Published : 21,Dec 2019 02:04 PM

கச்சிதமான ‘சிஎஸ்கே டீம்’ - தோனி போடும் கணக்கு..!

2020-IPL--CSK--Team---Dhoni-s-Master-Plan

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் இப்போதே அதிகரித்துவிட்டன. ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு தற்போதே வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டனர். அதனை உறுதி செய்யும் வகையில் ஐபிஎல் வீரர்கள் தேர்வின் ஏலம் அனல் பறக்க நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை தாங்கள் செய்த தவறை இந்த முறை செய்துவிடக்கூடாது என்பதில் அனைத்து கேப்டன்களும் கவனத்துடன் உள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளுக்காக பெரும் திட்டத்தை போட்டிருக்கிறார்.

கடந்த முறை ஆரம்பம் முதலே வெற்றி வாகை சூடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி போட்டி வரை சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் இந்த முறை கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என தோனி உறுதியாக இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், தோனி எழுதிக்கொடுத்த லிஸ்டில் உள்ள வீரர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விலைக்கு வாங்கியுள்ளது. இதனை அணியின் நிர்வாகமே உறுதியும் செய்துள்ளது.

image

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு பெரும் குழப்படியாக அமைந்தது பவுலிங். இறுதிப் போட்டி வரையிலும் ஒரு நிலையான பவுலிங்கை சென்னை அணியால் நியமிக்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர் மட்டுமே சிறந்த பங்களிப்பை கொடுத்தார். காயம் ஏற்பட்ட மோகித் ஷர்மா அதிலிருந்து மீளவேயில்லை. இதனால் ஷர்துல் தகூர் மற்றும் ஸ்காட் குஜ்ஜிலிஜின் ஆகியோர் மாறி மாறி அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இருவருமே ரன்களை வாரிக்கொடுத்ததால் தோனிக்கு தலைவலியாக அமைந்தது.

இதனால் இந்த முறை பவுலிங்கை வலுப்படுத்த வேண்டும் என்பதிலும், அணியில் புதிய பவுலர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பதிலும் தோனி தெளிவாக இருந்தார். இதனால் அணிக்கு தேவையான பணம் கையிருப்பு வேண்டும் என்பதற்காக, ஏலத்திற்கு முன்பே மோகித் ஷர்மா, சாம் பில்லிங்க்ஸ், டேவிட் வில்லே, துருவ் ஷெராய், ஸ்காட் குஜ்ஜிலின் மற்றும் சைதன்யா பிஷ்நோய் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

image

இதைத்தொடர்ந்து நடந்த ஏலத்தில் பியூஷ் சாவ்லா, ஜாஸ் ஹஸ்ல்வுட், சாய் கிஷோர் மற்றும் சாம் குரான் ஆகியோர் சென்னை அணியால் வாங்கப்பட்டனர். இந்த 4 பேருமே பவுலர்கள் தான். இதில் சாவ்லா மற்றும் சாய் ஆகிய இருவரும் ஸ்பின் பவுலர்கள். சாம் மற்றும் ஜாஸ் ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்கள். இவர்களின் வருகையால் சென்னை அணியில் பவுலிங்கில் இருந்த குழப்பம் தீரும் என தோனி கணக்கு போட்டிருக்கிறார்.

image

இந்த புதிய வீரர்களையும் சேர்த்து கணக்கிட்டு பார்த்தால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் சென்னை அணியில், தோனி, வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டு பிளசிஸ், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தஹிர், பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர், ஜாஸ் ஹஸ்ல்வுட், சாம் குரான் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக இடையிடையே களமிறங்குவார்கள் என தெரிகிறது. எப்படி இருந்தாலும் அதே சீனியர் அணியாகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. இந்த சீனியர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்