Published : 24,Jul 2017 02:03 PM
பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த வேண்டும்: நடிகை சார்மி நீதிமன்றத்தில் வழக்கு

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரிகள் குழு முன் ஆஜராக எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடிகை சார்மி வழக்குத் தொடர்ந்து உள்ளார்.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகை சார்மி கடந்த 21ம் தேதியே விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும். அதை அவர் தவற விட்டதால் வரும் 26ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிராக சார்மி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ரத்த மாதிரி, தலைமுடி, நகம் போன்றவற்றை வலுக்கட்டாயமாக விசாரணை அதிகாரிகள் கேட்டுப்பெறுகின்றனர். இது சட்டத்திற்கு எதிரானது. என்னிடம் விசாரணை நடத்தும்போது எனது வழக்கறிஞர் என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், பெண் அதிகாரிகள் மட்டுமே என்னிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.