[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு? 

indian-political-parties-need-to-bring-emphasizing-proportional-representation-in-election

இந்திய ஜனநாயகம் என்பது தேர்தல் முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கான வாக்குரிமையை அளித்துள்ளது. ‘ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்பதுதான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படை என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்பது சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் நமது தேர்தல் முறையில் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார்’என்ற தேர்தல் முறையில் (FPTP) ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ  அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத்தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன. இதனால் எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது. அவர் நினைத்த அரசியல் சமத்துவம் என்பது அதனால்தான் எட்டப்படாமலேயே தொலைதூரக் கனவாக உள்ளது.

தேர்தலில் பதிவு செய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமெனில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறைதான் உகந்தது என்ற வாதம் 1930 ஆம் ஆண்டிலேயே ஜவஹர்லால் நேருவால் முன்வைக்கப்பட்டது. “பல்வேறு சமூகங்களின் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்யவேண்டுமெனில் அதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே பொருத்தமானது”என அவர் கூறினார். அரசியலமைப்புச் சட்ட அவையில் மெஹ்பூப் அலி பேக் சாஹிப் பஹதூர், காஸி ஸையத் கரிமுதீன் ஆகிய இரு உறுப்பினர்கள்‘சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே சிறந்தது’ என்று வாதிட்டனர். ஆனால் அது அங்கே ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்றுவிட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதை பரிந்துரை செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பியாக இருந்த ஜி.எம்.பனத்வாலா விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை வலியுறுத்தி தனிநபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். 
 
இந்திய சட்ட ஆணையம் இங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென 1999 ஆம் ஆண்டு பரிந்துரை செய்து விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும் என்பவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை உதாரணமாகக் காட்டுகிறார்கள். அதில் பதிவான வாக்குகளில் 31% வாக்குகளை பாஜக பெற்றது. அது இந்திய மக்கள் தொகையில் 14% தான். வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அது 20% தான் வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 69% பாஜகவுக்கு எதிராக இருந்தாலும் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மைபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. 

அதுமட்டுமின்றி 2014 பொதுத்தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 20% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்பி இடம் கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 27% வாக்குகளைப் பெற்றது. ஆனால் அது ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஒடிஷாவில் காங்கிரஸ் கட்சி 26% வாக்குகளைப் பெற்றது. அங்கு அக்கட்சிக்கு ஒரு எம்பி இடமும் கிடைக்கவில்லை. மேற்குவங்கத்தில் இடதுசாரி கூட்டணி 30% வாக்குகளைப் பெற்றபோதும் அதனால் இரண்டு எம்பி இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. 

இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது தற்போதுள்ள தேர்தல் முறையில் மிகப்பெரிய கோளாறு உள்ளது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் முன்னாள் தேர்தல் ஆனையர் டி.எச்.கிருஷ்ணமூர்த்தி இங்கே விகிதாச்சார தேதல் முறை வேண்டும் என வலியுறுத்தினார். முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷியும் ‘2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20% வாக்குகளை வாங்கியிருந்தாலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதைப் பார்த்த பின் ஜெர்மனியில் இருப்பதைப்போல விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே இந்தியாவுக்கும் உகந்தது’ என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். 

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என அரசியலமைப்புச் சட்ட அவையில் குரல்கள் எழுந்தபோது அது எஸ்சி எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்கிவிடும் என்பதற்காகவே அம்பேத்கர் அதை மறுத்தார். 1932 ஆம் ஆண்டு காந்தியடிகளோடு போடப்பட்ட பூனா ஒப்பந்தத்தால் எஸ்சி எஸ்டி மக்களுக்கு வென்றெடுக்கப்பட்ட அந்த அரசியல் உரிமையைக் கைவிட முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒருவேளை இட ஒதுக்கீட்டுடன்கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை யாராவது பரிந்துரைத்திருந்தால் அப்போதே அது அவரால் பரிசீலிக்கப்பட்டிருக்கக்கூடும். 

தேர்தல் ஆணையர்களும், சட்ட ஆணையமும் மட்டுமல்ல; இடதுசாரி கட்சிகளும், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இந்திய குடியரசுக் கட்சி, லோக் ஜனசக்தி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பலவும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டுமென வலியுறுத்துகின்றன. 2008 ஆம் ஆண்டு இதற்கென துவங்கப்பட்ட ‘இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்தத்திற்கான பிரச்சார அமைப்புடன்’ (CERI) ஒன்றிணைந்து இக்கட்சிகள் இது தொடர்பாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. 

பெரும்பான்மை ஆட்சி என்பதை பெரும்பான்மைவாத ஆட்சியாக உருமாற்றிவிட முடியும் என்ற ஆபத்தை இந்தியா இன்று சந்தித்து வருகிறது. இந்நிலையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்கிற அரசியல் சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அது தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையால் நிறைவேற்றப்படாது. எனவேதான், 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும் 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வுச் செய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் கொண்டு வரவேண்டுமென இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 

தேர்தல் ஜனநாயகம் முழுமையான பொருளில் செயல்பட வேண்டுமெனில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப விதிகளை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன. 


 
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் பிரதிநிதிகள் பட்டியலில் எஸ்சி எஸ்டி மக்களுக்கு தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதோடு ஐம்பது விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்பதையும் சட்டமாக்க வேண்டுமென அவை வலியுறுத்துகின்றன.

ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதில் ஆர்வம் காட்டும் பாஜக இந்த ஆலோசனைகளை ஏன் பொருட்படுத்தவில்லை? என்பது சிந்திக்கவேண்டிய கேள்வியாகும். 1932 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் 33.1% வாக்குகளைப் பெற்றே ஹிட்லர் அந்நாட்டின் அதிபராக வந்தார். அதனால் ஏற்பட்ட அழிவை சந்தித்த அனுபவத்தில் 1949 ஆம் ஆண்டே அந்த நாட்டில் விகிதாச்சார தேர்தல் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது. தற்போது நரேந்திர மோடி 2014 பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் வெறும் 31% வாக்குகளை மட்டுமே பெற்று இந்தியாவின் பிரதமராக வந்திருக்கிறார். அதன் விளைவுகளை நாடு சந்தித்துவருகிறது. ஜெர்மனியைப்போல இந்தியாவும் தனது தேர்தல் முறையை சீர்த்திருத்திக்கொள்ள இதைவிடப் பொருத்தமான நேரம் வேறொன்று இருக்கமுடியாது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close