மகன்களை சமாளிக்க பேரனுக்கு சீட்டு; அதேபேரன் வைத்த வேட்டு; சரிகிறதா தேவகவுடாவின் அரசியல் சாம்ராஜ்யம்?

மகன்களை சமாளிக்க பேரனுக்கு சீட்டு; அதேபேரன் வைத்த வேட்டு; சரிகிறதா தேவகவுடாவின் அரசியல் சாம்ராஜ்யம்?
hd devagowda, prajwal
hd devagowda, prajwalpt web

“பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோவால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் பிரஜ்வல் தவறு செய்து இருப்பார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் விமர்சித்து சிலர் பேசுகின்றனர். இதனால் 19 எம்.எல்.ஏக்களா அல்லது பிரஜ்வலா என்பதை, கட்சி தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் . ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் கொள்கையை காப்பாற்றுவதன் மூலம், எங்களை தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” முன்னாள் பிரதமரும் கர்நாடகாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான தேவகவுடாவுக்கு மதஜ எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கை இது.

பிரஜ்வல்
பிரஜ்வல்pt web

தன்னால் உருவாக்கப்பட்ட கட்சியில், தன்னால் சீட் வழங்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர்கள் உங்கள் மகனையும் பேரனையும் கட்சியை விட்டு நீக்குங்கள்; மானம் போகிறது என கோரிக்கை வைத்தபோது கலங்கித்தான் போயிருப்பார் தேவகவுடா. அதைவிட, மகன்களுக்கு இடையிலான வாரிசு யுத்தத்தைச் சமாளிக்க, பேரனான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தன் தொகுதியை விட்டுத்தந்த தேவகவுடா, அதே பேரனால், இதுவரை கட்டிக்காத்த அரசியல் கௌரவமும் தன் கட்சியின் அரசியல் எதிர்காலமும் அந்தரத்தில் ஊசலாடும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

பழைய மைசூர் மாகாணத்தில் ஹர்தனகள்ளி எனும் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தேவகவுடா. டிப்ளமோ சிவில் படித்து பொறியாளராக இருந்த தேவகவுடா தன் அரசியல் பயணத்தை தொடங்கியது காங்கிரஸ் கட்சியில்தான். எமெர்ஜென்சியின்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றினார் தேவகவுடா. தொடர்ச்சியாக, வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியை உருவாக்கியதில் அவரின் பங்கு முக்கியமானது. ஜனதா தளம் கட்சி முடிவுக்கு வர, 1999-ல் தன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எனும் கட்சியை உருவாக்கினார் தேவகவுடா. தற்போது அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக அவரே உள்ளார். அவருடைய மகன் குமாரசாமி மாநிலத் தலைவராக இருக்கிறார். தற்போதைய கர்நாடகா முதல்வரான சித்தராமையாகூட, இந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்தான்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்பாக ஹோலேநரசீப்புரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏவானவர் தேவகவுடா. தொடர்ச்சியாக, எம்.ல்.ஏ. அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துவந்த தேவகவுடா 1994-ம் ஆண்டில் ஜனதா கட்சியின் சார்பில் கர்நாடகாவின் முதல்வராக அரியணையில் ஏறினார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அரசியல் உச்சத்துக்குச் சென்றார் தேவகவுடா. ஆம், 1996-ல் வாஜ்பாய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 16 நாள்களில் ஆட்சியைப் பறிகொடுக்க, காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியாவின் 11-வது பிரதமராக தேவகவுடா அரியணை ஏறினார். தொடர்ச்சியாக, அதற்குப்பிறகு மாநில அரசியலில் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடா போட்டியிட்டதே இல்லை. மாநில அளவில் அந்தக் கட்சிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும், தன் மகன் குமாரசாமியைத்தான் முதல்வராக்கினார் தேவகவுடா.

பிரதமராக ஓராண்டுக்கும் குறைவாகத்தான் பதவியில் இருந்தார். காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொண்டதால், ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். ஆனால், தேவகவுடாவின் பிரதமர் வேட்கை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. 1998-ல் இருந்து கடைசியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார் தேவகவுடா. அதிலும் பெரும்பாலும் 2014 வரையிலும்கூட தனது சமூகமான ஒக்கலிகா சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள, ஹசன் தொகுதியில்தான் போட்டியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் இருந்து இதுவரை ஆறு முறை எம்.பியும் ஆகியிருக்கிறார்

கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 37 இடங்களில் மட்டும் வென்றிருந்தாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு. குமாரசாமி இரண்டாவது முறையாக கர்நாடகா முதல்வரானார். தேவகவுடாவின் மற்றொரு மகனும் தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவருமான ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சர். இரண்டு மகன்களுக்கும் இடையில் கட்சிக்குள் ஈகோ யுத்தம் கொளுந்துவிட்டு எரிந்தது. அதைச் சமாளிக்க பேரன்களை அரசியல் களத்தில் களறமிறக்கினார் தேவகவுடா. குமாரசாமியின் மகனான நிகில் குமாரசாமியை மாண்டியா தொகுதியிலும் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணாவை ஹசன் தொகுதியிலும் களமிறக்கினார்.

நிகில் குமாரசாமி, பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட நடிகை சுமலதாவிடம் தோல்வியைத்தழுவ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மூத்த தலைவர் மஞ்சுவைவிட 1,41,224 வாக்குகள் அதிகம் பெற்று எம்.பியானார் பிரஜ்வல் ரேவண்ணா. ஆனால், பேரனுக்காக தொகுதி மாறிய தேவகவுடா தோற்றுப்போனார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என பிரஜ்வல் ரேவண்ணாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023 செம்டம்பர் 1-ம் தேதி அவர் எம்.பியாக வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தது கர்நாடக உயர்நீதிமன்றம். தொடர்ந்து சில நாள்களிலேயே அது நிறுத்தியும் வைக்கப்பட்டது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த மஜத, 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறையும், ஹசன் தொகுதியில் போட்டியிட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏப்ரல் 26-ம் தேதி ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு. ஆனால்,அதற்கு முந்தைய நாள் ஹசன் தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் வெளியாகின.

‘பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்’ என்ற பெயரில் 300 பாலியல் வீடியோக்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டன. அடுத்த சில மணி நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,800-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின.

சிறுமி தொடங்கி முதிய பெண்கள் வரை தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், தனது கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் என்று தொடங்கி, அரசுப் பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் வரை அனைவரிடமும் தனது பாலியல் வக்கிரங்களைக் காட்டியுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. அந்த பாலியல் காட்சிகளை அவரே வீடியோவும் எடுத்திருக்கிறார். அவரின் நண்பர் மூலமாக அவரின் ஓட்டுநருக்குச் சென்று ஹசன் மட்டுமல்லாது கர்நாடகா முழுவதுமே பரவியிருக்கிறது. அவரின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதுமிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. மகளிர் ஆணையத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.

குமாரசாமி, பிரஜ்வால்
குமாரசாமி, பிரஜ்வால் pt web

கட்சியை விட்டு நீக்கவேண்டும் என எழுந்த கோரிக்கையின்படி, நேற்று மஜதவின் செயற்குழு கூட்டப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினரின் அறிக்கை தாக்கல் செய்யும் வரை சஸ்பெண்ட் செய்வது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்.

தன்னுடைய அரசியல் பயணத்தில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறார் தேவகவுடா.., 2023 தேர்தலுக்கு முன்புவரை, தேவகவுடாவின் மகன் குமாரசாமி, பாஜகவை, ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்ததைப்போல எந்தத் தலைவரும் விமர்சித்ததில்லை.., அதுமட்டுமல்ல, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்கிற பெயரோடு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

ஒவ்வொரு தேர்தலின்போது வாரிசுகளின் சீட்டு மல்லுக்கட்டுகளால் கசக்கி பிழியப்பட்டிருக்கிறார் தேவகவுடா. தன் மகன் குமாரசாமி நடிகை குட்டி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்தபோதும் இதுபோல பல விமர்சனங்கள் வரத்தான் செய்தது. ஆனால், அதையெல்லாம் சமாளித்த தேவகவுடா, தற்போது பேரனால் தன் இமேஜுக்கும் கட்சியின் எதிர்காலத்துக்கும் முன் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி எவ்வளவு ஆபத்தானது என்பதை நன்கறிவார்.

பிரஜ்வால் ரேவண்ணா
பிரஜ்வால் ரேவண்ணாட்விட்டர்

ஜெர்மனிக்குத் தப்பிச் சென்று ``வாய்மையே வெல்லும்’’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிந்திருக்கிறார் இவ்வளவு சிக்கலுக்கும் காரணமான பிரஜ்வல் ரேவண்ணா. ஆனால், தன் மகன்களைச் சமாளிக்க, பொறுப்பில்லாத பேரனைக் அரசியலில் களமிறக்கியது தனக்குத்தானே வைத்துக்கொண்ட வேட்டு என கண்டிப்பாக தேவகவுடா யோசிக்காமல் இருந்திருக்கமாட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com