Published : 15,Mar 2020 05:27 AM
‘யுவன்+சந்தோஷ்+அனிருத்’: மாஸ்டர் ஆல்பத்தில் 3 இசை மாஸ்டர்கள்

விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. அதுவும் ரஜினிகாந்த் பேட்டி அளித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, அந்த நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வெறித்தனமான வரிகள்.. மிரட்டும் "மாஸ்டர்" வாத்தி ரெய்டு பாடல்
மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' ஆகிய படங்களைப் போன்று ரசிகர்கள் படை சூழ இசை வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. காரணம், கொரோனா அச்சம். இந்த விழாவில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. ஆனாலும், இந்த இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதனால், நேரலையில் இசை வெளியீட்டை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் இந்த ஆர்வத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. சமீப காலமாக இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சு சற்றே அரசியல் கலந்ததாக இருந்து வருவதுதான். அதுவும் பிகில் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக் கதை சொல்லி ஆளும் அரசையே மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். அந்த வகையில், சமீப காலமாக பிகில் படம் தொடர்பாக விஜய் உள்ளிட்ட பலரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிலும், நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த போது, அங்கு சென்ற வருமான வரித்துறையினர் அவரை அங்கிருந்து கையோடு சென்னைக்கு அழைத்து வந்தனர். இதனையெல்லாம் குறித்து விஜய் பேச வாய்ப்புள்ளதாக ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதுகிறதா ‘கேஜிஎஃப்2’?
இதுஒருபுறம் இருக்க, ஏற்கனவே குட்டிக்கதை, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டதே, அப்புறம் எதற்கு இசை வெளியீட்டு விழா என்ற கேள்வியும் இருந்து வந்தது. அதற்கு ஏற்றார்போல், தயாரிப்பு நிறுவனம் தற்போது உற்சாகமாக செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டில்தான் சர்ப்ரைஸ் இருக்கிறது.
அதாவது, மாஸ்டர் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர். உண்மையில் இது ரசிகர்களுக்கு நல்ல சர்ப்ரைஸ் தான். அத்துடன், படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக மாஸ்டர் டிராக்கில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பீட் ஆஃப் மாஸ்டர் என்ற இன்ஸ்ட்ருமெண்டலும் இடம்பெற்றுள்ளது. 'அந்த கண்ண பாக்காத' என்ற பாடலை யுவனும், 'பொலக்கட்டும் பர பர' என்ற பாடலை சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர். இருப்பினும், இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.