[X] Close

WWE விளையாட்டில் வேட்டியோடு களம் இறங்கி அசத்தி வரும் தமிழர்  

விளையாட்டு

The-Tamil-MAN-who-goes-ROCK-in-the-WWE

இந்தியாவிலிருந்து WWE விளையாட்டில் மல்யுத்த வீரர்கள் பெரியளவில் சாதித்தது இல்லையென்றாலும் அதை பார்ப்பதற்கென ஏரளமான ரசிகர்கள் இங்குண்டு. 90களில் குழந்தைகளாக திரிந்த இன்றைய இளைஞர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சிகளில் WWE விளையாட்டும் அடங்கியிருக்கும். 

image

அப்படி அதை ரசித்து பார்த்த 90ஸ் கிட்ஸ் எராவை சேர்ந்த தமிழக இளைஞர் ஒருவர் அதில் சாதிக்கும் முனைப்போடு சொந்த ஊரை விட்டே கிளம்பி தீவிர பயிற்சி செய்து வருகிறார். 


Advertisement

அவரிடம் பேசினோம்...

“என் பேர் ஜெய பாண்டியன். திண்டுக்கல் - நிலக்கோட்டை பக்கம் உள்ள முத்தக்காமன்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் விவாசாயம் தான் தொழில். வீட்டில் நான் கடைக்குட்டி. எல்லோரையும் போல எனக்கும் டிவி பார்ப்பதில் கொள்ளை இஷ்டம். அதில் WWE பார்ப்பதென்றால் சொல்லவே வேண்டாம். அதை பார்த்துவிட்டு அதே மாதிரியான ஸ்டென்ட்களை நண்பர்களோடும், அண்ணன்களோடும் மோதி விளையாடி மகிழ்ந்திருக்கிறேன். 

image

அப்படியே நாட்கள் நகர ஸ்கூல், காலேஜ் என படிப்பை முடித்துவிட்டேன். அந்த சமயத்தில் தான் அடுத்து என்ன செய்வதென்ற கேள்வி வந்தது. ‘இதை செய்யலாமா? அதை செய்யலாமா?’ என அப்போது பல யோசனைகள். அதே நேரத்தில் எல்லா துறையிலும் தமிழகர்களின் தடம் ஆழ பதிந்திருக்க WWE விளையாட்டில் நான் விளையாட வேண்டுமென தோன்றியது. 

அதுவரை பொழுதுபோக்குக்காக மட்டுமே அந்த விளையாட்டை பார்த்து வந்த எனக்கு அதில் கலந்து கொண்டு சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது அப்போது தான். ‘வெற்றியோ? தோல்வியோ?’ இறங்கி ஒரு கை பார்த்துவிடலாம் என முடிவு செய்தேன். 

அதற்காக ஜிம்முக்கு சென்று உடம்பை ஏற்றினேன். இருந்தாலும் அதை எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்ற சவால் எனக்கு முன்னாள் எழுந்தது. உடனடியாக கூகுள் ஆண்டவனை அணுகி தேடிய போது இந்தியாவில் WWE விளையாட்டுக்கு பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது என தெரிந்து கொண்டேன். 

image

அதுவும் WWE விளையாட்டில் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமுள்ள ‘கிரேட் காளி’ தான் அதன் பயிற்சியாளர் என தெரிந்ததும், அவரிடம் பயிற்சி பெற ஊரைவிட்டு கிளம்பிவிட்டேன். 

தமிழ் மொழியோடு கொஞ்சம் பேஸிக் இங்கிலீஷும் கைகொடுக்க கடந்த 2017 இறுதியில் பஞ்சாப்பில் லேண்டானேன்.

தீவிர பயிற்சி, டயட் என ஒரு மல்யுத்த வீரன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தேன். அதன் மூலம் பயிற்சி ஆட்டங்களில் அசத்தவும் முடிந்தது. கடந்த ஆண்டு இந்திய அளவிலான வளர்ந்துவரும் WWE வீரர்களுக்கான CWE டோர்னமெண்டில் எனது முதல் ஆட்டத்திலேயே இந்தியாவின் சாம்பியனாக இருந்த சக மல்யுத்த வீரனை நாக்-அவுட் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றேன். 

image

இந்த ஆண்டுக்கான CWE சீசனிலும் சாம்பியன் நான் தான். தொடர் வெற்றி கனடாவில் உள்ள புகழ் பெற்ற WWE பயிற்சி கூடத்தின் தலைமை பயிற்சியாளரின் பார்வையை என் பக்கமாக திரும்ப, அங்கு பயிற்சி பெறும் வாய்ப்பும் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. இருந்தாலும் அதற்கு போதுமான நிதி வசதி இல்லாததால் அடுத்த கட்டம் நோக்கி என்னால் நகர முடியவில்லை” என வருந்துகிறார் ஜெய பாண்டியன்.

தற்போது ஜெய் ஜாக்ஸன் என்ற புனை பெயரில் விளையாடி வரும் ஜெயபாண்டியன் கலந்து கொண்டு விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியோடு களம் இறங்கி அசத்தி வருகிறார். ‘தி இந்தியன் டைகர்’ என்ற மல்யுத்த வீரர்களுக்கான அணியையும் தலைமை தாங்கி வருகிறார். அவருக்கு நிதி உதவிக்கான வாய்ப்புகள் கிட்டினால் இந்தியாவின் அண்டர்டேக்கராக அவர் உருவாகலாம். 

ஆல் தி பெஸ்ட்...

https://www.youtube.com/watch?v=XP90Tv7tewQ 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close