Published : 10,Apr 2021 04:02 PM
கேப்டனாக 110 வெற்றி - அடுக்கடுக்கான ஐபிஎல் சாதனைகள்: ரசிகர்களை வசியப்படுத்திய தோனி

மவுனமாக உத்திகளை வகுத்தாலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் மலைக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளவர் தோனி. தல தோனியின் சில சாதனைகளை பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன் நடைபெற்ற 14 சீசன்களில், சென்னை அணி விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த இரு சீசன்களில் ஒரு சீசன் தவிர்த்து அனைத்து தொடர்களிலும் கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. 14 சீசன்களில் சென்னை அணியை 3 முறை கோப்பையை வெல்ல வைத்த பெருமைக்குரியவர். ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர். 13 சீசன்களில் அதிகத் தொகையை ஈட்டிய வீரராகவும் அவர் இருக்கிறார்.
ஐபிஎல் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறார் தல தோனி. முதல் சீசனில் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், முந்தைய சீசனில் 15 கோடி ரூபாய்க்கு சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டார். முதல் சீசனோடு ஒப்பிடுகையில் 150 சதவீதம் வருவாய் உயர்வு பெற்றிருக்கிறார் தோனி.
9 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய பெருமை தோனிக்கு உண்டு. இதில் சென்னை அணிக்காக 8 முறையும், ரைசிங் புனே ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒருமுறையும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சொந்த மைதானத்தில் கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக ஜொலிக்கிறார் தோனி.
கேப்டன் பொறுப்பில் அதிக வெற்றிகளை ஈட்டிய வீரரும் அவரே. 110 வெற்றிகளை ஐபிஎல் தொடர்களில் ஈட்டியுள்ள தோனி, சென்னை அணியை மட்டும் 105 ஆட்டங்களில் வெற்றி பெற வைத்துள்ளார். பெஸ்ட் ஃபினிஷர் என போற்றப்படும் ஆட்டத்தின் 20 ஆவது ஓவரில் குவித்த ரன்கள் மலைக்க வைக்கிறது. 13 சீசன்களில் இருபதாவது ஓவரில் மட்டும் மொத்தம் 564 ரன்களை குவித்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கைரன் பொல்லார்ட் 281 ரன்களையே எடுத்து பெரிய இடைவெளியில் நிற்கிறார்.
118 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள தோனி, சென்னை அணிக்காக மட்டும் 105 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் வெற்றியை ஈட்டிய ஒரே கேப்டனும் தோனியே. இந்த சாதனைகள் பத்தாது என்று மொத்தமாக விளையாடியுள்ள 204 போட்டிகளில் 197 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இதில் 152 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்து சாதனைக் களத்தில் ஜொலிக்கிறார் தல தோனி.