Published : 25,Sep 2020 05:28 PM
தென்கொரிய அதிகாரியை சுட்டுக்கொன்ற வடகொரிய ராணுவம்: மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரியைக் சுட்டுக்கொன்ற தனது ராணுவத்தினரின் செயலுக்காக தென்கொரிய அதிபரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
கொரோனா வைரஸ் தொற்றால் பல உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உலகின் இரும்புத்திரை என்று அழைக்கப்படும் வட கொரிய நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஜூன் மாதம் முதல் இங்கு கொரோனா பரவல் தொடங்கியது என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகளிலிருந்து மக்கள் வராதளவிற்கு வடகொரியாவில் மிகவும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
எல்லைகளை ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில், தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் படகில் வடகொரிய எல்லையில் கடலில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது வடகொரிய ராணுவத்தினர் அந்த அதிகாரியை சுட்டுகொன்று கடலிலேயே எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தென் கொரியா முழுக்க பரவி கடும் அதிர்வலைகளையும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு எதிரான விமர்சனங்களையும் முன் வைத்தது.
ஆனால், வடகொரிய ராணுவ அதிகாரிகள் ’கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுட்டுக்கொன்றோம். சட்டவிரோதமாக வட கொரியாவிற்குள் நுழைந்தார்’ என்றிருக்கிறார்கள். தென்கொரிய மனிதர் ஒருவர் வடகொரிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இது எதிர்பாராத அவமானகரமான சம்பவம். மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் கொரோனா தொற்று சமயத்தில் உதவாமல் சுட்டுக்கொன்றது அந்த அதிகாரியையும் தென்கொரிய மக்களை ஏமாற்றியதற்கு சமம் என்றுக்கூறி தென் கொரிய அதிபருக்கு மன்னிப்புக் கேட்டு கடிதமும் எழுதியுள்ளார்.