Published : 31,Jan 2021 05:31 PM
கர்நாடகா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
தற்போது முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு முதல்முறைக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக்கொண்ட ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அந்த மாநிலத்தின் சாமராஜ்நகர் மாவட்ட பகுதியை சேர்ந்த ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட ஐந்து மருத்துவர்களும் தொற்று உறுதியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.
“தடுப்பு மருந்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாதிக்கப்பட்ட மருத்துவர்களை நோய்க் கிருமியானது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னதாகவே தாக்கியிருக்க வாய்ப்பு அதிகம்” எனத் தெரிவித்துள்ளார் அந்த மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி எம்.சி. ரவி.
நன்றி : தி நியூஸ் மினிட்