[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

அவமானங்கள், தடைகள், சர்ச்சைகள் ! மீண்டெழுந்தார் மிதாலி ராஜ்

mithali-raj-back-in-the-side-as-odi-captain-after-a-struggle

பல தடைகளையும், அவமானங்களையும், சர்ச்சைகளையும் கடந்து இந்திய மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கு மீண்டும் கேப்டனாக தேர்வாகியுள்ளார் மிதாலி ராஜ். நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கு மிதாலி ராஜ் கேப்டனாக செயல்படுவார். மேலும், ஹர்மண் ப்ரீத் கவுர் தலைமையிலான டி20 அணியிலும் மிதாலி ராஜ் சேர்கப்பட்டுள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே மன வேதனையில் இருந்த மிதாலி ராஜ்க்கு இந்த அறிவிப்பு புதிய உத்வேகத்தை அளித்திருக்கும். ஆம், மகளிர் டி20 உலகக் கோப்பை அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை மிதாலிக்கு. 

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார். இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா. 

இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்க மிதாலிராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், மானேஜர் திருப்தி பட்டாச் சார்யா ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்பட்டது. தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அப்போது பிசிசிஐ-க்கு எழுத்து பூர்வமாக மிதாலி ராஜ் கொடுத்த கடிதம் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவாரை கடுமையாக குற்றஞச்சாட்டியுள்ளார். அதில் " இந்த நாட்டுக்காக 20 ஆண்டுகாலம் கிரிக்கெட் ஆடியுள்ளேன். ஆனால் முதல்முறையாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது சோர்வடைந்துள்ளேன். அணியில் அதிகாரம் இருப்பவர்களால் என் நம்பிக்கையை உடைக்க பார்க்கிறார்கள். இப்போது எனக்கு முதல் முறையாக ஒரு எண்ணம் தோன்றுகிறது. இப்படியொரு நேரத்தில் இந்நாட்டுக்கான எனது சேவை மதிப்புடையதா ?" என அந்தக் கடித்தில் மிதாலி ராஜ் வினவினார்.

மேலும் அந்தக் கடிதத்தில் தனக்கு கேப்டன் ஹர்மண்ப்ரீத் கவுர் மீது எந்தக் கோபமும் இல்லை என்றும் ரமேஷ் பவாரின் முடிவை அவரும் ஏற்றுக்கொண்டதுதான் தனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தனக்கு மன உளைச்சல் கொடுத்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடம் பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது. ‘பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டு முழுக்கு போடுவேன்’ என்று மிதாலி ராஜ் மிரட்டியதாக ரமேஷ் பவார் புகார் தெரிவித்தார். இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்காமல், புதிய பயிற்சியாளராக தமிழகத்தைச் சேரந்த டபுள்.யு.வி. ராமனை நியமித்தது பிசிசிஐ. 

இதுவரை 183 ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் ஆறு சதங்கள், 49 அரை சதங்கள், 47 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது
மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும்
உரியவர் மிதாலி ராஜ். மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ் - லீலா.

இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜின்வருகைக்கு பின்புதான் புதிய வேகம் பெற்றது என கூறலாம். ஏறக்குறைய கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். உலகளவில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை பட்டியலில் மிதாலியும் இடம் பிடித்து இருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை மிதாலியின் வருகைக்கு முன்பும் பின்பும் என பிரித்துவிடலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close