Published : 08,Jul 2020 03:44 PM
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்டவை எத்தனை?: நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995-ம் ஆண்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாதம்4500 ரூபாய் நிவாரணத் தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டடி மனை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கொலையானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, நிவாரண நிதி மட்டும் வழங்கியதாகவும், பிற நிவாரணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2001 முதல் 2015 வரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 363 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோருக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்பது குறித்தும் அவர்களில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.