Published : 18,Aug 2020 09:27 PM

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 14 பேரை கொன்ற போலீஸ், அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் : சீமான்

give-justice-for-14-sterlite-protesters-murder--policeman-and-officials-should-immediate-punish-seeman

ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் 14 பேரை கொன்ற காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக தண்டிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையைத் திறப்பதற்கு அனுமதி மறுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. தாமிர ஆலையில் இருந்து வெளிவந்த கழிவுகள் மற்றும் நச்சுப் புகையால் குடிநீரும், சுவாசிக்கும் காற்றும் நஞ்சாகிப் போனதை எதிர்த்து ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக பல கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களின் அறப்போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இத்தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ்நாடே வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நீதியைப் பெறுவதற்காக களத்தில் போராடிக் குண்டடிப்பட்டு, தாக்குதலுக்குள்ளாகி உடல் உறுப்புகளை இழந்த உறவுகளுக்கும், அடுக்கடுக்கான வழக்குகள் மூலம் அரசின் அடக்குமுறைக்குள்ளாகி இயல்பு வாழ்க்கையை இழந்த உறவுகளுக்கும், களத்திலேயே உயிரீகம் செய்திட்ட ஈகியர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைபெறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்து சட்டப்போராட்டங்களை முடுக்கிவிட்டு, எக்காரணம் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாமலிருக்க சட்டத்தின் வழியே அத்தனைப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். எத்தகைய சமரசங்களுக்கும் இடங்கொடாது தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாய் நின்று அமைச்சரவையை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அதைச் சட்டமாக இயற்ற வேண்டும். இத்தீர்ப்பிற்கெதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் நீதியை நிலைநாட்ட நாம் தமிழர் கட்சி, மக்களோடு இணைந்து சட்டப்போராட்டம் செய்யும் என்பதையறிவித்து, இத்தீர்ப்பிற்காக உழைத்திட்ட வழக்கறிஞர் பெருமக்களுக்கும் துணை நின்றவர்களுக்கும் உளமார்ந்த நன்றியையும், உளங்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

image

ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அறப்போராட்டத்தில் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 14 அப்பாவிகளை அரசப் பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலிகொண்டப் பிறகே ஆலையை மூடி அறிவிப்பு வெளியிட்டது அதிமுக அரசு. ஆனால் சுட்டுக்கொன்ற காவலர்கள், உத்தரவிட்ட அரசு அதிகாரிகள் உட்பட எவர் மீதும் எந்த வழக்கும் பதியாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் அவ்விசாரணை நிறைவுறாதிருப்பதும், கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படாதிருப்பதும் பெருங்கவலையை ஏற்படுத்துகிறது. தாமதிக்கப்படும் நீதி அநீதிக்குச் சமம் எனும் கூற்றுக்கேற்ப, தாமதிக்கப்படும் ஒவ்வொரு பொழுதும் மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மண்ணையும், மக்களையும் காக்கப் போராடிய அப்பாவி தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது அவர்களது உடற்கூறு ஆய்வில் தெளிவுபட நிரூபிக்கப்பட்டும் அப்படுகொலையை அரங்கேற்றிய காவல்துறையினரும், துணைநின்ற அரசு அதிகாரிகளும், ஏவி விட்ட ஆட்சியாளர்களும் இதுவரை தண்டிக்கப்படாதிருப்பது மக்களாட்சிக்கு மாபெரும் இழுக்காகும். ஆலையைத் திறப்பதற்கு எதிரான இத்தீர்ப்பு போல, ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தில் அரசப் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 14 அப்பாவி தமிழர்களின் மரணத்திற்கும் உரிய நீதியைப் பெற்றுத்தந்து, படுகொலையாளர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட அனைவர் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்