[X] Close

போதைப்பொருள் வழக்கு: தப்ப முயன்ற பாஜக பிரமுகர்... ஸ்கெட்ச் போட்டு பிடித்த மே.வ போலீஸ்!

இந்தியா

BJP-leader-Rakesh-Singh-held-in-Pamela-drug-case-in-West-Bengal

மேற்கு வங்கத்தில் கடந்த 20-ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட சென்ற அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமியின் காரை போலீசார் சோதனையிட்டனர். அதில், அவரது காரில் இருந்து 100 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டது. சில லட்சங்கள் மதிப்புமிக்க இந்த கொக்கைனை அவரது மணி பர்ஸிலும், கார் சீட்டுக்கு கீழும் இருந்ததை போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர். இதையடுத்து, கொகைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் பயணித்த காரில் அவருடன் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், பாமெலா கோஸ்வாமியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவர் மற்றொரு பாஜக பிரமுகரை கைகாட்டினார். போலீஸ் விசாரணையின்போது பாமெலா கோஸ்வாமி, "என் கட்சியை சேர்ந்த ராகேஷ் சிங்கின் ஆட்கள்தான் எனது காரில் கொக்கைன் பைகளை வைத்துள்ளனர். நம்பகமான ஆதாரங்களில் இருந்து எனக்கு தகவல் உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு ஆடியோவை பதிவு செய்தேன்" என்று தெரிவித்தாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டது.

image


Advertisement

இந்தத் தகவல்களின் அடிப்படையில், கொல்கத்தாவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள புர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள கால்சியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங்கை மேற்கு வங்க போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இவரின் கைது தொடர்பாக பேசிய மேற்கு வங்க காவல் அதிகாரி ஒருவர், ``கால்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகாபாயிண்ட் ஒன்றில் சிங் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் ஒரு காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவருக்கு சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர்.

அவர் தப்பிக்க முயன்றதாக தெரிகிறது. நாங்கள் ஏற்கெனவே அவரைத் தேடத் தொடங்கினோம் என்பதை உணர்ந்த அவர், வேறொரு வாகனத்திற்கு மாறினார். அவர் கைது ஆவதை தவிர்க்க முயன்றார். நேற்று முன்தினம், போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த ராகேஷ் சிங், டெல்லிக்கு செல்லவிருப்பதாகவும், திரும்பி வந்தபின் அவர்கள் முன் ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார்.

முதலில் அவர் வீட்டில் இருந்து கிளம்பியபோது, எஸ்யூவி காரில் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், கைது செய்யப்படும்போது வேறு ஒரு காரில் இருந்தார். அதேபோல் தனது மொபைலையும் சுவிட்ச் செய்துவிட்டார். எனினும் இறுதியாக அவரது தொலைபேசி சிக்னல் காண்பித்த இடத்தை வைத்து அவரைக் கண்காணிக்க முடிந்தது. அனைத்து மாவட்டங்களின் காவல்துறையினரும் எச்சரிக்கப்பட்டு, இறுதியாக அவர் இரவு 8 மணியளவில் பூர்பா பர்தாமனில் உள்ள கால்சியில் கைது செய்யப்பட்டார்" என்று விரிவாக கூறினார்.

image

முன்னதாக, ராகேஷ் சிங்கை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் இரு மகன்களும் சோதனை செய்வதை தடுத்தனர். இதனால் வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டில் அவரது இரு மகன்களையும் காவல்துறையின் போதைப்பொருள் பிரிவினர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்த இந்த கைது, மேற்கு வங்க பாஜகவில் தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 2019-ல் பாஜகவில் சேருவதற்கு முன்பு, ராகேஷ் சிங் காங்கிரஸில் இருந்தார். கொல்கத்தா துறைமுக தொகுதியில் இருந்து 2016-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் ராகேஷ். ஆனால், திரிணாமுல் காங்கிரஸிடம் தோற்றார். அவர் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close