127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!

கோத்ரேஜ்-இன் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்நிறுவனத்தின் குழுமம் இரண்டாக உடைந்திருப்பது பேசுபொருளாகி வருகிறது.
கோத்ரேஜ்
கோத்ரேஜ்ட்விட்டர்

வணிகத் துறையில் 127 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களில் ஒன்று கோத்ரேஜ் (godrej). இந்த நிறுவனம் குடும்பத்திற்கான அத்தியாவசியத் தேவைகளின் தயாரிப்புகள் முதல் ரியல் எஸ்டேட் வரை கால்பதித்து வருகிறது.

இந்த நிலையில்தான் கோத்ரேஜ் என்ற வணிகக் கோட்டை இன்று இரண்டாக உடைந்துள்ளது. 1897-ல் அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் கோத்ரேஜ் குழுமம். பூட்டுத் தொழில் மூலம் வர்த்தகத்தில் வெற்றிபெற்ற இந்நிறுவனம், தற்போது பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களிலும் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. தற்போது இக்குழுமத்தின் பங்குதாரர்களாக 82 வயதான ஆதி கோத்ரேஜ் மற்றும் அவருடைய 73 வயதான சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் உள்ளனர்.

இது தவிர, ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோரின் சித்தப்பா வாரிசுகளான ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோரும் இந்நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளனர்.

தற்போது ஆதி கோத்ரேஜ்-இன் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வணிக நிறுவனமும் இரண்டாக உடைந்துள்ளது. ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் ஒருபுறமும், மறுபுறம் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் என இருபிரிவாகப் பிரிந்துள்ளனர். இதன்மூலம், ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். அடுத்தப் பிரிவு, பட்டியலிடப்படாத கோத்ரேஜ் அண்ட் பொயிஸ், அதன் துணை நிறுவனங்கள், மும்பையில் முக்கிய இடங்களை தங்கள் வசமாக்கியிருக்கிறார்கள்.

இதையும் படிக்க: கான்பூர்| விவாகரத்து பெற்ற மகள்.. மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை.. ஆச்சர்யப்பட்ட ஊர்.. #ViralVideo

கோத்ரேஜ்
புகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டூடியோவை கோத்ரெஜ்-க்கு விற்றது கபூர் குடும்பம்!

அதாவது கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமமான, கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கோத்ரேஜ் ப்ராபர்ட்டீஸ், கோத்ரேஜ் அக்ரோவெட் மற்றும் ஆஸ்டெக் லைப்சயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாதீர் கோத்ரேஜ் தலைமையில் இனி செயல்படும். மேலும் நிர்வாகக் குழுவிலும், பொறுப்பிலும் ஆதி, நாதீர் மற்றும் அவர்களின் வாரிசுகள் அடங்கிய குடும்பத்தினர் இருப்பர். மற்றொரு பிரிவான கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தில் ஏரோஸ்பேஸ் மற்றும் விமானப் போக்குவரத்து முதல் பாதுகாப்பு, பர்னிச்சர் மற்றும் ஐடி மென்பொருள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் கோத்ரேஜ் & பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஜாம்ஷெட் கோத்ரேஜ் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலமும் இவர்கள் வசமானது.

1897இல் வழக்கறிஞராக இருந்த தொழிலதிபராக மாறிய அர்தேஷிர் கோத்ரேஜ்-க்கு வாரிசுகள் இல்லை. இதையடுத்து, இக்குழுமம் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷா (Pirojsha) கைக்குச் சென்றது. இவருக்கு சோராப், தோசா, பர்ஜோர், நேவல் என மொத்தம் 4 குழந்தைகள். இதில் இக்குழுவின் தலைமையானது பர்ஜோர் (ஆதி மற்றும் நாதிர்) மற்றும் நேவல் (ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா) ஆகியோரின் குழந்தைகளுக்கு வந்தது. இதில் சோராப்-க்கு குழந்தைகள் இல்லை. தோசாவுக்கு ஒரு குழந்தை (ரிஷாத்). இதனால் மொத்த கோத்ரேஜ் குழுமமும் பர்ஜோர் மற்றும் நேவல் ஆகியோரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தற்போது இவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில்தான் வர்த்தகம் இரண்டாக உடைந்திருக்கிறது.

இதையும் படிக்க: 2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com