[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

''கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்'' - பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!

music-director-yuvan-s-birth-day-special-article

காலக்கோடு கொண்டு பிரித்தால் 1997க்கு முன் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா போன்ற ஆளுமைகளால் ஆளப்பட்டது தமிழ் இசை உலகம். அதற்கு பிறகான இசை உலகில் தன் பாதத்தை அழுத்தமாகப் பதித்தவர் யுவன் சங்கர் ராஜா. தந்தை பெரிய இசையமைப்பாளர் என்றாலும் அவரிடம் இருந்து இசை ஞானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு தன்னை தானே உருவாக்கிக் கொண்டவர் . 

90 கிட்ஸ் என்று சொல்லக்கூடிய இளம்வர்க்கத்தினர் அதிகம் ரசித்த பாடல்களில் யுவனின் பங்கு அதிகம். 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் வரும் 'இரவா பகலா' பாடலை கடந்து வராதவர்கள் எவரேனும் உண்டா? இன்றும் அந்த பாடலில் காதலின் ஏக்கமும், சோகமும் வழிந்தோடுகிறது என்பது யுவனின் இசைக்கே உரித்தானது. 'நந்தா'படத்தின் 'முன்பனியா' பாடல் இன்றும் காலம் கடந்து துளிர்விட்டுக்கொண்டே தான் இருக்கிறது. மொழியும், காட்சியும், இசைந்து நிற்கும் அந்தப்படலுக்கு உருகாதவர்கள் யாரும் இல்லை. 

யுவனை மெலடி நாயகன், போக் இசை மன்னன் என்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கிவிடவே முடியாது. ஒரே படத்தில் பல வகையான பாடல்களை கொடுத்து திக்குமுக்காட செய்வது யுவனின் ஸ்டைல். ஒரே படம் என்பதை தாண்டி ஒரே பாடலில் 3 வகையை காட்டி 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் பாடல் மூலம் அனைவரையும் அசர வைத்தார் யுவன். அந்த பாடலில் மெலடி, ஸ்டைலிஷ், ஃபோக் என மூன்று கதாநாயகிகளுக்கு மூன்று விதமான இசையை கொடுத்திருப்பார் யுவன். கிட்டத்தட்ட மூன்று கதாநாயகிகளின் பின்னணியை ரசிகர்களுக்கு கடத்த அந்த ஒரே பாடல் போதுமானதாக இருக்கும். அது தான் யுவனின் வெற்றி.

காதலுக்கு, நட்புக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு, சோகம், ஏக்கம், கொண்டாட்டம் என அனைத்து தரப்பிலும் யுவனின் பங்கு உண்டு. நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் யுவனின் பாடல்கள் நமக்கு துணையாகவே வரும். பாடல்களுக்கான இசை மட்டுமே இல்லை. பின்னணி இசையிலும், மாஸ் பிஜிஎம்களில் யுவன்  தனித்து நின்றவர். 

அஜித்துக்கு மாஸ் பிஜிஎம் என்றாலே யுவனின் பெயர் தான் முதலில் வரும். மங்காத்தா, பில்லா போன்ற பெரிய படங்களுக்கு மாஸ் காட்டிய யுவன், அதே நேரத்தில் முகம் தெரியாத சிறிய ஹீரோக்களும் அதே தரத்தில் இசையை கொடுப்பார். பல படங்கள் யுவனின் இசை மூலமே வெளியே தெரிந்த கதைகளும் உண்டு. இசையமைப்பாளர் என்பதை தாண்டி யுவன் தன் குரலால் அனைவரையும் வசீகரித்த பாடகரும் கூட. யுவன் குரலில் காதல் பாடல்கள் என்பது காதலைவிடவும் சுகமானவை.

திரையுலகில் சில கூட்டணிகளுக்காக ரசிகர்கள் ஏங்கி கிடப்பார்கள். அப்படியான கூட்டணியும் யுவனைச் சுற்றி உருவானது. செல்வராகவன் - நா.முத்துக்குமார் - யுவன் கூட்டணி, ராம் - நா.முத்துக்குமார் - யுவன் என இசைக்காகவே பல கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிகள் பாடல்களை சொல்லி வைத்து ஹிட் கொடுத்தன. ஒரு படத்தில் 5 பாடல்கள் என்றால் ஐந்துமே தரம் என்ற கைதட்டலை உருவாக்கிய கூட்டணியை யுவன் அமைத்துக்கொண்டார்.

பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், ஏப்ரல் மாதத்தில், புன்னகை பூவே, மெளனம் பேசியதே, நந்தா, மன்மதன், 7g ரெயின்போ காலனி, தாஸ், அறிந்தும் அறியாமலும், ராம், வல்லவன், பட்டியல், புதுப்பேட்டை, கற்றது தமிழ், தீபாவளி, சென்னை28, பில்லா ,பருத்திவீரன், சத்தம் போடாதே, யாரடி நீ மோகினி,  சரோஜா, சர்வம், பையா,குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், சிவா மனசுல சக்தி, பாணா காத்தாடி, தங்க மீன்கள் என யுவன் கொடுத்த ஹிட் ஆல்பம் நீளமானவை.

தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படும் இசையே உயிரோட்டமானதாகிறது. அந்த வகையான உயிரோட்ட இசையை கொடுப்பதில் யுவனின் பெயரும் நிச்சயம் இடம் பிடித்திருக்கிறது. 

தரமணி படத்தில் யுவனின் இசையில் நா.முத்துக்குமார் எழுதி இருப்பார்,

''வழிப்போக்கன் வாழ்விலே நிழலாக வருகிறாய்,
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்''

இது நிச்சயம் யுவனுக்கு பொருத்தமான வரிகள்.

இசையோடு பல்லாண்டு வாழுங்கள் யுவன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close