Published : 25,Oct 2019 12:57 PM
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத 19 லட்சத்து 80 ஆயிரத்து 105 ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை அம்பத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 300 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலத்திலிருந்து 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி, சென்னை, ராமநாதபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 17 இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.