[X] Close

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த sleepless night...!

சினிமா

sleepless-night-movie-review----

உலகம் முழுக்கவே காவல் துறையினருக்குத் தெரியாமல்தான் போதைப் பொருள் வணிகம் நடக்கிறது என்பதில் ஒருபாதி உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் என்ன பெரிய நடவடிக்கை எடுத்தாலும் இப்படியான கடத்தலை தடுக்க முடியாது என்ற சூழலில் சில போலீஸ் அதிகாரிகள் கடத்தலுக்கும் துணை போவதே ஆதாயம் என்றும் கருதக் கூடும். லஞ்சம், ஊழல், போதைப் பொருள் கடத்தல் என காவல் துறையின் மற்றொரு முகத்தை ஒரு இரவில் பரபர காட்சிகளுடன் விருந்தாக்குகிறது 2011ல் வெளியான ஸ்லீப் லெஸ் நைட் என்ற பிரஞ்சு படம்.


Advertisement

image

முதல் காட்சியிலேயே அதிரடி கார் ச்சேஸிங் துவங்குகிறது. முகத்தில் கருப்பு முகமூடி அணிந்து கொண்டு போதைப்பொருள் நிரப்பிய பையை வின்சன்டாக நடித்திருக்கும் டோமர் சிஸ்லியும் அவனது நண்பன் மேனுவலும் கைப்பற்றுகிறார்கள். துப்பாக்கிச் சண்டையில் வின்சன்ட் வயிற்றில் காயம்படுகிறது. இவ்விருவரும் போதை பொருள் கடத்தல்காரர்கள் என நாம் யூகிக்கும் முன்பே அதை பொய்யாக்கி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகள் என பகீர் அறிமுகம் கொடுக்கிறார் இயக்குனர் ஃப்ரீடெரிக் ஜார்டீன்.


Advertisement

மார்சியானோஸ் என்ற போதைப் பொருள் கடத்தல்காரனிடம் இருந்து வின்சென்ட், மேனுவல் இவ்விரு போலீஸ்காரர்களும் பத்து கிலோ கொக்கயினை கைப்பற்றுகிறார்கள். மார்சியானோஸின் ஆட்களில் ஒருவன் சுடப்படுகிறான். ஒருவன் தப்பித்துவிடுகிறான். போதைப் பொருளை கைப்பற்றியது வின்சென்ட் என அறியவரும் கடத்தல் கும்பல் பள்ளியில் படிக்கும் வின்சென்ட்டின் மகனை கடத்தி மார்சியானோஸுக்கு சொந்தமான நைட் கிளப்பில் சிறை வைக்கின்றனர். அதிகாரி வின்சென்ட் போதைப் பொருளை கொடுத்துவிட்டு மகனை மீட்டுக் கொள்ளலாம். வின்சென்ட் தன் வயிற்றில் அடிபட்ட காயத்துடன் இரவில் எப்படி போராடி தன் மகனை மீட்டான் என்பது தான் மீதிக் கதை.

image

ஒரு கருப்பு பையில் பத்துகிலோ கொக்கையினை நிரப்பிக் கொண்டு மகனை மீட்க நைட் கிளப்புக்கு விரைகிறான் வின்சென்ட். அங்கு மது அருந்திக் கொண்டு இருட்டறையின் இடையிடையே கடந்து போகும் மின்னொளியின் மறைவில் ஆணும் பெண்ணும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என ஆடி பாடி முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ அந்த இரவு போதுமானதாக இருந்தது. நைட்கிளப்புக்குள் நுழையும் வின்சென்ட் நேராக கழிவறை சென்று சில பொட்டலங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள பையை மறைத்துவைக்கிறான். நேராக கடத்தல்காரன் மார்சியானோஸ் தன் மகனை அடைத்து வைத்திருக்கும் அறைக்குச் செல்லும் அவன், தன்னிடம் இருக்கும் உதிரி கொக்கயினைக் காட்டி தன் மகனைப் பார்த்தபிறகுதான் மீதமுள்ளதை தர முடியும் என்கிறான். மகன் அங்கிருப்பதை உறுதி செய்தபின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த பையை எடுக்கப் போகிறான்.


Advertisement

இந்த இடைவெளியில் அந்த பை வின்சென்டை பின் தொடர்ந்து வந்த மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி ஒருவரால் இடம் மாற்றி ஒளித்து வைக்கப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் மகனை மீட்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் வின்செண்ட் அந்த கிளப்பின் சமையல் அறைக்குச் சென்று வெள்ளை நிறத்தில் மாவு போன்ற ஒன்றை பொட்டலங்களில் அடைத்து போலி கொக்கயின் பை’யினை தயார் செய்கிறான். பையை கொடுத்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேற முயலும் போது அது போலி என மார்சியானோஸுக்கு தெரிய வருகிறது. வின்சென்ட்டும் அவனது மகனும் மடக்கி பிடிக்கப் படுகிறார்கள். இப்படி இரவு முழுக்க ஒரு நைட் கிளப்பிலேயே அதிரடி ஆக்சன் காட்சிகளாக கதை நகர்கிறது. இதற்கிடையில் வில்லனின் ஆட்கள், அதிகாரி மேனுவல் என இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படுகிறது. கடைசி காட்சியில் தன்மகனை காரில் மீட்டுக் கொண்டு வீடு திரும்பும் வின்செண்ட் வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் காரினுள் சரிந்து விழுகிறான். தந்தையை மகன் விரைந்து சென்று மருத்துவமனையில் சேர்க்கிறான்.

image

இப்படம் போலீஸ், போதைப் பொருள் கடத்தல், ஆக்சன், துப்பாக்கிச்சூடு, கார் ச்சேஸிங் என அதிரடி வேக சினிமாப் பிரியர்களை குஷிபடுத்துகிறது. அதே வேளையில் தந்தை தன் மகனை மீட்கப் போராடும் காட்சிகளில் நேசம் நிரம்பி வழிகிறது. தன் உயிரையே மகனுக்காக பணயம் வைக்கும் தந்தை, எப்படியும் அப்பா தன்னைக் காப்பாற்றிவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் மகன் என எல்லாம் கலந்து தொய்வில்லாத திரைக்கதையினை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃப்ரீடெரிக் ஜார்டீன்.

இப்படத்தின் நாயகன் ‘சிஸ்லி’ பாரம்பரிய தற்காப்புக் கலைகள் கற்றவர். இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பது பாரட்டுக்குரியது. பொதுவாக டூப் பயன்படுத்தும் போது அதற்கு தகுந்தாற்போல மட்டுமே கேமரா கோணங்கள் வைக்க முடியும். ஆனால் நாயகனே அதை செய்யும் போது ஒளிப்பதிவுக்கான சுதந்திரக் கோடு சற்று நீளும். அது ஒரு படத்தின் உண்மைத் தன்மையினை மேலும் நெருங்கி அனுபவிக்கும் வாய்ப்பை ரசிகனுக்கு கொடுக்கும். கண்களை மூடிக் கொண்டு எந்த திசையில் திரும்பினாலும் அது இருட்டாகத் தான் இருக்கும். ஆனால் ஒளிப்பதிவாளர் டாமின் கேமரா ஒரு இரவை எத்தனை கோணங்களில் முடியுமோ அத்தனை கோணங்களில் பதிவு செய்து படத்தின் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.

முத்தக் காட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் இப்படம்தான் தமிழில் ‘தூங்காவனம்’ என்ற பெயரில் கமல்ஹாசன், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியானது.


Advertisement

Advertisement
[X] Close