[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

''நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்'' - தனுஷின் சினிமா கிராஃப்!

dhanush-s-bday-special-article

2007ஆம் ஆண்டு பொல்லாதவன் படம் வெளியாகி மெல்ல மெல்ல சூடு பிடித்தது. "படிச்சு பார்த்தேன் ஏறவில்லை" பாடலுக்கான நடனம், படத்தின் யதார்த்தமான சண்டைக் காட்சிகள், தனுஷின் சிக்ஸ் பேக் என படத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால் தனுஷின் நடிப்பே பிரதான காரணம்.

தனுஷின் அப்பாவை டேனியல் பாலாஜி கொண்ட கும்பல் வெட்டியதற்காக மன்னிப்பு கேட்க வரும் வில்லன் கிஷோரிடம் தனுஷ் பேசும் அந்த காட்சி, காலத்திற்கும் ரசிகர்கள் கொண்டாடும் அம்சமாக இருந்தது. "இவன இங்கயே போட்டுர்றேன்" என டேனியல் பாலாஜி சொன்னதும், "போட்றா, போட்றா" என பெரிய கண்களுடன் தனுஷ் பேசும் அந்த நொடி, ப்பா. சான்ஸே இல்லை. திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் அது அப்படியே மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். அந்த ஒரு நொடி புதுப்பேட்டையின் கொக்கி குமார் தனுஷுக்குள் வந்து இறங்குவார்.

அதேபோல் ரவுடியின் கோட்டைக்குள் நுழைந்து, ரவுடியின் தம்பியையே அடித்துவிட்டதாக கூறும் பரபரப்பான அந்த காட்சியில் தனுஷின் முகத்தில் ஒரு சின்ன பயம் கூட இருக்காது. மாறாக, "என்னை அவர் அடித்ததால், நான் திருப்பி அடித்தேன், அதில் எந்த தப்பும் இல்லை" என்ற ரீதியிலேயே பேசுவார் தனுஷ். கிட்டத்தட்ட ஒரு சாஃப்டான எச்சரிக்கை போல செய்வார். உண்மையில் தனுஷின் சினிமா வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான காட்சி அது. அந்த காட்சியில் தனுஷ் பேசிவிட்டு சென்றதும், கிஷோர், "தம்தூண்டு இருந்துக்கினு தவ்லத்தா வந்து பேசுது பாரேன்" என்பார். ஆம். நடிப்பில், தான் ஒரு பெரிய தவுலத் தான் என்பதை, அந்த காட்சி மூலமும், மருத்துவமனை காட்சி மூலமும் உலகிற்கு தனுஷ் நிரூபித்திருப்பார். அதற்குப் பிறகு வந்த படங்களில், பசித்த புலி இரைக்காக காத்திருப்பதை போல நல்ல கதாபாத்திரங்களுக்காக தனுஷ் காத்திருந்து, காத்திருந்து வேட்டையாடினார். இன்றுவரை அந்த வேட்டையை தொடர்கிறார்.

பொல்லாதவனுக்கு முன்பு 2006ல் வெளியான புதுப்பேட்டை படத்திலேயே தனுஷின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. படம் வெளியான நேரத்தில் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு இளைஞர்கள் சிலாகித்தனர். ஆனாலும் புதுப்பேட்டை படம் வெளியான புதிதில் கொண்டாடப்படவில்லை. ஆனால் இப்போது அதே புதுப்பேட்டை படத்தை  ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். காரணம் செல்வாவின் எழுத்து, யுவனின் உலகத்தரமான இசை, அடுத்து தனுஷின் அசுரத்தனமான நடிப்பு.

ஆம். உண்மையில் அசுரத்தனம் தான். எங்க ஏரியா உள்ள வராத பாடலில், பள்ளி மாணவனாக தொடங்கி, "தொண்டைல ஆபரேசன் காசு குடு" என்பதில் பயணித்து, முதல்முறையாக கொலை செய்யும்போது பயப்படுவது, பெரிய தாதாவாக ஆனதற்கு பிறகு முதிர்ச்சியான நடிப்பு, கிளைமேக்ஸ் என புதுப்பேட்டையில் தனுஷின் கதாபாத்திரத்தையும், அவரது நடிப்பையும் பல்வேறு அடுக்குகளாக பிரிக்கலாம். அவ்வளவு நேர்த்தியும், யதார்த்தமும் அதில் இருக்கும்.

புதுப்பேட்டைக்கு முன்பே சீனியர் இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்தாலும் கூட, புதுப்பேட்டை படம் தான் தனுஷை Complete Actor என்ற அந்தஸ்தில் கொண்டுவந்து நிறுத்தியது. 

புதுப்பேட்டையில் தனுஷ் நடிப்பு தனியே தெரிந்ததற்கும், அது இன்றுவரை கொண்டாடப்படுவதற்கும் செல்வராகவன் என்ற ஜீனியஸும் ஒரு காரணம். செல்வராகவனை தவிர்த்துவிட்டு தனுஷை பற்றி எழுதுவது கொஞ்சம் கடினம். 

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தான் யார் என்பதை சினிமா உலகுக்கு அறிமுகம் செய்துகொண்டார் தனுஷ். புதுப்பேட்டை போலவே வெளியான புதிதில் வரவேற்பை பெறாமல், இப்போது தலையில் வைத்து கொண்டாடப்படும் ஒரு படம் 'மயக்கம் என்ன'. அதே செல்வா - தனுஷ் காம்போ தான். இதிலும் தனுஷின் கதாபாத்திர அமைப்பில் பல அடுக்குகள் இருக்கும். அனைத்தையும் நிறைவாக செய்திருப்பார் தனுஷ். 

உண்மையில் தனுஷிடம் பிடித்ததே அவர் எதையும் செய்யத் தயங்கியதே இல்லை. வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து வகை படங்களையும் தேர்ந்தெடுப்பார். குட்டி போன்ற காதல் படம், நய்யாண்டி, உத்தமபுத்திரன் போன்ற முழுநீள காமெடி படம், சுள்ளான், மாரி, திருவிளையாடல் போன்ற அதிரடி ஆக்‌ஷன் படங்கள், மரியான், ஆடுகளம், வடசென்னை போன்ற பரீட்சார்த்த முயற்சிகள், பாடல் எழுதுவது, பாடுவது, பவர் பாண்டி மூலம் இயக்குநர் ஆனது என திரும்பிப் பார்த்தால் தனுஷின் சினிமா கிராஃப் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். 

சினிமா கிராப்தான் அவ்வப்போது சற்று ஏறி, இறங்குமே தவிர, அவரின் உடல்வாகு என்றுமே ஒரே மாதிரி. ஹீரோ என்றால் இப்படிப்பட்ட உடல்வாகு வேண்டும் என்ற ஒருவகை மாயையை உடைத்தெறிந்தவர் தனுஷ். இவரெல்லாம் படத்தின் ஹீரோவா எனக்கேட்ட எத்தனையோ பேருக்கு இன்று கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல தளங்களிலும் நடித்துக்கொண்டே பதிலளித்து வருகிறார் தனுஷ். திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் கொண்டாடப்படுவது உறுதி என்பதற்கு தனுஷ் ஒரு எடுத்துக்காட்டு.

பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்!

- கோ.ர.மணிகண்டன்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close