[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

3rd-test-south-africa-trail-by-488-runs-at-stumps-on-day-2

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுடன் துணை கேப்டன் ரஹானே இணைந்தார். இருவரும் சரிவில் இருந்து, இந்திய அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ரோகித், அபாரமாக சதம் அடித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே சதம் அடித்தார். அதேபோல ரோகித் ஷர்மா இரட்டை சதம் கடந்து அசத்தினார். இவர்களை தொடர்ந்து ஜடேஜா அரைசதம் கடந்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் முகமது ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்பும் ஆட்டத்தை தொடர போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியைவிட 488 ரன்கள் பின் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close