RRvsDC | ஒரு பந்து ஆட்டத்தையே மாற்றிய கதை! பயம் காட்டிய சஞ்சு Out or Notout? Playoff ரேசில் டெல்லி!
RR vs DC
ஐபிஎல் லீக் ஆட்டங்கள் க்ளைமேக்ஸ்க்கு முந்தைய பரபரப்போடு காணப்படுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு அணிக்கும் மிக முக்கியமானது. (மன்னிக்கவும், இந்த லிஸ்ட்டில் மும்பை, ஆர்சிபி போன்ற அணிகளும் இருக்கும் என நினைத்தால் நிர்வாகம் பொறுப்பாகாது.)
ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகள் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வென்றால் கூட ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிடும். மீதமுள்ள இரு இடங்களுக்கு சென்னை, ஹைதராபாத், லக்னோ போன்ற அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லியும் தனக்கு இடம் கிடைக்குமா என்று முட்டி மோதுகிறது. இந்நிலையில்தான் சஞ்சும்மல் பாய்ஸும், பண்ட் - ன் படையும் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இரு கேப்டன்கள், இருவரும் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றவர்கள். ப்ளேயிங் 11ல் யாரேனும் ஒருவருக்குத்தான் இடம். இத்தகைய சூழலில்தான் நேற்றைய போட்டி நடந்தது.
இது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியா? அல்லது இந்திய அணிக்கான ப்ளேயிங் 11ல் யாருக்கு இடம் என்பது குறித்தான போட்டியா?
நமக்கெதற்கு வம்பு போட்டிக்குள் சென்றுவிடுவோம்.
அதிரடியில் மிரட்டிய மெக்குர்க்
ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான தனது இடத்தை பசுமரத்தாணி போல் பதித்துவைக்கும். ஆனால் டெல்லிக்கோ ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க இப்போட்டியில் வென்றாக வேண்டும்.
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில்தான் போட்டி நடந்தது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த 56 ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து டெல்லி அணியின் தொடக்க சிங்கங்களான மெக்குர்க் - அபிஷேக் போரெல் களமிறங்கினர். பில்டப் அதிகமாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம்.
களத்தில் பந்துகள் ஒவ்வொன்றும் பவுண்டரிகளுக்கு பறந்தன. மெல்ல மெல்ல ஆக்ஸிலேட்டரை ஏற்றிய மெக்குர்க், ஆவேஷ் கான் வீசிய 4 ஆவது ஓவரில், எதிரணிக்கு சர்வமும் ஒடுங்கும்படி செய்துவிட்டார். முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் சிக்ஸர், அதற்கடுத்த பந்தில் பவுண்டரி, மீண்டும் அதற்கடுத்த பந்தில் சிக்ஸர் என ஒரே ஓவரில் 28 ரன்களைக் குவித்தார். அதே வேகத்தில் 19 பந்துகளில் அரைசதத்தையும் கடந்தார். நடப்பு தொடரில், மெக்குர்க் பவர்ப்ளேவில் மட்டும் 96 பந்துகளை எதிர்கொண்டு 245 ரன்களைக் குவித்துள்ளார். 29 பவுண்டரிகள், 19 சிக்ஸர்கள் இதில் அடக்கம். ஆனால் அத்தனை வேகத்திற்கு பவர்-ப்ளேவிலேயே முற்றுப்புள்ளி வைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆரம்பித்து வைத்த அஸ்வின்
4 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை புல் டாஸாக அஸ்வின் வீச ஃபெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மெக்குர்க். பின் களத்திற்கு வந்த ஹோப் எதிர்பாராமல், இல்லையில்லை இப்படித்தான் சொல்ல வேண்டும், லக் இல்லாமல் வெளியேறினார். போரல் அடித்த பந்து, பந்துவீச்சாளரான சந்தீப்பின் கையில் பட்டு ஸ்டெம்பில் விழுந்தது. லைனிற்கு வெளியில் இருந்த ஹோப்போ ஹோப்பே இல்லாமல் வெளியேறினார்.
டெல்லி நிர்ணயித்த இமாலய இலக்கு
மறுமுனையில் நங்கூரமாக நின்ற அபிஷேக் போரல், மெக்குர்க் விட்ட இடத்தில் இருந்து அணியை கொண்டு சென்றுகொண்டிருந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 65 ரன்களைக் குவித்து அஸ்வின் பந்திலேயே வீழ்ந்தார். ஆனால் அவருக்கான பார்ட்னர் ஷிப்தான் சரியாக கிடைக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பந்தும், தனது வழக்கமான ஷாட்டை ஆட இம்முறை அது கைகூடவில்லை. 15 ரன்களில் அவரும் வெளியேறினார். சுழற்பந்திற்கு எதிராக நடப்பு தொடரில் தடுமாறியுள்ளார் பந்த். 114 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 131 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளதும், அவை அனைத்தும் ரைட் ஆர்ம் லெக் ஸ்பின் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னிங்ஸில் இறுதிக்கட்டத்தில் ஸ்டப்ஸ் அதிரடி காட்ட டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 221 ரன்களைக் குவித்தது.
புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின்
ராஜஸ்தான் அணியில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சில தினங்களுக்கு முன் அஸ்வின் குறித்தான அதிருப்தி எழுந்தது. அவர் ரன்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறாரே தவிர விக்கெட்டை வீழ்த்துவதில்லை என்ற புகார் எழுந்தது. அத்தனைக்கும் இன்று பதிலளித்துள்ளார் அஸ்வின். அதேபோல் டெல்லி எதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் பியூஸ் சாவ்லா உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். இருவரும் டெல்லி அணிக்கு எதிராக 27 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
சர்ச்சையான சாம்சன் அவுட்
222 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான். ஆனால் தொடக்கம் சரியாக அமையவில்லை. ஜெய்ஸ்வால் 4 ரன்களில் வெளியேற, பட்லர் 19 ரன்களுக்கு வெளியேறி ராஜஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். நடப்பு தொடரில் இடதுகை வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக ஆனால், நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் அத்தனைக்கு நியாயம் செய்தார். ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என பறந்து கொண்டே இருந்தது. ஆனால் மறுமுனையில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன.
அணியின் ரன்கள் இலக்கை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. முகேஷ் குமார் வீசிய 16 ஆவது ஓவரின் 4 ஆவது பந்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. சாம்சன் பந்தினை தூக்கி அடிக்க, லைனில் நின்றிருந்த ஹோப் தடுமாறிப் பிடித்துவிட்டார். ஆனால், அவரது கால்கள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருந்தன. சஞ்சு அவுட்டா நாட் அவுட்டா என்பதைத் தீர்மானிக்கவே அம்பயர்கள் சிறிது நேரம் எடுத்துக்கொண்டனர்.
ஆனால், அவுட் என அறிவிக்கப்பட்டதில் சாம்சனுக்கு அதிருப்தியே. ஆனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக மகத்தான ஆட்டத்தை ஆடினார் சாம்சன். அவர் 46 பந்துகளில் 86 ரன்களைக் குவித்தார். பின் வந்த வீரர்களோ வந்த வேகத்தில் பவுலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இருபது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 4 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியும் ப்ளே ஆஃப் ரேசில் உள்ளது. சென்னை, ஹைதராபாத், லக்னோ, டெல்லி என ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறுவதற்கான போட்டி அதிகரித்துள்ளது. ஏற்கனவே சொன்னதுபோல் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். ரசிகர்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று மட்டும் நம்பலாம்.