Published : 05,Feb 2021 01:16 PM
திருவள்ளூர்: பணிச்சுமை ,மன உளைச்சலை போக்க உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்த காவலர்கள்

பணிச்சுமைகளால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் நோக்கில் காவலர்கள் ஒன்றுகூடி உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உட்பிரிவில் கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆகிய 5 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மனவள பயிற்சி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டிஎஸ்பி ரமேஷ்... கொரோனா காலத்தில் காவலர்கள் மனரீதியாக அதிகமாக பாதிக்கப்பட்டாலும், அவைகளை மறந்து பணியில் உறுதியாக இருந்தனர். பணி, குடும்பம் இவைகள் இரண்டையும் பக்குவமாக கையாள்வதன் மூலமூம், யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலமும் மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பணி சுமையால் தற்கொலை, பணி நேரத்தில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என காவலர்களுக்கு அறிவுறை வழங்கினார்.
அதன் பின்னர், பணியின்போது ஏற்படும் குறை நிறைகளை அனைத்து காவலர்களும் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பணிச்சுமையால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில் திரைப்பட பாடல்களுக்கு இருபால் காவலர்களும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.