
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி தாமரை மற்றும் பன்னீர் ரோஜாப் பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
அத்திவரதர் வைபவத்தின் 29-ஆவது நாளான இன்று பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சுவாமி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், அப்போது பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூடுதலாக பல இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், இயற்கை மேலாண்மை பாதுகாப்பு குழுவினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் 5 மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 28 நாட்களில் அத்திவரதரை சுமார் 41 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று சுமார் 3 லட்சம் பேர் தரிசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக கூட்டம் காரணமாக 33 பேர்மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 18 பேரும் நேற்றிரவே வீடு திரும்பினர் எனக் கூறப்பட்டுள்ளது.