[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்து வந்த பாதை

gst-rollout-from-1986-to-2017-a-timeline

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலானது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மணி அடித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர். 

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்து வந்த பாதை..

பிப்ரவரி 1986: 1986-87 பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

2000: ஜிஎஸ்டி என்ற புதிய சொல் பதத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் வாஜ்பாய்,  ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான மாதிரியை உருவாக்க மேற்குவங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார். 

2003: விரி சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க விஜய் கேல்கர் தலைமையில் குழு ஒன்றினை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அமைத்தது. 

2004: ஏற்கனவே உள்ள வரி விதிப்பு முறைக்குப் பதிலாக நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமலாக்கலாம் என்று அப்போதைய நிதியமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் அரசுக்கு பரிந்துரை செய்தார். 

பிப்ரவரி 28, 2006: நாடாளுமன்ற பட்ஜெட் உரையில் முதல்முறையாக ஜிஎஸ்டி என்ற வார்த்தை இடம்பெற்றது. ஏப்ரல் 1, 2010க்குள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

2008: மாநில நிதியமைச்சர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. 

ஏப்ரல் 30, 2008: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்த மாதிரி மற்றும் செயல் திட்டம் என்ற தலைப்பில் அந்த கமிட்டி, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 

நவம்பர் 10,2009: ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து மக்கள் கருத்துகள் தொடர்பான அறிக்கையை கமிட்டி சமர்ப்பித்தது. 

2009: தாஸ்குப்தா தலைமையிலான குழு வடிவமைத்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கான அடிப்படை கட்டமைப்பினை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை 2010ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

2009: ஜிஎஸ்டி வரிவிதிப்பு அடிப்படை கட்டமைப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. 

பிப்ரவரி 2010: ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கில் மாநிலங்களில் வணிக வரிவிதிப்புகளை கணினி மயமாக்கும் முயற்சியை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான காலக்கெடுவினை 2011ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு மாற்றுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். 

மார்ச் 22, 2011: ஜிஎஸ்டி வரி விதிப்பை  அமல்படுத்துவதற்காக 115ஆவது அரசியலைமைப்பு சட்டத்தில் திருத்தத்தை  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தியது. 

மார்ச் 29, 2011: யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜிஎஸ்டி மசோதா பரிந்துரைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மாதிரி உருவாக்கத்துக்கான குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அசிம் தாஸ்குப்தா பதவி விலகினார். அவருக்கு பதிலாக அன்றைய கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி நியமிக்கப்பட்டார். 

நவம்பர் 2012: மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்காக, அது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் டிசம்பர் 31, 2012க்குள் முடிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. 

பிப்ரவரி 2013: ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக பட்ஜெட் உரையில் அறிவித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி அமலானால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 2013: ஜிஎஸ்டி மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதிவிவகாரங்களுக்கான நிலைக்குழு சமர்ப்பித்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்தது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தட தயாரானது. 

அக்டோபர் 2013: ஜிஎஸ்டி அமலானால் நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.14,000 கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி எதிர்ப்புத் தெரிவித்தார். 

2014: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவால் ஜிஎஸ்டிக்கு ஏற்பட்ட தடை நீங்கியது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. 

டிசம்பர் 18, 2014: ஜிஎஸ்டி அமலாவதற்கான அரசியலமைப்பு சட்டத்தின் 122ஆவது சட்டதிருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

டிசம்பர் 19,2014: அரசியலமைப்பு சட்டத்தின் 122ஆவது திருத்தம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. 

பிப்ரவரி 2015: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2016 ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலக்கெடு நிர்ணயித்து அறிவித்தார்.

மே 6, 2015: ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேறியது. 

மே 12, 2015: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதிகபட்ச வரி விதிப்பு 18 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. 

மே 14, 2015: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒப்புதலுக்காக ஜிஎஸ்டி மசோதா அனுப்பப்பட்டது. 

ஆகஸ்ட் 2015: மாநிலங்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு போதிய ஆதரவு இல்லாததால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. 

ஆகஸ்ட் 2016: ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. 

ஆகஸ்ட் 3, 2016: மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. 

செப்டம்பர் 2, 2016: ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் 16 மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேறியது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். 

செப்டம்பர் 12, 2016: ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

செப்டம்பர் 22-23, 2016: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் முதல்முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூடியது. 

நவம்பர் 3, 2016: 5,12,18 மற்றும் 28 என 4 விதமான வரி விதிப்பு முறைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதுதவிர ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

ஜனவரி 16, 2017: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அருண் ஜெட்லி அறிவித்தார். 

பிப்ரவரி 18, 2017: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாவதால் ஏற்படும் இழப்புகளை மாநிலங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான மசோதாவினை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்தது. 

மார்ச் 4, 2017: ஜிஎஸ்டி மசோதாவின் துணை மசோதாக்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. 

மார்ச் 20, 2017: ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மற்றும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மார்ச் 27, 2017: ஜிஎஸ்டியின் 4 துணை மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

மே 18, 2017: 1,200க்கு மேற்பட்ட பொருட்களுக்கான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி விதிப்பு 5 சதவீதமாகவோ அல்லது வரி ஏதும் இல்லை என்ற பிரிவின் கீழ் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

மே 19, 2017: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.

ஜூன் 21: ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மாநில ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜூன் 28: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவைப் புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார். 

ஜூன் 29: ஜிஎஸ்டி அறிமுக விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்தன. 

ஜுலை 1: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலானது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close