Published : 24,Jul 2020 10:12 AM

'நான் சந்தித்த சிலர்...' - கொரோனா குறித்து அரசு டாக்டர் சொன்ன சில கதை!!

-Stop-abusing-people-with-corona-infection--Government-doctor-s-request---

‘’கொரோனா நோய் தொற்று கண்டவர் வீட்டை கொலைக் குற்றம் செய்த குற்றவாளியின் வீட்டை அணுகுவது போலப் பார்ப்பது தவறு’’ என அறிவுறுத்தியுள்ளார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.  கொரோனா எனும் பெயரில் சமூகம் செய்யும் உளவியல் தாக்குதல்கள் குறித்து பகிர்ந்துகொள்கிறார் இங்கே.

image‘’கொரோனா தொற்றுக்குள்ளான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை அந்த நோய் நம் உடலுக்கும் உயிருக்கும் செய்யும் ஊறு" சம்பந்தப்பட்டதன்று.  மாறாக அந்த நோய் உண்டாக்கும் உளவியல் தாக்கமே சமூகத்தில் பெரியதாக இருக்கிறது.

நான் தினமும் சந்தித்து வரும் சில கதைகளின் வரிகள் இதோ..

"தம்பி.. உனக்கு தொண்டை வலி இருக்குனு சொல்ற..உடம்பு வலி இருக்குனு சொல்ற.. பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு போய் ஒரு டெஸ்ட் கொடுத்துறேன்.. கொரோனாவானு தெரிஞ்சுக்குவோம்"

"ஐயோ.. டெஸ்ட் வேணாம்ணே.. கொரோனானு தெரிஞ்சா...என் கல்யாணம் நின்னுபோகும். அடுத்த மாசம் கல்யாணம் அண்ணே. ரொம்ப கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றேன்னே..தயவு செய்து டெஸ்ட் வேண்டாம்"

அடுத்த கதை

"சும்மா தொண்டை வலினு வந்த எனக்கு டெஸ்ட் எடுத்து பாசிடிவ்னு சொல்லிட்டீங்க..என்ன தனிமைப்படுத்தவும் போறீங்க..
என் வீட்ல நான் , என் மனைவி, நாலு வயது பிள்ளை இருக்கு. அதுங்க ரெண்டுக்கும் நெகடிவ் வந்துடுச்சு.. நான் ஒரு கம்பெனில வாட்ச்மேனா இருக்கேன். என் கம்பெனில இருந்து என்னை வேலைல இருந்து தூக்கிடுவாங்க..நாங்க எப்டி சாப்புட்றது.? என்ன தனியா வைக்கப்போற இந்த ஒரு வாரமோ ரெண்டு வாரமோ என் குடும்பத்தை யாரு பாப்பா? உங்கள யாரு எனக்கு டெஸ்ட் எடுக்க சொன்னது?

அடுத்து

"அண்ணா... நம்ம வீட்ல நாலு பேருக்கு டெஸ்ட் கொடுத்தோம்னா.. அதுல அம்மாவுக்கு பாசிடிவ்னு வந்துருக்கு.. "

"ஓகே மா.. நீ 108க்கு கால் பண்ணு. அவுங்க வந்து பிக்அப் பண்ணிக்குவாங்க மா"

"இல்லண்ணா... எங்க வீடு காம்பவுண்ட் வீட்டுல ஒன்னு.. 108 வந்து நின்னா பெரிய சங்கடமா போய்டும்னா.. நாங்க ஆட்டோல போய் இறங்கிக்கிடறோம்னா..108 வேணாம்."

மேலே கூறியவை நான் தினமும் கேட்கும் கதைகள். அப்பட்டமான உண்மைகள். கொரோனா தரும் முக்கியமான பிரச்சனை
சமூகம் நம் மீது செலுத்தும் உளவியல் தாக்குதல் தான்.

ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டில் கொரோனா வந்துவிட்டால்
மற்ற வீடுகளில் இருப்பவர்கள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். என்னவோ மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லாதது போன்றும் அல்லது சிறு மனித அலட்சியத்திற்கு கூட இடம் தராதவர்கள் போன்றும் நடந்து கொள்கிறார்கள்

imageஇப்படியாக தள்ளிவைத்தல், புறக்கணித்தல், பழிசொல்லல், குற்றம் சுமத்தல், கேலிப்பொருளாக்குதல் என்று பல ரூபங்களில் சமூகம் கொரோனா தொற்று கண்டவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நடத்தி வருவதைக் காண முடிகிறது.

சமூகம் புரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகளை இங்கு உரைக்கிறேன்

 கொரோனா தொற்று என்பது சுவாசப்பாதை மூலம் எளிதில் பரவும் ஒரு வைரஸ் தொற்று. இது எப்படி சீசனல் வைரஸ் காய்ச்சல் பரவுமோ அதை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது.  என்னதான் அத்தனை பாதுகாப்பு காரியங்கள் செய்தாலும் நம்மையும் அறியாமல் தொற்றைப்பெறும் வாய்ப்பு நம் அனைவருக்கும் உண்டு.

தொற்றைப்பெற்றவர் அதை அறிந்து பெறவில்லை. அதை தான் அறிந்து பிறருக்கு பரப்பவும் இல்லை. எனவே அவரை குற்றவாளி போல் பார்ப்பது மிகப்பெரும் தவறு.

ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தாலும் அந்த வீடு தனிமைப்படுத்தப்படுகிறது.அந்த வீட்டை சுற்றியுள்ள வீடுகள் நோய் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன. இது தொற்று மேலும் பரவி விடக்கூடாது என்பதற்கு செய்யும் நடவடிக்கை மட்டுமே.
நோய் தொற்று கண்டவர் வீட்டை கொலைக் குற்றம் செய்த குற்றவாளியின் வீட்டை அணுகுவது போலப் பார்ப்பது தவறு.

நோய் தொற்று கண்டவரின் புகைப்படம்/ வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்/ அவர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வீடியோ போன்ற அடையாளங்களை சமூக வளைதளங்களில் பகிர்வது மிகப்பெரும் தவறு. இன்று நாம் என்ன செய்கிறோமோ? அது நாளை நமக்கும் நடக்கும் என்ற எண்ணமே இது போன்ற காரியங்களை செய்யாமல் நம்மை தடுக்கும்.

கொரோனா தொற்று குறித்து உண்மையான அறிவை வளர்த்துக் கொள்வது / விழிப்புணர்வு பெறுவது மிகவும் முக்கியம். அப்போது தான் தேவையற்ற பயம் நம்மை விட்டு விலகும்

அந்த சூழ்நிலை நமக்கு வந்து நாம் அந்த தவறை செய்யாத வரை உலகின் அனைவரும் குற்றம் செய்யாதவர்கள் தான் என்பார்கள். அது போல பரிசோதனை செய்யாதவரை யார் பாசிடிவ்? யார் நெகடிவ்? என்று உறுதியாக கூற முடியாது.

எப்போதும் அண்டை வீட்டாரை விட்டுக்கொடுக்கக் கூடாது. அவருடன் நிற்க வேண்டும். அண்டை வீட்டின் தலைவர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களின் உணவு மற்றும் இதர தேவையை தீர்க்கும் கடமை நமது பொறுப்பாகிறது. அவர் மீண்டும் நோய் குணமாகி வீட்டிற்கு வரும் வரை நாம் தான் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நோய் ஏழை/ பணக்காரன் / சாதி/ சமயம் பார்க்காத சமூக நீதிக்காவலனாக இருக்கிறது. எனவே நாமே செயற்கையாக உருவாக்கி வைத்துக்கொண்டுள்ள இந்த மேடுபள்ளங்களை சமப்படுத்தும் வாய்ப்பாக இதைக்கொள்ள வேண்டும். வேறுபாட்டை இன்னும் இன்னும் அதிகப்படுத்தினால் நம்மால் கொரோனாவை வெல்வது மிகக்கடினமாகும்

சமூகத்தில் பரவும் நோய்க்கு சமூகத்திடமே தீர்வு உள்ளது. அன்பைக்கொண்டு எந்த நோயையும் வென்றிட முடியும். அன்பு செய்வோம்; அருவருப்பதை நிறுத்துவோம்’’ என்கிறார் அவர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்