Published : 03,Jun 2017 02:38 AM

சாம்பியன்ஸ் கோப்பை: மழையின் ஆட்டத்தால் ஆளுக்கொரு புள்ளி!

Champions-Trophy--Australia--New-zealand-match-abandoned-due-to-rain

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் நேற்று நடந்த 2-வது லீக்கில் ஆடின.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்ட்டின் கப்திலும், ரோஞ்சியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்தது. கப்தில் 26 ரன்களில் வெளியேற ரோஞ்சியும், கேப்டன் வில்லியம்சனும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். பிட்ச் பேட்டிங்கு ஏற்ற வகையில் இருந்ததால், பந்து புண்டரிக்கு எளிதாகச் சென்றது. 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, ரோஞ்சி அதிரடி ஆட்டத்தில் இறங்கி, 65 ரன்களில் (43 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ராஸ் டெய்லரும் வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, ரன் ரேட் 6 ரன்களுக்கு மேலாக சென்றது. ஸ்கோர் 216 ரன்களை எட்டிய போது, டெய்லர் 46 ரன்களில் (58 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வில்லியம்சன் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். 97 பந்துகளில் அவர் இந்த சதத்தை எடுத்த அவர், எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனார். 45 ஓவர்களில் நியூசிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி.தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மழை மீண்டும் பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலியா 33 ஓவர்களில் 235 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் டேவிட் வார்னர் (18 ரன்), ஆரோன் பிஞ்ச் (8 ரன்), ஹென்ரிக்ஸ் (18 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களுடன் ஊசலாடிக்கொண்டிருந்த போது மழை மீண்டும் ஆடியது. இடைவிடாது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்