Published : 29,Jul 2020 01:03 PM
ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்-ம.நீ.ம பொதுச்செயலாளர் பேட்டி

ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என மக்கள் நீதிமய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியும் கமலும் இணைய வேண்டும் என்பதே மக்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விருப்பம். ரஜினி-கமல் இணைவது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. ஆனால் அவர்கள் இணைய வேண்டும் என்பது எங்களின் எண்ணம்.
ரஜியும் கமலும் இணைந்தால் திமுக-அதிமுகவை வீழ்த்தி நிச்சயமாக புதிய ஆட்சியை தமிழகத்தில் அமைக்க முடியும். ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். ஏனெனில் தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என ஏற்கெனவே ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார். மக்கள் நீதி மய்யம் ஆன்மீக அரசியலை ஏற்றுக்கொள்ளும். ஆனால் மத அரசியலை ஏற்றுக் கொள்ளாது” எனத் தெரிவித்தார்.