'அசுரன்' படத்தில் திருநெல்வேலி வட்டார வழக்கில் டப்பிங் பேசி, பாஸ்மார்க் வாங்கியிருக்கிறேன்’ என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே அருணாசலம், கென் கருணாஸ் உட்பட பலர் நடித்த படம், ’அசுரன்’. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்தப் இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இந்தப் படத்தில் திருநெல்வேலி வழக்கில் பேசி, பாஸ்மார்க் வாங்கியிருக்கிறேன் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தமிழில் தாமதமாக அறிமுகமானதாக நினைக்கவில்லை. தமிழில் நடிக்க அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. சரியான கேரக்டருக்காகக் காத்திருந்தேன். ’அசுரனி’ல் என் கேரக்டர் நன்றாக இருந்ததால் சம்மதித்தேன். இந்தப் படத்தில் திருநெல்வேலி வழக்கில் பேசி நடித்திருக்கிறேன். நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவள்தான். 10 வயதுவரை அங்குதான் இருந்தேன்.
அதனால் நன்றாகத் தமிழ்ப் பேசினாலும், திருநெல்வேலி வழக்கு எனக்கு கடினமான ஒன்று. ஆனால், இயக்குனர் வெற்றி மாறன், அந்தந்த கதாபாத்திரங்கள், அவர்களே டப்பிங் பேசினால் நல்லது என்றார். அதனால் முயற்சி செய்தேன். வெற்றி மாறன் ஊக்கம் கொடுத்தார். எழுத்தாளர் சுகா, என்னைத் திருநெல்வேலி வழக்கில் பேச வைத்தார். நான் பலமுறை சரியாகப் பேசாமல் தவறு செய்திருக்கிறேன். அதை பொறுமையாகத் திருத்தினார் அவர். அதனால், நூறு சதவிகிதம் சிறப்பாகப் பேசியிருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.