற்றம், சமூகம் இந்த மூணுக்கும் பதில் சொல்லாம சாகவே முடியாது. அப்படியே செத்தாலும் நிராசையா சாவான். இந்த மூணுக்கும் என் கதாநாயன் என்ன சொல்றான். அதான் இதன் நோக்கம்.”

பிரசாத் லேப்ல மிகப் பெரிய குப்பைக் கிடங்கு செட் போட்டீங்களாமே?

“ஆமாம் சார். ஒரிஜினலா இருக்கணும்னு விரும்பினோ. பத்து லாரி ஒரிஜினல் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி ஒரு குப்பைக் கிடங்கை உருவாக்கினோம். அத்தனையும் அஃமார்க் குப்பைகள். ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் அதுக்காக நிறையவே உழைச்சிருக்கார். முழுக்கதையும் அந்தக் குப்பையை சுத்திதான்  நடக்குது. அந்தக் குப்பத்தில்தான் வில்லன் வீடு. கதாநாயகன் வீடு. ரெண்டு மாசம் ஆச்சு அதை ரெடி பண்ணவே. நாற்பது நாள் அங்கதான் ஷூட்டிங். அதுக்குள்ளவே ஒரு சாங் ஷூட் பண்ணோம். இதுல ஹைலைட் என்னென்னா, கூவத்தையே உருவாகினோம். நீங்க செட் என்று சொல்லவே முடியாது. கூடவே ட்ரெயினை ஓட விட்டிருக்கோம்.”

நயன்தாரா உங்க தனி ஒருவனுக்கு உங்களோடு சரியாவே ஒத்துழைக்கவில்லை என்று அவங்களே சொன்னாங்களாமே? அப்படி இருந்தும் திரும்ப நயனை எப்படி போட்டீங்க?

“உண்மைதான். அது அவங்க பெருந்தன்மையை காட்டியது. ஓபனா அவங்க பேசினப்ப என் மனசுல அவங்க பெரிய உயரத்துக்குப் போயிட்டாங்க. அவங்க சொல்லையினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்ல..ஏன்னா, படம் சூப்பர் டூப்பர் ஹிட். படம் பார்த்த ஒருத்தனுக்கும் அவங்க பாதி ஈடுப்பாட்டோட வேலை செஞ்சாங்கனு கண்டுப்பிடிக்கவே முடியாது. அதுக்குப் பின்பும் அவங்க அப்படி சொன்னது பெரிய விஷயம். நான் எல்லோரையும் மனுஷங்களாதான் பார்க்கு றேன். நடிகர்களா பார்க்குறதில்ல. பேச்சுக்காக நயன் அப்படி சொல்லியிருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்ல அத நான் ஒருநாள் கூட உணர்ந்ததே இல்ல. பக்கா புரபஷனல் ஆர்டிஸ்ட் அவங்க. பதிமூன்று வருஷமா அவங்க ஃபீல்டுல நிற்குறாங்கனா அதான் காரணம். 
நாம இங்க ஆண்கள்தான் கிரியேட்டர்ஸ். பெண்கள் சொன்னதை செஞ்சுடுப் போறவங்கனு மனசுல நினைச்சுக்கிட்டிருக்கோம். எந்த ஒரு ஆண் நடிகருக்கும் குறைஞ்சவங்க இல்ல,  சாவித்திரியும் பாணுமதியும். அதான் உண்மை.அத போலதான் நயன்தாரா. வேலைக்காரனை பொருத்தவரை சிவா இதுவரை சேராத ஒரு ஜோடி வேணும். அதுக்காவேதான் நயன்”

கதையே இல்லாமல் கலகல ஸ்டைல் ஹீரோ சிவா. அவரை வைத்து எப்படி சமூக பொறுப்புக் கதை சொல்ல முடிவு பண்ணீங்க?

“ஒரு படம் வெற்றி பெற்ற பின்னால நாம சொல்லக் கூடிய காரணங்கள்தான் சார் அது. சிவாவை பொருத்தவரை இந்தக் கதைக்கு அவர்தான் சரியான ஆள். அது எப்படினு என்னால இப்ப சொல்ல முடியாது. படத்துல ஒரு நியாயமான காரணத்தை நீங்களே உணருவீங்க. எந்த வெற்றியும் இங்க சாதாரணமா வந்திடாது. சிவாவின் வெற்றியும் சாதாரணமா கிடைச்சதில்ல. அவருக்குனு ஒரு ஸ்டைல் ஃபார்ம் ஆகியிருக்கு. ஒவ்வொரு வீட்டுக்கும் இந்தக் கதையை கொண்டு போக சிவாவை தவிர வேற ஹீரோ சமீபகாலத்துல இல்லன்னே சொல்ல முடியும். அந்தப் பேரை அவர் சம்பாதிச்சு வச்சிருக்கார். சிவா என்கிட்ட கேட்டது என்ன தெரியுமா?’ உங்க கதையில நான் இருக்கணும்னு விரும்புறேன்’னு கேட்டார். அத சரியா நான் செஞ்சுக் கொடுத்திருக்கேன்”

ரஜினி டைட்டில் எதுக்காக? புதுசா ஒரு பெயர் கிடைக்கலையா?

“வலுக்கட்டாயமா கதையில் கமர்ஷியலை திணிப்பது எனக்கும் பிடிக்காத விஷயம்தான். எங்க வேலைக்காரனை ஒருவேளை ரஜினி சார் பார்த்தா நிச்சயம் சந்தோஷப்படுவார். அவர் படத்துக்கு அந்த டைட்டில் பொருந்திப் போனதைவிட எங்க கதைக்குதான் அதிகம் பொருந்தி வந்திருக்கு. இந்த டைட்டில் பழசுதான். ஆனா இந்த முப்பது வருஷத்துல இந்தத் தலைப்பின் அர்த்தம் அரசியல் ரீதியாகவும் வாழ்க்கை ரீதியாகவும் எப்படி மாறி இருக்கு என்பதை படம் பார்க்கும் போது நீங்களே புரிஞ்சுக்குவீங்க. அந்தக் காலத்துல வேலைக்காரன் அர்த்தம் வேற. இந்தக் காலத்து வேலைக்காரன் அர்த்தம் வேற. வெறும் ரஜினி டைட்டில்னு நாங்க இதை வைக்கல. உலகமே அதிகமா கொண்டாடுற ஒரு தினம் உழைப்பாளர் தினம். இந்த அரசியலுக்காகவே இந்தத் தலைப்பை வச்சிருக்கோம்.”

 ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் பலர் காப்பி கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே?

“நானும் கவனிச்சேன். அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் எனக்குத் தெரியாதா? ஃபாலிங் டெளன் போஸ்டர் காப்பினு சொல்றாங்க. நீங்க பார்த்த படத்தை நானும் பார்த்திருக்கமாட்டேனா? இதுக்காகவா நாங்க படம் பண்ண வந்தோம்? எனக்கு சிரிப்புதான் வருது. அது ஒரு ஐடியா. எனக்கு அந்த ஐடியா தேவைப்பட்டது. ஃபாலிங் டெளன்ல இருந்து ஒரு பாதிப்பு எனக்குள்ள உருவானது உண்மைதான். நான் அத மறுக்கல. ஆனா என் கதை வேற. பல கோடிகள் போட்டு எடுக்குற ஒரு படத்தை வெறும் காப்பியாவே எடுத்திடுவோமா? ” மிக யதார்த்தமாக கேட்கிறார் மோகன் ராஜா.

 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close