[X] Close

சிதம்பரம்: அரசின் உத்தரவை அடுத்து மருத்துவ மாணவர்களின் போராட்டம் வாபஸ்

தமிழ்நாடு

Chidambaram-Medical-students-protest-called-off-following-government-order

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 58-வது நாளாக தொடர்ந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


Advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவர்கள், அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 42 நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு கண்டுகொள்ளாததால் கடந்த 20ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

image


Advertisement


இந்த போராட்டத்தை தடுக்க கடந்த 21ஆம் தேதி முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 14 நாட்களாக மாணவர்களே உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து 58-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 28ஆம் தேதி அரசு உயர்கல்வி துறையின் கீழ் இயங்கிய இக்கல்லூரியை சுகாதார துறையின் கீழ் மாற்றி உத்தரவிட்டதை வரவேற்கும் மாணவர்கள் தங்களது ஒற்றைக் கோரிக்கையான அரசு கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

image


இந்நிலையில் மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணத்தை அமல்படுத்துவதாக நேற்று மாலை அரசாணை வெளியிட்டது. இதனை வரவேற்றுள்ள மாணவர்கள் தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் தங்களுக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Advertisement

மேலும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்ட உடனே பணிக்கு திரும்புவோம் எனவும் உறுதியுடன் தெரிவித்தனர். வெற்றியை கொண்டாடும் விதமாக மாணவர்கள் பட்டாசு வெடித்தும் ஆடி பாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.


Advertisement

Advertisement
[X] Close