Published : 16,Feb 2021 06:02 PM

திரையும் தேர்தலும் 6: 'பராசக்தி'க்கும் 'மனோகரா'வுக்கும் இடையே சில ஏமாற்றங்கள்!

Parasakthi-to-Manohara--Tamil-Cinema-and-Politics

'பராசக்தி' படம் பத்தாயிரம் அடிக்கு மேல் எடுக்கப்பட்ட பிறகு, அதை மெய்யப்பச் செட்டியார் போட்டுப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைக் கண்டு திருப்தி அடைந்தார். அதன்பின்னர் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட ஏழாயிரம் அடி படத்தை மொத்தமாக வெட்டி எறிந்துவிட்டு மீண்டும் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, அதை எடுத்து முடித்தனர். 1952 அக்டோபர் 17-ஆம் தேதி 'பராசக்தி' வெளியானது. "வாழ்க வாழ்கவே... வாழ்க வாழ்கவே... வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே..." என்ற பாரதிதாசன் பாடலோடு படம் தொடங்கியது. திரையரங்குகள் அதிர்ந்தது என்று சொல்வார்களே அதற்கான முழு அர்த்தமும் படம் பார்த்தவர்கள் உணர்ந்தார்கள்.

மு.கருணாநிதியின் வசனங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒன்றாக இருந்தது. சின்னச் சின்ன வசனங்களில் இருந்து, இறுதிக்காட்சியில் நீதிமன்றத்தில் குணசேகரன் பேசும் வசனங்கள் வரை எல்லாவற்றிலும் பகுத்தறிவுக் கருத்துக்களும், கடவுள் மறுப்பு விஷயங்களும் கொட்டிக் கிடந்தன. மக்கள் அதை அள்ளிப் பருகினர். திராவிட கட்சியின் பெரும் எழுச்சிக்கான விதை ஏற்கெனவே பல்வேறு அரசியல் மேடைகள் மூலம் போடப்பட்டிருந்தாலும் கூட, திரையில் அதை 'பராசக்தி' வடிவத்தில் சொல்கையில் இன்னும் அதன் எழுச்சியும், மக்களிடம் போய்ச்சேரும் விதமும் பன்மடங்கு அதிகமாக இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

image

இதன்பின் மு.கருணாநிதி வசனம் எழுதிய 'பணம்' என்றொரு படம் அதே 1952-ல் வெளிவந்தது. "பணம்... மோகனமான மூன்றெழுத்துப் பெயர்! முட்டாள்களின் மஞ்சத்தில் கொஞ்சுவாள்! முரடர்கள் கையில் சிக்குவாள்!" போன்ற அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த படம். அந்தப் படத்தில் திருக்குறள் முன்னணிக் கழகம் என்ற கற்பனையான ஒன்றை கலைவாணர் சித்தரிந்திருந்தார். அந்த திருக்குறள் முன்னணிக் கழகத்தின் பெருமைகளை விளக்கி ஒரு காட்சியில் கலைவாணர் பாடுவார்.

"தீனா மூனா கானா எங்கள்
தீனா மூனா கானா...
திருக்குறள் முன்னணிக் கழகம்
அறிவினைப் பெருக்கிடும்
உறவினை வளர்த்திடும்
தீனா மூனா கானா..."

என்கிற அந்தப் பாடல் முதல் முறையாக திமுகவின் பேர் சொல்லும் திரைப் பாடலாக அமைந்தது.

திராவிட கட்சியினர் தமிழின் மீது பெரும் பற்று கொண்டிருந்ததை நாம் அறிவோம். இந்தித் திணிப்பு எதிர்ப்பு திராவிடக் கட்சியின் மிக முக்கியமான கொள்கையும் கூட. அந்தத் தமிழ் ஆர்வத்தை மறைமுகமாக எதிர்க்குமாறு வி.நாகையா என்பவர் தனது 'என் வீடு' என்ற படத்தில் வேணுமென்றே இரண்டு இந்திப் பாடல்களை சேர்த்திருந்தார். இப்படியெல்லாம் கூட ஒருவித எதிர்ப்பு அரசியல் திராவிடக் கட்சிளுக்கு எதிராக நடந்துகொண்டுதான் இருந்தது.

இந்நிலையில், எம்ஜிஆரும் மு.கருணாநிதியும் இணைந்து மேகலா பிக்ச்சர்ஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்கள். இந்த மேகலா பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர் பி.எஸ்.வீரப்பா மற்றும் இயக்குனர் காசிலிங்கம் ஆகியோரும் பங்குதாரர்கள். இவர்கள் ஜூபிடர் பிக்ச்சர்ஸுடன் சேர்ந்து 'நாம்' என்றொரு படம் தயாரித்தனர். எம்ஜிஆர் நாயகன். கருணாநிதி கதை - வசனம். இவர்கள் கூட்டணி என்பதால் படத்தில் திமுக பிரசாரம் வலுவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்றால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. சொந்தப் படம் என்பதாலோ என்னவோ காட்சிகளிலும் வசனங்களிலும் சற்று அடக்கியே வாசித்திருந்தனர். மக்கள் ஏமாற்றமடைந்தனர். சுமாராகவே ஓடியது படம்.

image

இதற்கிடையில், ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 1953 ஏப்ரல் மாதத்தில் 'ஜெனோவா' என்றொரு படம் வெளிவந்தது. பைபிளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்துவ பக்திக் கதை இது. இதில் நாயகனாக நடித்தவர் எம்ஜிஆர். ஊரே எம்ஜிஆர் திராவிடக் கட்சியை சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்க, தீவிர கடவுள் மறுப்புக்கு எதிராக பக்தி படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த நகைமுரணை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் உதவும்.

இன்னொருபுறம் மு.கருணாநிதியும் சிவாஜியும் 'பணம்', 'திரும்பிப் பார்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். 'பராசக்தி' எதிர்பார்த்து திரையரங்கு சென்ற மக்களுக்கு இந்தப் படங்கள் சற்று ஏமாற்றமே அளித்தன. அருணகிரிநாதரின் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட 'திரும்பிப் பார்' படம் பலத்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும் கூட எடுபடாமல் போனது. இது இப்படியிருக்க, ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ்.வாசன் வேறு ஒரு யோசனையில் இருந்தார். அது 'அவ்வையார்' கதையை படமாக்குவது.

ஏற்கெனவே 'சந்திரலேகா'வில் உலக பிரமாண்டம் கொடுத்த அவர், அதைவிட சிறப்பாக 'அவ்வையார்' இருக்கவேண்டும் என்று விரும்பினார். மிகப்பெரிய கதை இலாகா ஒன்றையே உருவாக்கி பலதரப்பட்ட திறமைசாலிகளை அதில் அமர்த்தினார். இந்தப் படம் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதற்காக, படத்தின் ஒரு காட்சி, அவரது படப்பிடிப்பில் இருக்கும் ஒரு லைட் பாய்க்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட உடனே அதை மாற்றினார். திரைக்கு வந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. திமுகவின் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழின் சிறப்புகளோடு கலந்து கடவுள் பக்தியையும் பரப்பிய அவ்வையாரின் வெற்றி இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று.

ஆனால், எஸ்.எஸ்.வாசன் 'அவ்வையார்' படத்தை எடுத்திருந்தாலும் கூட திராவிட எதிர்ப்பு அவரது நோக்கமாக இருக்கவில்லை. அப்போதுதான் புதிதாக ஒருவர் திரைப்பட உலகிற்குள் நுழைந்தார். 'குமாஸ்தாவின் பெண்' என்றொரு நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்து, பலரையும் பிரமிக்க வைத்திருந்த ஏ.பி.நாகராஜன் தான் அவர். அவர் எழுதி இயக்கி வெற்றிபெற்ற "நால்வர்" என்றொரு நாடகம் திரைப்படமாக உருவானது. கதைப்படி கள்ள மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் காவல்துறை அதிகாரி, அடுத்தவன் வக்கீல், மூன்றாமவன் தொழிற்சங்கத் தலைவன், கடைசிப் பையன் சோம்பேறி. இந்தக் கடைசி பையன் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றித் திரிபவன். ஆனால் சுயமரியாதையும், பகுத்தறிவு வாதமும் பேசுபவன். திரையுலகில் மளமளவென பெருகி வந்த திராimageவிட முன்னேற்றக்கழகப் பிரசாரக் கதைகளுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த படம் இது. அதைப் பதிவு செய்தவர் ஏ.பி.நாகராஜன்.

இன்னொரு பக்கம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் ஆதரவாளராக காந்தி குல்லாய் தரித்து நடித்த 'மனிதனும் மிருகமும்' படம் வெளியாகி இருந்தது. காங்கிரஸ் எதிர்ப்போ உச்சகட்டத்தில் இருக்கிறது. மக்களோ சிவாஜியை திராவிடக் கட்சியை சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வெளிவந்ததால் இந்தப் படம் மிக சுமாரான வெற்றியையே பெற்றது. மக்கள் மனதில் பதிந்து போன ஒரு விஷயத்துக்கு எதிராக செயல்படுகையில் அங்கே தோல்வி தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஆனால் இந்த மனப்போக்கை மாற்றுமாறு அடுத்து வந்த படமே 'மனோகரா'.

"ஆத்திரத்தைக் கிளப்பாதே மனோகரா... நிறைவேற்று. இது அரசன் உத்தரவு..." - என்று மன்னர் புருஷோத்தமன், மனோகரனுக்கு உத்தரவிடுகிறார். அதற்கு மனோகரன் கூறும் பதிலென்ன தெரியுமா?

"அரசன் உத்தரவு என்ன... ஆண்டவன் உத்தரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் இப்போது..." என்று கம்பீரமாய் பதிலுரைக்கிறான். கதை வசனம் மு.கருணாநிதி. முதன்முறையாக இந்தப் படத்தின் டைட்டில் கார்டில்தான் கலைஞர் மு.கருணாநிதி என்று வந்தது. கதைப்படி ஒரு மன்னன், தனது மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆடல் அழகி வசந்தசேனையிடம் மண்டியிட்டுக் கிடக்கிறான். மகன் மனோகரன் தாயின் துயர் துடைக்க முயலுகிறான். இதில் சூழ்ச்சிக்காரி வசந்தசேனையை வடக்கேயிருந்து வந்தவளாக கலைஞர் திரைக்கதை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

ஏ.பி.நாகராஜன் கதை வசனம் எழுதிய இரண்டாவது படம் 'மாங்கல்யம்'. முதலில் அவர் இயக்கிய 'நால்வர்' படம் வெளிவந்த பிறகு, ஏ.பி.நாகராஜனை தமிழரசுக் கழகத்தை சேர்ந்தவராக அக்கட்சியினர் அறிமுகப்படுத்தினர். இந்த இடத்தில தமிழரசு கட்சியைப் பற்றி சற்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். ம.பொ.சிவஞானத்தால் 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. என்னதான் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்மொழியை தமிழத்தின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று தீவிரமான முன்னெடுப்பை செய்துவந்தால் கூட, இந்தித் திணிப்பை தொடங்கிய காங்கிரஸுடனே கூட்டணி வைத்தனர். அதற்கு முக்கிய காரணம், திராவிட கட்சிகளை எதிர்க்கவேண்டும் என்பதே. 1946 முதல் 1954 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பின்னர் தமிழரசு கழகம் என்ற பெயரில் பின்னர் தனிக்கட்சியாக மாறியது.

ம.பொ. சிவஞானம் தனது நாடகக் காலங்களில் இருந்தே ஏ.பி.நாகராஜன் அறிந்திருந்தார். அதனால் திராவிட முன்னேற்றக் கழகம் தனது சினிமா கலைஞர்களை பெருமையோடு அறிவித்துக்கொண்டதைப் போல, தமிழரசுக் கழகமும் ஏ.பி.நாகராஜன். டி.கே.சண்முகம் போன்றவர்களை தனது பத்திரிகையிலும், மாநாடுகளிலும் அறிமுகப்படுத்தியது. அதன்பின் திராவிடக் கழக எதிர்ப்பாளருக்குரிய நடிகராகவும், கதை வசனகர்த்தாவாகவும் ஏ.பி.நாகராஜன்image வரவேற்கப்பட்டார். 'மாங்கல்யம்' படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு வ.மு.கழுகுமலை என்று பெயரிட்டார். சுருக்கமாக "வானா... மூனா... கானா...". 'பணம்' படத்தில் எப்படி கலைவாணர் "தீனா... மூனா... கானா..." என்று பாடினாரோ, அதேபோல் 'மாங்கல்யம்' படத்தில் "வானா... மூனா... கானா..." என்றொரு பாடல் ஒலிக்கவைத்து திமுகவை நையாண்டி செய்தார் நாகராஜன்.

உண்மையில் காங்கிரஸ் செய்திருக்கவேண்டிய விஷயம் இது. ஆனால், அவர்கள் கலைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். அதற்கான பலனையும் விரைவிலேயே அனுபவித்தனர்.

(திரை இன்னும் விரியும்...)

- பால கணேசன்

முந்தைய அத்தியாயம்:திரையும் தேர்தலும் 5: "பஞ்சம் வராட்டா, உயிரை வாங்குமா பரோட்டா!" - 50களில் திராவிட பிரசாரம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்