Published : 27,Feb 2020 10:14 AM
டெல்லி வன்முறைக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் - பிரகாஷ் ஜவடேகர்

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், “சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல், பிரியங்கா நடந்து கொள்கின்றனர். கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.
கொலீஜியம் பரிந்துரையின் படியே உச்சநீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். வடகிழக்கு டெல்லி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வன்முறை தொடர்பாக கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.
வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..!
டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.