Published : 25,Feb 2020 01:35 PM
தொடரும் டெல்லி வன்முறை சம்பவங்கள்.. - கவனிக்கத் தவறியதா மத்திய அரசு..?

இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சரானார். அப்போது பேசிய கெஜ்ரிவால் டெல்லியின் வளர்ச்சி பணிகளுக்காக பிரதமரின் உதவியை நாடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை நாடெங்கும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
“மதச் சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாகப் பாடுபடுகிறது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, சிஏஏவால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதை எடுத்துக்கூறுங்கள் என பாஜகவினருக்கு ஆணையிட்டது. அதன்படி சிஏஏவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகின்றன. இவ்வாறு ஆரம்பித்த பேரணியும் போராட்டமும் தற்போது கலவரங்களாக மாறி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் நேற்று முன் தினம் தீவிர நிலையை எட்டியது. இருபிரிவினரும், ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தடுக்க சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று நடந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லியின் வடகிழக்குப் பகுதியான பிரஹம்புரி மற்றும் மஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் மோதல் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்த வன்முறை சம்பவங்களை தடுக்க முடியாமல் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சரும், துணைநிலை ஆளுநரும் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவ்வளவு நேரம் வாய் திறக்காத மத்திய அரசு இன்று மதியம்தான் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியது. அதன்பின்னரே வன்முறைச் சம்பவங்களை தடுக்க துணை ராணுவப்படை களமிறக்கப்படுகிறது.
நெருங்கும் ஐபிஎல் 2020 : ஆர்.சி.பி அணியின் பலம்; பலவீனம் என்ன?
டெல்லியின் பெரும்பாலான இடங்களில் நெட்வொர்க்குகள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவர் எழுப்பி ஸ்லம் ஏரியாவை மறைப்பது போல், இத்தகைய வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் ட்ரம்ப் வருகை மக்கள் கண்களில் படாதவாறு மறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களும் ட்ரம்ப் வருகை குறித்தும், அவர் செல்லும் இடங்கள் குறித்தும், அவர் பறக்கும் விமானம் குறித்துமே பெரும்பாலான செய்திகள் வெளியாகி வருகின்றன.
ட்ரம்ப்பை மோடியும் மோடியை ட்ரம்ப்பும் மாறி மாறி புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆனால் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இறுதியாக ட்ரம்ப் இந்தியாவை விட்டு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பியதால் பதில் அளித்தார். அதுவும் இந்தியாவில் மதச்சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக மோடி கூறியதாகவும் மதச் சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாகப் பாடுபட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். பல்வேறு மக்களிடம் பேசியதில் மதச் சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்துகள் வரவில்லை என தெரிவித்த ட்ரம்ப் சிஏஏ குறித்து மோடியிடம் பேசவில்லை என்றார்.
எஸ்.பி.ஐ. வங்கியின் 30 லாக்கர்களை உடைத்து 500 சவரன் கொள்ளை
ட்ரம்ப் வருகையிலும் அவரை புகழ்வதிலும், அவரை திருப்பி அனுப்புவதிலும் கவனம் செலுத்திய மத்திய அரசு டெல்லியின் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதை கவனிக்க தவறியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு முதலமைச்சர் உதவிக்கேட்ட பிறகே மத்திய அரசு உதவ வேண்டும் என்ற அளவில்தான் மத்திய அரசு செயல்படுகிறதா எனவும் மூன்று நாட்களுக்கு பிறகு துணை ராணுவப்படையைக் களமிறக்கிய மத்திய அரசு கலவரம் ஆரம்பிக்கும் முன்பே ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.