Published : 25,Jun 2017 01:13 PM

டெஸ்ட்டில் அறிமுகமான மைதானத்திலேயே முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி #PTREWIND

Indian-team-wins-cup-in-the-same-ground-of-introduction

 

இந்திய அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலேயே முதல் உலகக் கோப்பையையும் வென்ற நிகழ்வு நடந்தது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

34 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நிலை மாறிய நாள் இது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. அந்த வெற்றியின் மூலம் உந்தப்பட்டே இன்னொரு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் கனவு கண்டார். 
புருடென்ஷியல் உலகக் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்ட 1983ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கணிக்க முடியாத அணியாகவே கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. உலகின் 8 கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற அந்த தொடர் மூன்றாவது உலகக் கோப்பை தொடராகும். முதல் 2 உலகக் கோப்பை தொடர்களையும் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டது. இங்கிலாந்தில் 1983ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி தொடங்கிய மூன்றாவது உலகக் கோப்பை தொடரின் 25ம் தேதி வரை நடந்தது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பலமான பேட்டிங் ஆர்டரைக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் விமர்சகர்களின் கணிப்பாக இருந்தது. தற்போதைய ஒருநாள் போட்டிகள் போலல்லாமல், அப்போது 60 ஓவர்கள் கொண்டதாக ஒருநாள் போட்டிகள் இருந்தன. 

தொடரின் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, 6 லீக் போட்டிகளில் விளையாடியது. அதில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளைத் தவிர மற்ற 4 போட்டிகளில் இந்திய அணி வென்று ஆச்சர்யம் அளித்தது. ஜூன் 22ல் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து கபில்தேவ் தலைமையிலான இளம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வீறுநடை போட்டது. அந்த போட்டியில் முதலில் பீல்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்தை 213 ரன்களுக்கு சுருட்டியது. 11 ஓவர்கள் பந்துவீசிய கேப்டன் கபில்தேவ் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொஹிந்தர் அமர்நாத் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 214 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சந்தீப் படேல் மற்றும் யாஷ்பால் ஷர்மா ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 54 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்ததோடு, 46 ரன்களும் குவித்த மொஹிந்தர் அமர்நாத் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 54 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன்களும், மொஹிந்தர் அமர்நாத் 26 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸின் பலமான பேட்டிங் வரிசைக்கு இது பெரிய ஸ்கோர் அல்ல; எனவே அந்த அணி எளிதாக வென்றுவிடும் என்றே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு. கட்டுக்கோப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, முதல்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. மதன் லால் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக 7 ஓவர்கள் பந்துவீசிய மொஹிந்தர் அமர்நாத் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், அரையிறுதியைப் போலவே இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது மொஹிந்தர் அமர்நாத்துக்கே அளிக்கப்பட்டது. அன்றைய தேதியில் இந்திய அணியின் இந்த வெற்றி கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்திய அணி, தனது கிரிக்கெட் பயணத்தை இதே மைதானத்திலேயே தொடங்கியது. 1932ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்