Published : 12,Dec 2019 11:49 AM
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் கைது

கரூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, கட்டாய திருமணம் செய்து வைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கடவூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த தன்னுடைய உறவினர் மூக்கனிடம் ரூ.15,000 வாங்கியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கல் பிரச்னையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தையின் படி, மூக்கன் மகன் சரவணகுமார் (23) என்பவருக்கு கடவூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் சிறுமி மறுக்கவே, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.
இந்த கட்டாய திருமணத்தை சிறுமியின் தந்தை, தாய், சரவண குமாரின் பெற்றோர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கட்டாயமாக செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை திருமணம் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் சரவணகுமார், பெருமாள், வீரமணி, மூக்கன், அஞ்சலம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,