[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

அசல் மனிதர்களின் அசல் சினிமா ! மேற்குத்தொடர்ச்சி மலை - திரைவிமர்சனம்

merkuthodarchi-malai-film-is-a-rare-of-tamil-cinema-review

அரசியலை வசனங்களாக மட்டுமே பேசும் படங்களுக்கு மத்தியில் காட்சி படிமங்களாக மக்கள் மொழியோடு பதிவு செய்திருக்கும் திரைப்படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமான கோம்பை எனும் கிராமத்தில் இருந்து தொடங்கி மலை முகடுகள் கடந்து ஒற்றையடி பாதைகளில் சுமை தூக்கும் மனிதர்களுடனேயே பயணிக்கிறது படம். காலம் காலமாக கூலியாக வாழ்ந்து கழிக்கும் தலைமுறையில், நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் எனும் பேராசையுடன் பொருள் சேர்க்கிறான் கதையின் நாயகன் ரங்கசாமி. ஆனால், நெருங்கி வரும் வாய்ப்புகள் விலகிவிட ஒருகட்டத்தில் தானாகவே கைவந்து சேருகிறது கனவின் நிலம். 

ஆனால், அந்த கனவு முழுமை அடைகிறதா? எனும் கேள்வியை சமூகத்தை நோக்கியே வீசி எறிகிறது திரைப்படம். இதுவரை நாம் அறிந்தேயிராத மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களை அந்த மண்ணின் மைந்தன் எனும் கர்வத்தோடு திரை வழி அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. ஒரு கதையை அந்தக் களம் ஒட்டி திரைக்கதையாக மாற்றிய திறமையும், அதில் அந்த மண்ணின் மனிதர்களையே உலவவிட்ட துணிச்சலும் பெரும் பாராட்டுக்குரியது. 'கதாப்பாத்திரங்களின் தேர்வு படத்தில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. அந்தந்தப் பகுதி மனிதர்களில் கதைக்கு தகுந்தவர்களை தேர்வு செய்து யதார்த்த பதிவாக்கியிருக்கிறார் லெனின் பாரதி. 

அதுவும், ஈஸ்வரி, கழுதைக்கார மூக்கையா, வனகாளி, ‘சகாவு’ சாக்கோ, கங்கானி, மனநலம் பாதித்த பாட்டி என பாத்திர நேர்த்தியில் அந்த மனிதர்கள் உன்னதம் காட்டி விடுகிறார்கள். சாமனியர்களுக்குள் ஒட்டியிருக்கும் ஈரமும் படம் முழுக்க விரவி ‘பாசிடிவ் எனர்ஜி’யை பார்ப்பவர்களுக்குள்ளும் பரப்பி விடுகிறது. “கழுதையும் நானும் இருக்குற வரைக்கும் நாங்க இப்படித்தான் சுமப்போம்”, “ஒரு கம்யூனிஸ்ட் அப்பறம் பாத்துக்கலாம்னு சொல்லக்கூடாது”, “ரோடு வந்துச்சுன்னா மெஷின் வந்து, மக்களுக்கு வேலை இல்லாம போய்டும்” என உரையாடல்களின் உண்மை யோசிக்கும்போது வலிக்கவும் வைக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. கதையோட்டத்தில் இருந்து துளியும் விலகாமல் காட்சி கவிதையாக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக சுமை தூக்கும் முதியவர் ஒருவர், அடை மழை நாளொன்றில் ஏலக்காய் மூட்டை சுமந்த கதையை சொல்ல சொல்ல மேல் நோக்கி கேமரா எழும்பி வளைந்து நெளிந்து செல்லும் பாதையையும், வனத்தையும் காட்டி மனம் கனக்க வைக்கிறது. மு. காசிவிஸ்வநாதனும் தன்மையறிந்து படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இளையராஜா இசை ஞானியாய் கொண்டாடப்படுவதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’. எந்த வணிக சமரசமுமின்றி உண்மையான ஒரு பதிவு திரைக்கு வர உதவிய தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். ரஜினிகாந்தின் ‘காலா’ கமர்ஷியலாக பேசிய நில உரிமையை, எந்தவித சத்தமுமின்றி அடக்கமாகவும், வலிமையாகவும் கள யதார்த்தத்தோடு பதிவு செய்திருக்கிறது ‘மேற்கு தொடர்ச்சி மலை’. அதிகாரம் சாமானியனை எப்படி வேண்டுமானாலும் துண்டாடும் என்பதை பேசும் இந்தப் படத்திற்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close