Published : 28,May 2020 06:34 AM
ட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...?

எங்களது ஊழியர்களை விட்டுவிடுங்கள் என அமெரிக்க அதிபருக்கு, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என கலிபோர்னியா மாகாண ஆளுநர் தெரிவித்தார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்மாகாண ஆளுநர் மே 8 ஆம் தேதி வாக்குரிமை உள்ளவர்களுக்கு வாக்குச்சீட்டுகளை அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ தபால் வாக்குச்சீட்டுகள் மூலம் மோசடி நிகழலாம் என்றும் கலிபோர்னியா அரசு வாக்குரிமை இல்லாதவர்களுக்கும் வாக்குச்சீட்டுகளை வழங்குகிறது என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தனியார் நாளிதழ்கள் பொய்யானது என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டின. அந்தத் தகவல்களின் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் ட்ரம்பின் பதிவை போலியானது எனக் கூறியது. இதனால் கோபமைடைந்த ட்ரம்ப் அமெரிக்க அரசியிலில் ட்விட்டர் நிறுவனம் தலையிடுவதாகவும் அதை அதிபராக தான் அனுமதிக்க இயலாது என கூறினார்.
இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம் “ ட்ரம்பின் பதிவு ட்விட்டர் விதிமுறைகளை மீறாவிட்டாலும், அவர் பதிவிட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கிலேயே நாளிதழ்கள் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில்தான் அந்தப் பதிவு போலியானது என ட்விட்டர் கூறியது” என விளக்கம் அளித்தது.
இதனைத்தொடர்ந்து கூறிய ட்ரம்ப், நாங்கள் கூறியது சரியானது. எனவே இது குறித்த நடவடிக்கை பெரிதாக இருக்கும் எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி “ ட்விட்டர் நிறுவனத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பானவர் ஒருவர் இருக்கிறார். அவர் நான் தான். ஆகையால் தயவு செய்து எங்களது ஊழியர்களை விட்டு விடுங்கள். நாங்கள் உலகமெங்கும் நடக்கும் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சுட்டிக்காட்டுவோம். அதேசமயம் எங்கள் தவறுகளை ஒத்துக்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
Fact check: there is someone ultimately accountable for our actions as a company, and that’s me. Please leave our employees out of this. We’ll continue to point out incorrect or disputed information about elections globally. And we will admit to and own any mistakes we make.
— jack (@jack) May 28, 2020