[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

ஜெயலலிதா எனும் ஐகானுக்கே குறி வைக்கிறாரா கமல்?

kamal-twitts-meaning-indirect-attack-jayalalitha

குற்றவாளிகளுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் கமல் கொஞ்ச நாட்களாகவே நிறையத்தான் பேசி வருகிறார். 

கமலைப் பொருத்தவரையில் அவரது வேத வாக்குகள் ட்விட்டரில் மட்டுமே பதிவிடப்படுகின்றன. 

ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும்.  ஊக்கமது கைவிடேல் என்று ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கடந்த ஜனவரி 20ம் தேதியன்று கருத்துச் சொன்னதில் ஆரம்பித்தது கமலின் வெகுஜன ஆதரவு ட்வீட் புரட்சி.

அதில் இருந்து அவர் ட்விட்டரில் கீச்சிய விஷயங்கள் பெரும்பாலும் ஊழல் எதிர்ப்பு தொடர்பானவை.

பிப்ரவரி 8ம் தேதி ட்விட்டரில், பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம் என்று கொதித்தார்.

ஜூலை 26ல் நான் ஊழலுக்கு எதிராக இருக்கிறேன். ஒரு கட்சிக்கு எதிராக அல்ல. ஊழல் செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறேன். புரட்சியாளர்கள் சாவுக்கோ தோல்விக்கோ அஞ்சுவதில்லை என்று முழங்கினார். 

ஊழலுக்கு எதிராக நடைபெற்ற ஒரு பெரும் இயக்கத்தில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடையில் கமலை வந்து சந்தித்து விட்டுப் போனார். ஆக மொத்தம் ஊழலை எதிர்த்து கடந்த சில மாதங்களாக தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறார் கமல்.


கமலின் ட்வீட்டுகள் இப்படி ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, திடீரென்று கடந்த 9ம் தேதியன்று ஜெயாடிவியில் வருமான வரித்துறை ரெய்டு போனது. அங்கு ஆரம்பித்த சோதனை அடுத்தடுத்து சசிகலா குடும்பத்தினர் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என 187 இடங்களுக்கு பரவியது. இவை அனைத்துமே ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என பாஜகவினர் சொல்லி வந்த நிலையில், இந்தக் களேபரம் எது குறித்தும் கமல் கருத்துச் சொல்லவில்லை.

9ம் தேதி சோதனை ஆரம்பித்தது. 10ம் தேதி கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியைப் பார்த்தார். 12ம் தேதி கஜோல் அமிதாப்புடன் ஒரு செல்ஃபி. 

14ம் தேதியன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவாக ஒரு ட்வீட். அதே நாளில் என்டிஆர் விருது வாங்கிய ரஜினிகாந்துக்குப் பாராட்டு.. சான்றிதழில் சாதி குறிப்பிடத் தேவை இல்லை என்ற கேரள அரசுக்குப் பாராட்டு...இந்துத் தீவிரவாதம் பற்றிப் பேசியதற்காக அவரைக் கத்தியால் குத்துவதாக வந்த படம் குறித்த ஒரு விமர்சனம் என இப்படியாகப் பதிவுகளைப் போட்டார். 

16ம் தேதியன்று விவசாயிகளுக்கு கடன் படாதோர் யார் என்று விவசாயிகளுக்கு ஆதரவான ஒரு பதிவு போட்டார்.

அத்தோடு முடிந்தது. அடுத்த நாள் 17ம் தேதியன்று இரவு ஜெயலலிதா வீட்டிற்குள்ளேயே புகுந்தது வருமான வரித்துறை. இந்தச் சம்பவம் தமிழகத்தில் வெகுஜன மக்கள் மத்தியில் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை எனினும் ஊடகங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.  
ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனை குறித்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சிலபல கருத்துக்கள் வந்தன. கமல் மறுபடியும் 20ம் தேதி விழித்துக் கொண்டார். போட்டார் பாருங்கள் ஒரு ட்வீட். நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்னும் அளவுக்கு கொதித்து விட்டார் அமைச்சர் ஜெயக்குமார். கமல் குணாவைப் போலவே பேசுகிறார் என்று கிண்டல் வேறு செய்திருக்கிறார்.

அந்த அளவுக்கு கமல் என்ன சொல்லி விட்டார்? குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று சொல்லி விட்டார்.

இதற்கு எப்படி நடவடிக்கை எடுப்பது? குற்றவாளிகள் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றங்களில் மட்டுமல்ல வெளியிலேயே உலவக் கூடாது என்பதைத்தானே நமது அரசியல் சட்டமே சொல்கிறது? இதில் போய் எப்படி நடவடிக்கை எடுப்பது?

ஆனால் மிகவும் நாசூக்காக அமைச்சர் ஜெயக்குமார், கமல் எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார். அவர் சொல்வதில் உண்மை இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று சொல்வதே ஒரு குற்றச்சாட்டு அல்ல. அது ஒரு விருப்பம் அல்லது கருத்து அவ்வளவுதான். எனவே அதற்கு ஆதராம் தேவை இல்லை. பிறகு ஏன் ஜெயக்குமார் கொதிக்கிறார்?

அடுத்தடுத்த வரிகளில் கமல் குற்றத்தை நிரூபிக்காவிட்டால் அதுவும் குற்றமே என்கிறார். ஆராய்ச்சி மணி அடித்தாகி விட்டது என்றும் கூறுகிறார். அந்த ஆராய்ச்சி மணிதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

தமிழிசை சொல்வதைப் போல கோனார் உரையில் போய் இதற்கு அர்த்தம் தேட முடியாது. நாமே கொஞ்சம் அனுமானிக்கலாம்.

அதாவது போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை புகுந்தது பாருங்கள் அதைத்தான் ஆராய்ச்சி மணி என்று சொல்கிறார். அதைத்தான் அவர் ஆராய்ச்சி மணி என்று சொல்வதாக வைத்துக் கொண்டால், குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று அவர் ஜெயலலிதாவையே அல்லது ஜெயலலிதாவின் அரசு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களையே கிண்டிப் பார்க்கிறாரோ எனத் தோன்றுகிறது.

ஆனால் இப்படிக் கிண்டுவது அரசியலுக்கு வர விரும்பும் யாருக்கும் தேவையானதே. தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டுமெனில் பாஜக மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு வேண்டும்(தமிழ் பூமி அப்படி). அந்த விஷயத்தில் கமல் ஏற்கனவே பாஸாகி விட்டார். அவருக்கு இந்துத்துவ எதிரி என பாஜக ஆட்களால் சான்றிதழ் கொடுக்கப்பட்டு விட்டது.(ஆனால் கமல் இந்துத்துவ எதிரியா அல்லது வைணவ ஆதரவாளரா என்று ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அது தனி)

அடுத்து ஆளும் அதிமுக அணியினரை எதிர்க்க வேண்டும். அந்த எதிரியும் ஒரு வலிமையான எதிரியாக இருக்க வேண்டும். எடப்பாடி சசிகலா போன்றவர்களையெல்லாம் தாண்டி ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேசுவது என்று ஆரம்பித்து விட வேண்டியதுதான் என கமல் இறங்கி இருக்கலாம்.

ஏனெனில் ஒரு கதாநாயகனின் பவரும் பெருமையும் அவனது வில்லன் எந்த அளவுக்கு பவரும் பெருமையும் உடையவனாக இருக்கிறானோ அதைப் பொருத்தே அமைகிறது. ஒரு திரைக்கதை ஆசிரியரான கமலுக்கு அது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இவை எல்லாமே நாமே தயார் செய்த கோனார் உரை தெளிவுரைகள். இதை வைத்துக் கொண்டு கமல் இதற்கு எதிராகவோ ஆதரவாகவோ ஒரு பதவுரை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close