[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பெற்றால் தான் பிள்ளையா ? - அன்னையர் தின வாழ்த்துகள்!

today-mother-s-day-special-article

இறைவனால் படைக்கப்பட்ட மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று, பெண். பெண் படைக்கப்பட்டதன் காரணங்கள் என பலரும் பலவிதங்களில் கூறுவார்கள். ஆனால் கடவுளால் படைக்கப்பட்ட மிகச் சிறந்த கொடை என்றால் அது தாய் மட்டும் தான். இந்த உலகில் ஐந்தறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதர்கள் வரை தாய்ப்பாசத்திற்கு எடுத்துக்காட்டுகள் பல உள்ளது. குரங்குகள் தன் குட்டி இறந்தது கூட தெரியாமல், அதை வயிற்றில் வைத்து சுமந்து கொண்டே சுற்றும். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற பழமொழி போல, பிறக்கும் குழந்தை கருப்பா, சிவப்பா என்று பாராமல், தன் மொத்த அன்பையும், அரவணைப்பையும் ஊட்டி வளர்ப்பாள்.

ஆண்களின் தவ வாழ்க்கை எவ்வளவு கொடுமையோ, அதைவிட பலநூறு மடங்கு கொடுமையானது பெண்களின் பிரசவ காலம். அந்த பத்து மாதம் வரை தன் சிசுவை கருவறையில் சுமந்து, பாதுகாத்து புத்துயிர் கொடுப்பது, அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதை கஷ்டமானதாக நினைக்காமல், தன் எதிர்காலம் என்று நினைத்து முழு அன்பையும், அரவணைப்பையும் ஊட்டி வளர்க்கிறாள். பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? என்று பாராமல் பாசத்தை காட்டுவாள், அன்னை. கரு உருவானது முதல் தான் சாகும் வரையும் அந்த பிள்ளையை பொத்திப்பொத்தி வளர்ப்பாள்.

தான் பெறாத அன்பையும், கல்வியையும், செல்வத்தையும் தன் பிள்ளைகளுக்கு வழங்குவாள். தாயுள்ளம் என்பது அன்பைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. பிள்ளைகளின் உலகமும், அம்மாக்களின் உலகமும் வேறு வேறு. பிள்ளைகளுக்கு நண்பர்கள் தான் உலகம் என்றிருப்பர், ஆனால் தாய்க்கோ பிள்ளைகள் தான் உலகம். அவர்களின் சந்தோசத்தையும் துக்கத்தையும் தன்னுடையதாகவே கருதி, அதற்காகவே தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணிப்பவள்.

தனக்கென வாழாமல், தன் குடும்பத்திற்காகவும், அவர்களின் சந்தோசத்திற்காகவும் மட்டுமே வாழ்பவள். பிள்ளையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் சரி, பிள்ளைகளை பிரிந்து வெளியூரில் வாழ்ந்தாலும் சரி, அவர்களுடைய முழு நினைவுகளும் தன் பிள்ளைகளை சுற்றியே இருக்கும். பிள்ளைகளின் நலனை எண்ணியே வாழ்வாள், தாய். தன்னுடைய உடல் நலத்திற்காக சிறிது நேரம் கூட செலவிட மாட்டாள். தன் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், முதலில் துடிதுடித்துப்போவது தாய் மட்டுமே. இப்படி அவர்களின் தியாகங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை கூறிக்கொண்டே போகலாம். கணவன் இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி தனி ஒருத்தியாக பாடுபட்டு தன் பிள்ளைகளுக்கு உணவு, உடை ஆகியவற்றை பரிசளிப்பாள்.

பெற்றால் தான் பிள்ளையா? கருவில் சுமந்தால் தான் பிள்ளையா? என்று தாய்மார்கள் சொல்வதையும் பார்த்திருப்பீர்கள், செயலில் வெளிக்காட்டுவதையும் பார்த்திருப்பீர்கள். தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் பிள்ளைகளை அனாதை ஆசிரமத்தில் தான் அதிகம் நம்மால் காணமுடியும். நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் அலமேலு அம்மா. அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் மூன்று பேர். ஆனால் அவர்கள் குடும்பத்தில் வளர்ந்தவர்களோ 30க்கும் அதிகமான குழந்தைகள். ஆதரவற்ற, கல்விக்கட்டணம் செலுத்தமுடியாத ஆசிரமத்தில் வளரும் பெண் குழந்தைகளை வளர்ப்பதை தங்கள் கடமையாகவே செய்து வருகிறார் அதற்கு அந்த குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இப்படி போன்றவர்களால் முடிந்தது, பலராலும் முடியாதா என்ன? சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று தான்.

தாயுடன் வளரும் பிள்ளைகளை விட, தாயில்லாமல் வளரும் குழந்தைகளுக்குத்தான் அவர்களின் அருமை அதிகம் புரியும். தாய்ப்பாசத்திற்கு இணையான ஒன்று இந்த உலகில் கிடையாது, அதை யாராலும் தரவும் முடியாது. ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வெண்டுமம்மா’ - என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல் கருத்தை நினைவில் கொள்ள வேண்டிய நேரமிது. இன்றைய காலக்கட்டங்களில், தாய்ப்பாசத்தை காரணம் காட்டி, அநேக மோசடிகள் அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாமக்கல்லில் குழந்தை விற்பனை கும்பல் ஒன்று போலீசாரிடம் பிடிபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குழந்தையில்லாத தம்பதிகளிடமும் மோசடிகள் நிகழ்ந்து வருகிறது. சிலர் குடும்ப சூழ்நிலைக்காரணங்களுக்காக வாடகைத்தாயாகவும் மாறி விட்டனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி, நம் ஒவ்வொருவரிடம் தான் உள்ளது.

தாயின் கடைசி காலம் வரை அவர்களுக்கு அன்பையும், அரவணைப்பையும் தருவது, பிள்ளைகளின் பெரும் கடமை. யாருக்காகவும் அவர்களை ஒதுக்கி, முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாமல், உங்களால் முடிகிறதோ இல்லையோ, முடிந்தவரையாவது உங்களது தாய்க்கு பாசத்தை மட்டுமாவது அதிகம் பரிசளிப்போம், அவர்கள் வேண்டுவது  பிள்ளைகளின் அன்பையும் ஆதரவை மட்டுமே. இனியாவது பெற்றோர்களை குறிப்பாக தாயை, அவர்களின் கடைசி காலங்களில், பிள்ளைகள் தாயாக மாறி பார்த்துக்கொள்வோம் என இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close