
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆசிரியர் தண்டித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்த மாணவர் பிரவீன். இவர் சரியாக படிக்காத காரணத்தால், அந்தப் பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தண்டனை கொடுத்ததோடு மற்ற மாணவர்கள் முன்னிலையில் பலமுறை அவமானபடுத்தியதாக சொல்லபடுகின்றது. இந்த நிலையில் நேற்று மாணவன் பிரவீன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். ஆனால் சிகிச்சை பலன்றி அவர் உயிர் இழந்தார். இதனையடுத்து மாணவரின் உடலை பள்ளி முன்பு வைத்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சக மாணவர்கள் முன்னிலையில் தலையில் புத்தகங்களை வைத்து நிற்க சொல்லியும், இனிமேல் குற்றம் செய்ய மாட்டேன் என எழுதிய சிலேட்டை கழுத்தில் தொங்கவிட்டும் அவமானபடுத்தியாக சக மாணவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் மாணவனின் இறப்பிற்கு காரணமான ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதேபோல ஆசிரியரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தது. மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பள்ளியை மூடி வைப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தததை அடுத்து சுமார் இரண்டு மணிநேரமாக நீடித்த போராட்டாம் விலக்கி கொள்ளப்பட்டது.
தனியார் பள்ளியின் 100 சதவிகித தேர்ச்சி மோகம் மாணவனின் உயிரை பறித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.