[X] Close

’அசுரன்’ அதகள ஹிட்: நாவல்களைத் தேடும் கோடம்பாக்கம்!

Asuran-effect--tamil-movie-directors-searchig-Novels

’அசுரன்’ ஹிட்டானதை அடுத்து தமிழ் சினிமா இயக்குநர்கள், நாவல்களை படமாக்க ஆயத்தமாகி வருகின்றனர். 


Advertisement

ஹாலிவுட்டில் 90 சதவிகித படங்கள், நாவல்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. அல்லது அதன் தாக்கத்தில் எடுக்கப்படுகின்றன. இன்று பேசப்படும், பெரும்பாலான உலக படங்களின் கதைகள் நாவல்களில் இருந்து உருவானதுதான். ஆனால், உலகப் படங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது இறங்கியிருந்தாலும் முழுமையாக, நாவல்களைப் படமாக்க முன் வரவில்லை. ’ஏன்னா, நம்ம ரசிகர்கள், நாலு பாட்டு, நாலு பைட், ஆக்‌ஷன் கிளை மாக்ஸுக்கு பழக்கப்பட்டவங்க. அதை மாத்தினா படம் ஓடாது’ என்றே கூறப்பட்டது.


Advertisement

ஆனாலும் அகிலனின் ’பாவை விளக்கு’, கொத்தமங்கலம் சுப்புவின் ’தில்லானா மோகனாம்பாள்’, மகரிஷி எழுதிய ’புவனா ஒரு கேள்விக் குறி’, ஜெயகாந்தனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’, ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, சுஜாதாவின் ’காயத்ரி’, ’விக்ரம்’, சிவசங்கரியின் ’ஒரு சிங்கம் முயலாகிறது’, ’குட்டி’, அனுராதா ரமணனின் ’ஒரு வீடு இரு வாசல்’, ’சிறை’,  ’சொல்ல மறந்த கதை’ (நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்) உட்பட சில நாவல்கள் படமாகி இருக்கின்றன.

சமீபத்தில், சந்திரகுமாரின் ’லாக்கப்’ நாவலை ’விசாரணை’ என்ற பெயரில் படமாக்கினார் வெற்றிமாறன். அந்தப் படம் கவனிப்பைப் பெற்றதை அடுத்து பூமணியின் ’வெக்கை’ நாவலை தனுஷ் நடிப்பில் ’அசுரன்’ ஆக்கினார். படம் சூப்பர் ஹிட். இந்த ஹிட்-டை அடுத்து தமிழ் சினிமா இயக்குநர்களும் ஹீரோக்களும் படமாக்குவதற்காக நல்ல நாவல்களைத் தேடி வருகின்றனர்.

இப்போது இரா.பாரதிநாதன் எழுதிய ’தறி’ நாவலை ’சங்கத் தலைவன்’ என்ற பெயரில் தயாரிக்கிறார் வெற்றி மாறன். இரா. முருகவேளின் ’மிளிர்கல்’ உட்பட சில நாவல்கள் இப்போது படமாகி வருகின்றன. 


Advertisement

இந்த போக்கு ஆரோக்கியமானதுதானா? என்று தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, ’’இது ஆரோக்கியமான விஷயம்தான். எந்த நாவலாக இருந்தாலும் அதில் யுனிவர்சல் தீம் இருக்கணும். ’அசுரன்’ படத்துல ஓர் அப்பா, மகனை காப்பாற்றப் போராடறது கதை. இது நம்ம வாழ்க்கையில இருந்து எடுக்கப்பட்ட கதை. இப்படி ஒரு யுனிவர்சல் தீம் இருந்தா, நாவல்களும் ஹிட்டாகும் அப்படிங்கறதுக்கு அசுரன் சாட்சி’’ என்கிறார். 

’’பருத்திவீரன், சுப்ரமணியபுரம், அங்காடித் தெரு, மைனா மாதிரியான வாழ்க்கை சார்ந்த படங்களுக்குப் பிறகு இப்போதான் விசாரணை, அசுரன் மாதிரியான படங்கள் வெளியாகும் சூழல், நம் சினிமாவுல நிலவுகிறது’’ என்கிறார் எழுத்தாளரும் கதை வசனக் கர்த்தாவுமான அஜயன் பாலா.

’’அதாவது ஒரு வாழ்க்கை, முழுமையான சினிமாவா வர்றதுக்கு பல வருடம், தமிழ் ரசிகன் காத்திருக்க வேண்டியிருக்கு. பேய், காமெடி, அரசியல் படங்கள்தான் தமிழ் சினிமாவை எப்பவும் ஆக்கிரமிச்சிருக்கு. 

 அட்டக்கத்தி, காக்காமுட்டை, ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை மாதிரி வித்தியாசமான முயற்சிகளை கொண்ட படங்கள் வெற்றி பெற்றாலும் அதை மிகப்பெரிய வெற்றின்னு சொல்ல முடியாது. இந்த வரிசையில ’டூலெட்’ பெரிய முயற்சி. வெளிநாடுகள்ல அந்தப் படம் வாங்கிய விருது அளவுக்கு தமிழ் நாட்டுல கவனிக்கப்படலை. இந்த வகையில, முழுமையா தமிழ் வாழ்க்கையை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள்ல, மிகப்பெரிய வெற்றிப் படங்களா ’விசாரணை’யையும் ’அசுரனை’யும்தான் சொல்ல முடியும்.

’அசுரன்’ ஏற்படுத்திய பாதிப்பில், நாவல்களை தமிழ் சினிமா இயக்குநர்கள் தேடறது வரவேற்கக் கூடியதுதான். ஆனா, அவங்க அதுல வன்முறை, கொலை கொள்ளைகளை தேடுவாங்க. பழிவாங்கும் நாவல்கள் இருக்கான்னுதான் பார்ப்பாங்க. தமிழ்ல வந்திருக்கிற எந்த நாவல்லயும் கதாநாயக பிம்பம் போற்றப்படலை. ஆனாலும் உலக சினிமாவாகும் வாய்ப்புள்ள, சுந்தர ராமசாமியின், ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள், சா. கந்தசாமியின் சாயாவனம், அசோகமித்திரன் ’கரைந்த நிழல்கள்’, பா.சிங்காரத்தின் ’புயலிலே ஒரு தோனி’ உட்பட பல சிறந்த நாவல்கள் தமிழ்ல இருக்கு’’ என்கிறார் அஜயன் பாலா. 


Advertisement

Advertisement
[X] Close